ஞாயிறு, 10 ஜூலை, 2011

தேன் உண்ணும் வண்டு

வெகு சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் இயற்கை வளங்கள் மிகச் செழிப்பாக விளங்கியதுண்டு. ஆறுகளிலும் குளங்களிலும், ஏரிகளிலும் கிணறுகளிலும் நீர் தூய்மையாக இருந்தது. எனவே மக்கள் குடிநீருக்காக வருந்தும் சூழ்நிலை பாலைவனம் போன்ற ஒரு சில பகுதிகளிலன்றி வேறு எங்கும் இருக்கவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதாக இருந்ததால் தேவைகளும் குறைவாகவே இருந்தன. நாளடைவில் விஞ்ஞான வளர்ச்சியுடன் மக்களின் தேவைகள் வளர்ந்ததுடன் தனிமனித ஒழுக்கம் குறைந்ததனால் மக்கள் இயற்கையைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். இதன் காரணமாக ஒரு சில இடங்களிலன்றி வேறெங்கும் இயற்கைச் சூழ்நிலையைக் காண்பது அரிதாகி வ்ருகிறது. கிராமங்கள் குறைந்து நகரங்கள் பெருகி, மரங்களும் செடிகளும் புல்வெளிகளும் இருந்த இடங்களிலெல்லாம் கல்லாலும் மண்ணாலும் ஆன கட்டடங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வளங்கள் குன்றி வருகின்றன. இது மிகவும் ஆபத்தான போக்காகும். இத்தகைய போக்கு மாறாவிடில் வெகுவிரைவில் மனிதகுலம் மட்டுமன்றிப் பிற உயிர்களும் உண்ண உணவும் அருந்த நீரும் இன்றி வாடி மடியும் நிலை நேர்ந்துவிடும். சீனா, ஜப்பான் முதலிய நாடுகள் இவ்வபாயத்தை உணர்ந்து இருப்பிடங்கள் அமைக்கையில் அவற்றை இயற்கைச் சூழ்நிலையில் ஏற்படுத்துவதில் கருத்தாக இருக்கின்றனர். அவர்களிடம் உலகின் பிற நாடுகளில் வாழும் மக்களும் அரசாங்க நிர்வாகிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இயற்கை வளங்கள் செழித்து விளங்கிய காலத்தில் மனித குலத்தினர் காதல்வயப்படுகையில் தங்களது காதல் உணர்வை இயற்கையில் நிகழும் சம்பவங்களுடன் ஒப்பிட்டு மகிழ்ந்து அது போலவே தாங்களும் மனதார இணைந்து உயர்வு பெற்ற வாழ்வை வாழ்ந்தனர். மீண்டும் அத்தகைய செழிப்பான காலம் வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அத்தகைய காலம் மீண்டும் வர வேண்டுமெனில் மனிதன் தனது பேராசையை விட்டு அனைவரும் ஒற்றுமையாய் எளிய வாழ்க்கை வாழ்வதிலே திருப்திகொண்டு தீமைகளைக் குறைத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கரை கொண்டு உலகை வளப்படுத்த வேண்டும்.

தேன் உண்ணும் வண்டு

திரைப்படம்: அமரதீபம்
இயற்றியவர்: ஆத்மநாதன்
இசை. T. சலபதி ராவ், G. ராமநாதன்
பாடியோர்: ஜிக்கி, ஏ.எம். ராஜா
ஆண்டு: 1956

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்பநாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ ஓஓஓஓ
புதுமை இதில் தான் என்னவோ?

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
மென் காற்றே நீ சொல்லுவாய்

கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே..
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததுமேன் வாழ்விலே ஓஓஓஓ
காணாததுமேன் வாழ்விலே

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் ஒஓஓஓ
கலைமதியே நீ சொல்லுவாய்
ஓஓஓ ஓஓஓ

1 கருத்து: