செவ்வாய், 30 நவம்பர், 2010

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

எல்லா இயற்கை வளங்களும் நிரம்பப் பெற்றது நம் பாரத நாடு. வடக்கே இமய மலையும் மற்ற மூன்று திசைகளிலும் முப்பெரும் கடல்களும் சூழ்ந்து விளங்கும் ஒரு தீபகற்பம் இந்தியா. நமது நாட்டின் இயற்கை வளங்களில் நாடெங்கும் நீண்டு பரவியிருக்கும் மலைப்பகுதிகளும், அவற்றுடன் இணைந்து பரவியிருக்கும் காடுகளும், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான வற்றாத பல ஜீவ நதிகளுமாகும். இத்தகைய இயற்கை வளங்களின் சிறப்பாலேயே விவசாயத்தில் நமது இந்திய தேசம் முன்னிலை வகிக்கிறது. நம் அனைவரது வாழ்வின் ஜீவாதாரமான உணவுப்பொருட்களை விவசாயத்தின் மூலம் பெறப் பெரிதும் உதவும் நம் நாட்டின் இயற்கை வளங்களை மத்திய மாநில அரசுகளும் மக்களும் இணைந்து செயல்பட்டுப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் அவ்வாறு இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறோமா எனக் கேட்டால் கிடைக்கும் பதில் இல்லை என்பதேயாகும்.

மலைப்பகுதியிலுள்ள காடுகளையும் மரங்களையும் அழித்து தேயிலை பயிரிடுவதும், மரங்களை வெட்டியெடுத்துச் சென்று பல விதமான கட்டுமானப் பணிகளுக்கும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்துவதும், இவற்றுள் பல மலைப்பகுதிகளை அவற்றிலிருக்கும் பாறைகளைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த வெடிவைத்துத் ததகர்த்து அழிப்பதும் விரைவில் காடுகளும் மலைகளும் அழிந்து நம் ஜீவாதாரமே குலைந்து போக வழிவகுக்கும் என்பதை நாம் உணராமல் செயல்படுகிறோம். இத்தகைய அபாயகரமான போக்கினை விடுத்து இயற்கை வளங்களைக் காக்கும் ஆரோக்யமான பாதைக்குத் திரும்புவது நல்லது.

மலைச் சரிவுகள் வலுவிழப்பதால் மலைப் பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படுவதுடன் விபத்துகள் நேர்ந்து உயிர்ச் சேதம் விளையும் ஆபத்தும் உள்ளது. கோடை காலங்களில் நம்மில் பலர் இத்தகைய மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்துடன் மலைகளின் மேல் உள்ள ஊர்கள் பலவற்றில் நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வாழ்வு நிலை சிறக்க வேண்டுமெனில் மலைகளும் மலைகளைச் சேர்ந்த வனப்பகுதிகளும் பாதுகாக்கப் பட வேண்டும்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

திரைப்படம்: முள்ளும் மலரும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1978

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
_________________________

உனது விழியில் எனது பார்வை

தொழில்முறையாகப் பல்வேறு பணிகளின் நிமித்தமாகப் பல ஊர்களுக்குக்குப் பயணம் மேற்கொண்டாலும், நாடு விட்டு நாடு சென்று திரைகடலோடி திரவியம் தேடும் பணியில் ஈடுபட்டாலும் நாம் மேற்கொண்ட பணி நிறைவேறியதும் நம் ஒவ்வொருவரின் மனமும் அடுத்துச் சேர விரும்புவது வீடு எனும் தன் இல்லத்தையே என்பது எல்லோரும் அறிவோம். அது போலவே பாடல்கள் எனும் பண்ணுலகில் பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டு தத்துவ மழையிலும் இசை வெள்ளத்திலும் நனைந்த போதிலும் மீண்டும் மீண்டும் வந்து சேர்வது காதல் எனும் கான மழை பொழியும் பகுதிக்கே.. காதல் நம் அனைவரின் உயிரிலும் ஒன்றிக் கலந்து விளங்குவதாலேயே வாழ்க்கை எனும் ஓடம் தொடர்ந்து ஓடுகிறது.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடிய பின் கருத்தொருமித்து உடல் இரண்டு உள்ளம் ஒன்று எனும் உயரிய நிலையை அடைவது உண்மைக் காதல். அந்நிலையை அடைந்த காதலனுக்குத் தன் காதலி கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க விருப்பம் ஏற்படுவதும் காதலிக்குத் தன் காதலன் கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க வேண்டுமெனும் ஆவல் உண்டாவதும் இயல்பு.

உனது விழியில் எனது பார்வை

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது

உயிர் கொண்ட‌ ஓவிய‌ம் ஒன்று
துணை வ‌ந்து சேர்ந்த‌தென்று
ம‌ன‌ம் கொண்ட‌ இன்பம் எல்லாம்
க‌ட‌ல் கொண்ட‌ வெள்ள‌மோ?

க‌ண் இமையாது பெண் இவ‌ள் நின்றாள்
கார‌ண‌ம் கூறுவ‌தோ? - உனைக்
காண்ப‌தென்ன‌ சுக‌மோ - உனைக்
காண்ப‌தென்ன‌ சுக‌மோ?

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது - என் கவிதை வாழ்வது

எனக்கென்று வாழ்வ‌து கொஞ்ச‌ம்
உனக்கென்று வாழும் நெஞ்ச‌ம்
ப‌னிகொண்ட‌ பார்வை எங்கும்
ப‌டிக்காத‌ காவிய‌ம்
எனக்கென்று வாழ்வ‌து கொஞ்ச‌ம்
உனக்கென்று வாழும் நெஞ்ச‌ம்
ப‌னிகொண்ட‌ பார்வை எங்கும்
ப‌டிக்காத‌ காவிய‌ம்

பொன்ம‌ன‌ம் கொண்ட‌ ம‌ன்ன‌வ‌ன் அன்பில்
என்னுயிர் வாழ்கிற‌து - அது
என்றும் வாழும் உற‌வு - அது
என்றும் வாழும் உற‌வு

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது ஆஆஆ கவிதை வாழ்வது
_________________________

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஒளிமயமான எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் ஒரு சிறை. அங்கே ஒரு தூக்கு தண்டனைக் கைதியைத் தூக்கிலிடும் நாள் நெருங்கியது. மறு நாள் காலை அவன் தூக்கிலிடப்படவிருந்த நிலையில் சிறையதிகாரிகள் அவனது கடைசி ஆசை ஏதேனுமிருந்தால் கூறுமாறு அவனைக் கேட்க, அவன் அவர்களிடம் தனக்கு ஒரு கிடார் வாத்தியம் வேண்டுமெனவும் அதனை மீட்டிப் பாட விரும்புவதாகவும் சொல்லவே, அவர்கள் அவ்வாறே அவனுக்கு ஒரு கிடார் வாத்தியத்தை வழங்கினர். தன் சோகத்தையெல்லாம் பிழிந்து ஒரு பாடலை அவன் பாடுவான் என அவ்வதிகாரிகளும் பிற கைதிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருக்கையில் அவர்கள் அனைவரையும் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவன் மகிழ்ச்சி ததும்பும் தொனியில் ஒரு இனிய பாடலைத் தன் தேனினும் இனிய குரலில் பாடினான். கிடார் வாத்தியத்தின் நாதத்துடன் இழைந்து இணைந்தமைந்த அப்பாடல் புதுவாழ்வைத் தொடங்கும் ஒருவன் தன் எதிர்காலத்தைப் பற்றிய இனிய கனவுகள் நிறைவேறும் நம்பிக்கையுடன் பாடுவதாக அமைந்தது.

அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த காலம். அன்றிரவு அமெரிக்கர்களின் குண்டு வீச்சினால் ஹிரோஷிமா நாகசாயி நகரங்கள் அழிகையில் அச்சிறை மீது விழுந்த அணுகுண்டினால் சிறையில் இருந்த அனைத்துக் கைதிகளுடன் அதிகாரிகளும் பிற ஊழியர்களும் இறந்து போயினர். ஆனால் என்ன ஆச்சரியம்! அக்கைதி ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். பின்னர் அவன் தனது பாடல் வரிகளில் மொழிந்த வண்ணமே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.

இச்சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்ததா அல்லது கற்பனையாக யாரும் கூறியதா என்பதை உறுதியாகச் சொல்ல என்னால் இயலாது. இருப்பினும் இத்தகைய சம்பவம் நடப்பது உலகில் சாத்தியமே. இதன் மூலம் நாம் அறிவது என்னவெனில் நாம் எத்தகைய துன்ப நிலையிலிருப்பினும் நமது உள்ளத்தில் நம்பிக்கை கொண்டு திகழ்ந்தால் அத்துன்பம் எதுவாயினும் அது பகலவனைக் கண்ட பனி போல் விலகி வாழ்வில் இன்பம் விளைவது உறுதியெனும் செய்தியேயாகும்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு!

ஒளிமயமான எதிர்காலம்

திரைப்படம்: பச்சை விளக்கு
இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1964

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
_________________________

செவ்வாய், 8 ஜூன், 2010

நான் மலரோடு தனியாக

தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிப்படங்களைத் தந்து, பிற்காலத்தில் வில்லன் வேடத்திலும் புகழ்பெற்று தமிழ்த் திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகர் "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர். துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் பாணியிலமைந்த திரைப்படங்கள் இவரது தனித் திறமையைப் பறைசாற்றின. அதனால் தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என இவர் அறியப்பட்டார். சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி, காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், சோகக் காட்சிகள் முதலான அனைத்து வகையிலும் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தவர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது மாபெரும் வரலாறு காணாத வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' திரைப் படத்தில் நடனமாதாக அறிமுகமாகிப் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து "குடியருந்த கோவில்" திரைப் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு எனும் புகழ்பெற்ற பாடலில் நடனமாடிய எல். விஜயலட்சுமியுடன் ஜெய்சங்கர் இணைந்து நடித்த படம் இரு வல்லவர்கள், இப்படத்தில் இவரும் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் அவர்களும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து, இருவரும் திருடர்களாக வாழ்க்கை நடத்துவதாக அமைந்த கதையில் இவரும் எல். விஜயலட்சுமியும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

நான் மலரோடு தனியாக

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

திங்கள், 7 ஜூன், 2010

நானொரு முட்டாளுங்க

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

என்று வள்ளுவர் வகுத்த கல்வியின் சிறப்பைத் தற்காலத்தில் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கல்வி என்பது முதற்கண் மாணவ மாணவிகளுக்குத் தாய் மொழியையும் தாய் மொழி வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களையும் புகட்ட வேண்டும். அதன் பின்னரே ஆங்கிலமும் பிற மொழிகளும், அவற்றின் வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களும் அமைதல் வேண்டும்.

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு

என பாரதி புகழ்ந்த தமிழ்நாட்டிலே இன்று பள்ளி இறுதிப் படிப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்களும், பல்வேறு துறைகளிலே பட்டங்கள் வாங்கிக் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களும் பெரும்பாலும் தமிழறிவு பெறாதவர்களாகவே இருத்தல் கண்டு மிகவும் வருத்தம் உண்டாகின்றது.

அது மட்டுமின்றி நமது நாடு உலகமெங்கும் போற்றி வணங்கத்தக்கதாக விளங்குவதற்குக் காரணமான தொன்மையான கலாச்சாரமும், திரைப்படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் இறக்குமதியாகி வருகின்ற மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களால் சீரழிவது நமது நாட்டுக்கே பெரும் கேடாக விளையக்கூடும்.

நானொரு முட்டாளுங்க

திரைப்படம்: சகோதரி:
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1959


நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க

ஏற்கெனவே சொன்னவங்க ஏமாளியானாங்க
எல்லாந்தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நானொரு முட்டாளுங்க

கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
ஏ...ஏஏஏ ஏ ஏ ஏ கைதே டேய்
கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க
பேசாத இன்னாங்க பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க

நானொரு முட்டாளுங்க

கால் பார்த்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்கா எட்டி எட்டி ஒதைக்குது

நானொரு முட்டாளுங்க

நாணமுன்னும் வெக்கமுன்னும் நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டமொண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்கத் தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் இன்னாங்க

நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க

வியாழன், 27 மே, 2010

அன்றொரு நாள் இதே நிலவில்

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தேறுவதெப்போ நம்ம கவலே

என்று பட்டுக் கோட்டையார் பாடிய பாடலுக்கொப்ப நம் நாட்டின் பல இடங்களில் பாமர மக்களை ஏமாற்றி அவர்களது செல்வங்களைக் கொள்ளையிடுவதும் மேலும் பல வகைகளில் அவர்களை அடக்கியாண்டு தங்களது சுயநல நோக்கத்தை தந்திரமாக நிறைவேற்றிக் கொள்வதுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டம் மலிந்திருக்கிறது. தீர ஆராய்ந்து பார்க்கையில் நாடே அத்தகைய கொள்ளையர் வசம் இருப்பது புலப்படும்.

அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், நாங்கள் சத்திய சந்தர்கள் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் இவர்களும் அதே கொள்ளையை அவர்கள் செய்ததிலும் பன்மடங்கு அதிகமாகவே நிறைவேற்றி வருகின்றனர். இன்னும் எத்தனை காலம் தான் நாமெல்லோரும் தொடர்ந்து ஏமாறப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்த்து முடிவு செய்யும் தருணம் வந்து விட்டது. நாமும் உயிர் பிழைத்து நமது சந்ததியினரையும் இத்தகைய எத்தர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற நமக்கு எள்ளளவேனும் சிந்தனை உள்ளதா என்பதே கேள்கிக்குறியாக உள்ளது.

விதிவசத்தால் தன் காதலியை விட்டுப் பிரிந்த கதாநாயகன், அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றி அவர்களது கண்களைக் குருடாக்கி, பிச்சையெடுக்க வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சமூக விரோதிகளின் செயலால் கண் பார்வையை இழந்த வேறொரு பெண்ணைக் காப்பாற்ற முனைகையில் அவனும் அந்த சமூகவிரோதிகளின் வலையில் விழுந்து விடுகிறான். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து பிச்சையெடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதற்கிடையில் ஒரு நாள் அவ்விருவரும் தனியாக ஓய்வெடுக்கும் சமயம் அவள் தன் மனதில் அழமாய்ப் பதிந்திருந்த ஒரு இனிய பாடலைப் பாடுகிறாள்.

அப்பாடலைக் கேட்கும் கதாநாயகன் அது தனது காதலி தனக்காகப் பாடிய பாடலாக இருக்கக் கண்டு மிகவும் அதிசயித்து அப்பாடலுக்கு தனது ஆர்மோனியப் பெட்டியில் பின்னணி இசைக்கிறான். பின்னர் தன் காதலி இவ்வுலகை விட்டு மறைந்த செய்தியையும், தன்னுடன் பிச்சையெடுக்கும் பெண் தன் காதலியின் சகோதரி எனவும் அறிந்து கொள்கிறா. அதன் பின்னர் அவ்விருவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஆட்டிப் படைக்கும் சமூக விரோதிகளை தந்திரமாக ஏமாற்றி தப்பிப்பதுடன் அவர்களை சட்ட்த்தின் பிடியிலும் சிக்க வைக்கின்றனர்.

நாம் எப்பொழுது நம்மையெல்லாம் ஏய்த்துப்பிழைப்பவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போகிறோம்?

அன்றொரு நாள் இதே நிலவில்

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

மனிதர்கள் இளமைக் காலத்தில் எப்பொழுதும் இவ்வுலகில் தாம் அடையக்கூடிய இன்பங்களைப் பற்றியே பெரும்பாலும் எண்ணி ஒரு மயக்க நிலையில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக பருவமெய்திய பின்னர் ஆண்கள் பெண்களிடம் தாம் அடையக் கூடிய இன்பங்களையும் பெண்கள் ஆண்களிடம் பெறக்கூடிய இன்பங்களையுமே அதிகம் எண்ணுகின்றனர். தம் தாய் தந்தையரைப் பற்றியும் வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் உலகில் சந்திக்கின்ற துன்பங்களைப் பற்றியும் யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் பொதுவில் பெற்றோர்கள் அடையும் துன்பங்கள் மேலும் பெருகி அவர்கள் அல்லலுறும் நிலை ஏற்படுவதை நாம் பல சமயங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.

குறிப்பாக இளைஞர்களுள் சிலர் தம் மனைவியரிடம் கொண்ட மயக்கத்தாலும் வேறு சிலர் பிற பெண்களிடம் கொண்ட மோகத்தினாலும் மதிகெட்டுப் பெற்றோரை அலட்சியம் செய்து தமது இன்பம் ஒன்றையே பெரிதென எண்ணி வாழ்வதும் உலகில் நடைமுறையாக உள்ளது. இவ்வாறு பெண்ணாசையால் மனம் தடுமாறிய நிலையிலுள்ளோரில் ஒரு சாரார் தம் அறிவை முற்றிலும் இழக்குமுன்னரே தம் சுயநினைவைப் பெற்று தமது பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டிய க்டமையை உணர்ந்து செயல்படுகின்றனர். வேறு சிலர் அவ்வாறன்றி தொடர்ந்து அலட்சிய மனோபாவத்துடனேயே வாழ்ந்து அதன் காரணமாகப் பெற்றோரை இழக்கும் நிலையை அடைந்து வருந்துவதும் உண்டு.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்குப் பலவிதமான கதைகள், கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் இன்னும் பிற வகையிலும் பெற்றோரைக் காக்கும் கடமையை அவர்கள் உணரும் விதமாகக் கல்வி போதிக்கப் படுகிறது. அத்தகைய கல்வியைப் பயின்ற போதும் சிலர் அதனை உள்ளத்தில் கொள்ளாமல் கடமை மறந்து காலனிடம் பெற்றோரைப் பறிகொடுத்த பின் வருந்துவதும் உண்டு.

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

திரைப்படம்: குமாரராஜா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே