திங்கள், 25 ஜனவரி, 2016

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

காதலரிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்று நம் தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் கூறுகின்றனர். அவ்வாறு ஒருமித்த கருத்து ஏற்படுவதில் சற்றே மாறுபாடு எழுமாயின் அங்கே காதலர்கள் இடையே ஊடல் ஏற்படுகிறது. கருத்து வேறுபாடு களையப்பட்டு அல்லது உடன்பாட்டுக்கு வந்து ஊடல் தீர்ந்தால் கூடல் ஏற்படுகிறது. அப்போது ஊடலால் ஏற்பட்ட சிறு துன்பமும் மறைந்து மீண்டும் வலுவான கருத்தொருமித்த இன்பம் பிறக்கிறது. 

காதலர்களாயினும் கணவன் மனைவியாயினும் இருவருக்கும் எப்போதும் ஒரே கருத்து எல்லா விஷயங்களிலும் நிலவுவதில்லை. வேறுபாடுகள் எப்பொழுதும் எழக்கூடும். அத்தகைய தருணங்களில் காதலர்களுள் ஒருவர் மற்றவரது உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய மதிப்பளித்து ஏற்றுக்கொள்வது உண்மைக் காதல். அது உயிர் உடலை விட்டுப் பிரியும் வரை மாறாது நிலைபெற்றிருக்க வல்லது. அவ்வாறன்றி ஒருவர் கருத்து வேறுபாடுகளை மற்றவர் ஏற்றுக்கொள்ள மறுக்கையில் அங்கே உடன்பாடு ஏற்படுவதில்லை. அதனால் பிரிவு ஏற்படுகிறது.

சிலப்பதிகார காவியத்தில் கோவலனும் மாதவியும் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டு உடன்பாட்டை எட்டாத சூழ்நிலையில் அவர்களிடையே நிரந்தப் பிரிவு ஏற்பட்டது. ஆயினும் அங்கே கோவலன் கண்ணகியுடன் சேர்ந்து வாழ வழி பிறந்தது. அது காவியம், கதையானதால் அதுகுறித்து சர்ச்சை செய்வது பலன் தராது. 

நிஜ வாழ்வில் காதல் கொண்ட இருவர் கருத்து வேறுபடுகையில் இருவருக்கும் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஊடல் கொண்டு பிரிந்த காதலர் ஒருவரையொருவர் எண்ணி ஒன்றுபட வழியென்று பிறக்கும் என்று ஏங்கி மயங்கி வாடுவதே உண்மைக் காதலர்களின் இயல்பு. 

ஊடலின் காரணமாய் உண்டான காதலியின் பிரிவினால் மனம் துயருற்று வருந்தி ஏங்கும் காதலன் ஒருவன் தன் காதலியை நினைத்து வாடுகிறான்.

ஊடலால் தன்னை விட்டுப் பிரிந்த காதலி தன்னை வந்து சேர வேண்டுமென உளமார வேண்டி அவளிடன் இரைஞ்சுகிறான் அக்காதலன்.  அவனது உணர்வை வார்த்தைகளால் கவிஞர் வடிக்க அதனைத் தேனொழுகும் தன் இனிய குரலில் பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி பாட அங்கே உண்மைக் காதல் உயிர் பெறுகிறது. 

சிறு பாலகனாக இருந்த காலத்தில் (1959) அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன வர்த்தக சேவை எனும் தமிழ் வானொலியில் ஒலிபரப்பக் கேட்டு மகிழ்ந்த அந்தத் தெள்ளமுதப் பாடல் உங்களுக்காக.


திரைப்படம்: அவள் யார்?
இயற்றியவர்:  வித்வான் வே. லட்சுமணன்
இசை:  ராஜேஸ்வர ராவ்
பாடியோர்:  Pandit Panikkrahi பண்டிட் ரகுநாத் பாநிக்ராகி
ஆண்டு: 1959

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே? வா வா!
நான் தேடும் போது நீ ஓடலாமோ?

வாடாத பூவும் மலராத போதே
வாடாத பூவும் மலராத போதே
பாடாது வண்டும் சூடாமலே
பாடாது வண்டும் சூடாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?

ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆறாகப் பாயும் அனுராக தீபம்
ஆனந்தமே தரும் வாழ்வில்
ஆனந்தமே தரும் வாழ்வில்
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
தேனாக உள்ளம் சுவை காண்பதேது?
நீயாக வாராய் நாணாமலே

நான் தேடும் போது நீ ஓடலாமோ?
ஏனுடலோ வெண்ணிலாவே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக