திங்கள், 25 ஜனவரி, 2016

உன்னை நினைக்கையிலே

இவ்வுலக வாழ்விலேயே சொர்க்கம்,நரகம் இரண்டையும் நாம் அனுபவிக்கிறோம். யாரும் இறந்த பின்னர் எங்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பின்னர் சொர்க்கம் போவதைப் பற்றி எண்ணி மயங்கவும் வேண்டாம், நரகம் போவதைப் பற்றி வருந்தவும் வேண்டாம். இறந்த பின் வாழ்வு உண்டு என்போரும் இல்லை என்போரும் தம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவ்வாறு சொல்கின்றரே அல்லாது அறிந்து சொல்வதில்லை. மறு பிறவியிலும், இறந்த பின் எய்தும் சொர்க்க நரகங்களிலும் நம்பிக்கை வைப்போரும் நம்ப மறுப்போறும் இரு சாராருமே அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. தனக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று உளமார ஒத்துக் கொள்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர். 

யாரோ எவ்வாறோ இருக்கட்டும். அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தே எவரும் இவ்வுலகில் நடைபெரும் எல்லா சம்பவங்களிலிருந்தும் பெறும் அனுபவங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.  அவ்வனுபவங்களிலிருந்து கிடைக்கும் இன்பத்தை மனதார உணர்வோர் இவ்வுலகிலேயே சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

வாழ்வில் எவ்வுயிர்க்கும் காதலைப் போன்ற இன்பம் பயக்கும் சொர்க்கம் வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். முதன் முதலில் ஒருவருக்குக் காதல் மலரும் பருவம் இளமை குலுங்கும் வாலிபப் பருவமாக இருப்பதாலேயே காதலின்பம் எல்லையில்லா மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகின்றது. காதலில் முழ்கிய ஒரு வாலிபன் தனது காதலியைப் பற்றி எண்ணுகையிலே காணும் இன்பம் அவனது கற்பனை வளத்திற்கேற்றவாறு சுவை தருகிறது. காதலைப் பற்றிக் கதைகள், காவியங்கள் பல இருந்த போதும் திரைப்படங்களில் உயிரோட்டத்துடன் காதல் காட்சிகளைப் பார்த்து ரசிக்கையில் ஏற்படும் மெய்சிலிர்ப்புக்கு ஈடாகா என்பது அனேகர் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். 

அத்தகைய காதல் காட்சிக்குப் பாடல் இனிமையாக அமைந்து விட்டால் கேட்கவே ஆனந்த பரவசமாக இருக்கும் என்பதில் ஐயமுண்டோ?

கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் கற்பனை வளத்தில் கவினுற உருவாகி, இசை மேதை ஜி. ராமநாதன் அவர்களின் கைவண்ணத்தில் இசையமைந்து தங்கக் குரலோன் டி.எம். சௌந்தரராஜனின் இன்பக் குரலில் பாடல் அமைந்துள்ளதென்றால் அதில் இனிமை பொங்கி வழியும் என்று சொல்லவும் வேண்டுமோ?


திரைப் படம்: கல்யாணிக்கு கல்யாணம் (1959)
இயற்றியவர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்

உன்னை நினைக்கையிலே
உன்னை நினைக்கையிலே 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
பொன்னை உருக்கிய வார்ப்படமே! அன்பு 
பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே!

உன்னை நினைக்கையிலே

வட்டக் கருவிழி மங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆஆ
வட்டக் கருவிழி மங்கையே ஒளி 
கொட்டும் இரவுக்கு தங்கையே!
வட்டக் கருவிழி மங்கையே!
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே இன்பக் 
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே கண்ணே! 
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி
உன்னை நினைக்கையிலே

1 கருத்து:

  1. ஒளி கொட்டும் நிலவுக்கு என்பது இரவுக்கு என்று தவறாக பதிவிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு