சனி, 1 மே, 2010

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு

அத்தை மகனும் மாமன் மகளும், அல்லது அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்து அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் இருவர் இவ்வாறு ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகையில் பிறக்கும் பிள்ளைகள் குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் எனும் ஒரு கருத்து மருத்துவர்களிடையே நிலவி வந்தாலும் இத்திருமண முறையைப் பெரும்பாலும் நமது சமூகத்திலுள்ள அனைவரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஒருவரையொருவர் தம் மனதிற்குள்ளேயே காதலிக்கும் அத்தை மகனும் மாமன் மகளும் அவர்களின் திருமண நாள் குறிக்கும் நாளில் அத்தை மகன் விளையாட்டாகத் தான் வேறொரு பெண்ணை மணக்கக்கூடும் எனும் பொருள்பட மாமன் மகளிடம் புதிராகப் பேசிவிட்டு, இறுதியில் தான் அவளையே மணக்கப்போவதாக அவள் உணரவைத்து அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவேண்டுமென விரும்பி, அதன்படியே அவள் குழம்பிய மன நிலையில் தவிக்கையில் தங்கள் திருமணத்திற்கென மாலைகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காணும் காட்சி அவனை நிலைகுலையச் செய்கிறது. அவன் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண் மனதில் பெரும் சோகத்தையும் அதனால் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த, தன் மனம் உடைந்து போன அப்பெண் விஷமருந்தி உயிர்நீக்கிறாள்.

தன்னுடைய தவறினால் தன் காதலி மாண்டதாலும் அவளை விரும்பிய மனதில் வேறு ஏதும் விரும்பாத கொள்கையாலும் ஆட்கொள்ளப்பட்ட அவன் அவள் நினைவாகவே தனது வாழ்நாளைக் கழிக்கையில், மனம் போனபடி தன் ஊரை விட்டு எங்கோ சென்றவன் வேறொரு ஊரில் உள்ள ஆலயம் ஒன்றில் தண்ணீர் சுமந்து தருவது போன்ற பணிகளைச் செய்து கொண்டு அங்கேயே தனியாக வாழத் தலைபடுகையில் அவ்வூரில் வசிக்கும் வேறொரு இளம் விதவைப் பெண்ணின் பெயர் இவனது காதலியின் பெயராக அமைந்து விடுவதால், இவன் தனது காதலியின் பெயரை அவ்வூரிலுள்ள சில சுவர்களில் எழுதியதால் சிறு குழப்பம் ஏற்படுகிறது. பின்னர் அக்குழப்பம் தெளிந்து அவ்விதவைப் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்வானோ எனும் ஒரு எதிர்பார்ப்பைப் பிறர் மனதில் ஏற்படுத்துவது போன்றதொரு நிலையில் அவனும் அவ்விதவைப் பெண்ணும் ஒன்று சேர்ந்து அவ்வூரிலிருக்கு வேறொரு இளம் காதல் ஜோடியை ஒன்று சேர்க்கப் பாடுபட்டு வெற்றியும் காண்கின்றனர். இம்முயற்சியில் நம் கதாநாயகன் தன் உயிரையே விட்ட பின்னரும் அவனது பிணத்தின் கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து அவன் உயிருடன் நிற்பது போன்றதொரு தோற்றத்தினை ஏற்படுத்தி அவ்விதவைப் பெண், அவ்விளம் ஜோடியின் திருமணத்திற்குத் தடையாக நிற்கும் ஒருவரை ஏமாற்றி, தங்களது முயற்சியான காதலர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி காண்கிறாள்.

இக்கதை வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதையாகும். தன் தவறுதலால் மாண்ட தன் காதலியை மனதில் எண்ணீயபடி கதாநாயகன் பாடுவதாக அமைந்தது இவ்வினிய பாடல்.

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு

திரைப் படம்: வைதேகி காத்திருந்தாள்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு?
நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகனோ?
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ?
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நாளும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக