ஞாயிறு, 9 மே, 2010

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இவ்வுலகில் நிலையாமை ஒன்றே நிலையானதென்னும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் உண்மையை உணராமல் மனிதர்களாகிய நாம் என்றென்றும் பணம் சம்பாதிப்பதிலும், நம் உடலுக்கும், உடலின் உணர்வையே பெரும்பாலும் கொண்டு விளங்கும் மனதுக்கும் இன்பம் தரும் பொருட்களையும் வசதிகளையும் அடைவதிலும் நம் காலத்தைக் கழிக்கிறோம். இத்தகைய செயல்பாட்டினால் முன்னோர் அறிவுறுத்திய நல்ல கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுப் பாப காரியங்களையும் செய்யத் துணிகிறோம். பலருடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்து நல்லுறவை இழக்கிறோம். இதன் விளைவாக மனம் கெட்டு அதனால் உடல் தளர்ந்து தீராத நோய்களுக்காளாகி, பல விதத்தில் ஈட்டிய பணமும் வசதிகளும் தரவல்ல சுகங்களை அனுபவிக்க இயலாத நிலையையும் அடைகிறோம். இன்பம் தரும் என எண்ணி ஈட்டிய பொருள் பயனற்றதாகிவிட்ட நிலையிலும் எவ்வாறாகிலும் நம்மை வாட்டுகின்ற நோய்களிலிருந்து குணமடைந்து நாம் விரும்பிய சுகங்களை அடைய வேண்டும் எனும் எண்ணத்திலேயே மீதமுள்ள வாழ்நாளையும் இது நாள் வரையில் ஈட்டிய பொருளையும் வீணாக்கி என்றோ ஒரு நாள் எவ்விதப் பயனுமின்றி வருந்தி மடிகிறோம்.

உலக வாழ்வு நிலையற்றதெனும் உண்மையை உணர்ந்த ஞானிகள் இத்தகைய துன்மார்க்கத்தினின்றும் விலகி, பொருளின் மேல் பற்றை நீக்கி உலக நன்மைக்காகப் பாடுபடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். இத்தகைய ஞானிகள் தாங்கள் என்றும் நிலையான ஆத்மார்த்தமான இன்பத்தைப் பெறுவதுடன் தன்னை நாடி வருவோர்க்கும் தாம் பெற்ற இன்பத்தைப் பெற வழி காட்டுகின்றனர். இதனிடைய பலர் காவியுடையும் தெய்வீக சின்னங்களையும் தரித்து, எப்பொழுதும் ஞான மார்க்கம் தொடர்பானவற்றையே பிறருக்கு உபதேசம் செய்து, முற்றும் துறந்த முனிவர்களைப் போல் வேஷமிட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் பல ஆஷாடபூதிகளையும் நாம் அவ்வப்போது அறிகிறோம். அத்தகைய வேடதாரிகளளைப் பற்றிய அறிவு நமக்கு உண்டாவதற்கு முன்னரே நம்மையும் அறியாமல் நம்மில் பலர் இத்தகைய வேடதாரிகளை மெய் ஞானிகள் என்று நம்பி ஏமாறுவதும் உண்டு.

ஞான மார்க்கத்துக்கான வழியைத் திருவள்ளுவர் முதலான ஞானியர் தெளிவாக வகுத்துத் தந்துள்ள நிலையில் நாம் வேறு யாரையும் இதற்காக நாட வேண்டுவதில்லை.

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இரவும் பகலும்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: எஸ்.ஏ. அசோகன்

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவனே - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள் அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக