வியாழன், 25 பிப்ரவரி, 2016

அன்னையின் அருளே வா வா வா

தினம் ஒரு பாடல் - டிசம்பர் 14, 2015

சோழ வள நாடு சோறுடைத்து எனும் பெருமை கொண்ட சோழநாட்டைக் குலோத்துங்க மன்னன் ஆண்ட காலத்தில் அந்நாட்டின் அம்பர் எனும் ஊரிலே சிலம்பி எனும் பெயர் கொண்ட தாசி ஒருத்தி வசித்து வந்தாள். விதிவ்சத்தால் அவள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ நேரிட்டது. அச்சமயம் குலோத்துங்க சோழ மகாராஜாவின் அவைக்களப் புலவராகக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இருந்தார். கம்பர் தனக்கு ஆயிரம் பொன் கொடுப்போர் யாராயினும் அவர் மேல்ஒரு பாடல் இயற்றிப் பாடுவது வழக்கமாயிருந்தது. அவ்வாறு அவர் வாயால் பாடல் பெற்றவர்கள் பெரும் செல்வந்தர்களாகிச் சிறப்பாக வாழ்ந்தனர் என்பதும் அக்காலத்தில் பிரசித்தம். 

இதனைக் கேள்விப்பட்ட சிலம்பி அரும்பாடு பட்டுச் சிறுகச் சிறுக ஐந்நூறு பொற்காசுகளைச் சேர்த்த நிலையில் ஒருநாள் கம்பர் அவள் வீடிருக்கும் வழியே வந்து கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டுத் தான் சேர்த்து வைத்திருந்த ஐந்நூறு பொற்காசுகளைக் கம்பரிடம் தந்து தன் ஏழ்மை நிலையைக் கூறித் தான் ஆயிரம் பொன் கொடுக்க இயலாது எனவும் தயை கூர்ந்து தன் ஏழ்மை நீங்கப் பாட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டாள். ஐந்நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொண்ட கம்பர் ஆயிரம் பொன்னுக்குத் தான் முழுப்பாட்டு, ஐந்நூறு பொன்னுக்கு அரைப்பாட்டே இயற்ற முடியும் என்று கூறி சிலம்பி வீட்டுச் சுவற்றில் ஒரு கரித்துண்டால் கீழ்க்கண்டவாறு எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்.

"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே"

கையிலிருந்த ஐந்நூறு பொன்னும் போய்ப் பாடலும் பூர்த்தியாகாத நிலையில் சிலம்பி மேலும் ஏழ்மையுற்றுப் பெரிதும் வாடினாள். இந்நிலையில் ஒரு நாள் அவள் வீட்டு வழியே கால்நடையாய் வந்த ஔவை மூதாட்டி சிலம்பியின் வீட்டுத் திண்ணையில் சற்றே இளைப்பார வேண்டி அமர்ந்தார். அக்காலத்தில் தொடங்கி சமீப காலம் வரையிலும் அனேகமாக எல்லா ஊர்களிலும் வீடுகளின் முன்னர் திண்ணை ஒன்றைக் கட்டி வைப்பது வழக்கம். வழிப்போக்கர்கள் இளைப்பாறிவிட்டுச் செல்லட்டும் எனும் நல்ல நோக்கில் அவ்வாறு அமைத்தார்கள் மக்கள். அது மட்டுமின்றி எவரேனும் வழிப்போக்கர்கள் தம் வீட்டுத் திண்ணையில் அமர நேர்ந்தால் அவர்களுக்கு தாகம் தீரவும் பசியாறவும், நீராகாரமும் அன்னமும் இட்டு உபசரிப்பதைத் தமிழர்கள் தம் முதற் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார்கள். அதன் பொருட்டே திருவள்ளுவர்

விருந்து புறத்ததாற் தானுண்டாற் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

என்று விருந்தோம்பலின் மகிமையை உலகுக்குணர்த்தும் வண்ணம் எழுதிவைத்தார். அவரது அறிவுரையை அனைவரும் தவறாது கடைபிடித்து நேர்மையாய் பரோபகார சிந்தையுடன் வாழ்ந்தனர்.

தன் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்த ஔவை மூதாட்டி பசிதீர வேண்டுமெனும் எண்ணம் கொண்ட சிலம்பி தான் அருந்துவதற்காக வைத்திருந்த கூழை ஔவையாருக்கு அளித்துப் பருக வேண்டினள். அவளது தயையைக் கண்டு மகிழ்ந்து அவள் கொடுத்த குழை அருந்திய ஔவை எதேச்சையாக அங்கே சுவற்றில் எழுதியிருந்த இரு வரிகளைக் கண்டு அது என்னவென்று சிலம்பியைக் கேட்க சிலம்பியும் நடந்ததை விளக்கிக் கூறினாள். சிலம்பி மேல் கருணை கொண்ட ஔவைப் பிராட்டி ஒரு கரித்துண்டைக் கையில் எடுத்துக் கடைசி இரண்டு வரிகளை எழுதி அப்பாடலைப் பூர்த்தி செய்தார்.

தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு.

எனப் பாடல் முற்றுப் பெற்றதனால் சிலம்பி பெரும் புகழ் பெற்றுச் செல்வச் சீமாட்டியானாள் என்பது கதை.

சோழ நாட்டை ஆண்ட மன்னனின் கருணைக்குக் காவேரி நதியை இணையாகக் கூறினார் கம்பர். அத்தகைய காவேரி நதி தற்போது அரசியல் சாக்க்டைச் சண்டையில் மாட்டிக்கொண்டு அல்லல் படும் கோலத்தை எண்ணி எண்ணி இதயம் நோகிறது. ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் காவேரி நீருக்காக ஏங்குவதும். கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதும், தமிழக அரசு உச்ச நீதி மன்றம் சென்று வழக்குத் தொடர்ந்தும் உண்ணாவிரதங்கள் இருந்தும் போராடுவதும் என நடக்கும் நாடகத்தால் பாசனத்துக்கு நீரின்றித் தவிக்கும் விவசாயிகள் மனம் நொந்து பேதலிக்கும் நிலைமையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டை ஆண்டுவந்த இரு கட்சியினரும் தாம் மட்டுமே காவேரி நதி நீர் பெற்றுத் தரப் பாடு பட்டதாகவும் எதிர்க் கட்சியினர் வேஷம் போடுவதாகவும் ஆண்டாண்டு தோரும் நடைபெறும் ஒரு கூத்தும் சலித்து விட்டது.

காவேரி நதியில் ஆண்டு தோறும் ஆடி மாதம் அடை மழையுடன் கூடி வெள்ளம் பெருகி ஓடுவது வழக்கம். அதனால் ஆடி 18ஆம் நாள் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு எனும் பண்டிகையைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடிக் காவேரி நதியில் சென்ரு நீராடுவதும் வழிபாடு செய்வதும் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கைக் காணவில்லை, காரணம் காவேரி நீரைத் தமிழகத்துத் தராமல் கர்நாடக மாநிலத்தார் பெரும்பாலும் தாங்களே உபயோகம் செய்யும் வண்ணம் பல ஏற்பாடுகளைச் செய்ததேயாகும். தற்போதும் காவேரி நதியைத் தேக்கி வைக்கப் புதியதொரு அணை கட்டக் கர்நாடக மாநிலத்தில் மும்முரமாக ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் முன்னணி நடிகர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்குக் கர்நாடகாவிலிருந்து வரும் காவேரி நீரில் கழிவு நீர் மிகவும் அதிகமான அளவில் கலக்கப் பட்டு வருவதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இது வேண்டுமென்றே செய்ததா அல்லது அந்த அளவுக்குக் கர்நாடக மாநிலம் அசுத்தமாகிவிட்டதா எனச் சிந்திக்கத் தோன்றுகிறது, காரணம் சமீப காலத்தில் கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக பெங்களூரில் பல ஏரிகளில் கழிவு நீர்க் கலப்பால் நுரை பொங்கி சுற்றுப்புறச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதே ஆகும்.

வான் பொய்த்தாலும் தான் பொய்யா வற்றாக் கருணை காவேரி எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் தருவாளா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.


திரைப்படம்: ஆடிப்பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

அன்னையின் அருளே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா
 ஆடிப் பெருக்கே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா 
பொன்னிப் புனலே வா வா வா
 பொங்கும் பாலே வா வா வா 

அன்னையின் அருளே வா வா வா 

குடகில் ஊற்றுக் கண்ணாகி
 குலத்தைக் காக்கும் பெண்ணாகி
 குடகில் ஊற்றுக் கண்ணாகி
 குலத்தைக் காக்கும் பெண்ணாகி
 கண்ணன் பாடி அணை தாண்டி
 கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா 

திருவாய் மொழியாம் நாலாயிரமும்
 தேனாய்ப் பெருகும் தமிழே வா
 திருவாய் மொழியாம் நாலாயிரமும்
 தேனாய்ப் பெருகும் தமிழே வா
 திருமால் தனக்கே மாலையாகி
 திருவரங்கம் தனை வலம் வரும் தாயே 

அன்னையின் அருளே வா வா வா 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ
 கம்பன் கவிதை நயமும் நீ
 கட்டிக் கரும்பின் சுவையும் நீ
 கம்பன் கவிதை நயமும் நீ
 முத்துத் தாண்டவர் பாடலிலே
 முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா
 வற்றாக் கருணை காவேரி
 வான் பொய்த்தாலும் தான் பொய்யா
 வற்றாக் கருணை காவேரி
 வளநாடாக்கும் தாயே நீ
 வாழிய வாழிய பல்லாண்டு  

1 கருத்து: