வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மதுரையில் பறந்த மீன் கொடியை

காதலிலே இரண்டு வகை உண்டு, சைவம் அசைவமல்ல, இது வேறு. அறிவுபூர்வமாகக் கொள்ளும் காதல் ஒன்று. அறிவு நிலையை மீறி உணர்வு பூர்வமாகக் கொள்ளும் காதல் மற்றது. இதில் அறிவுபூர்வமாக ஏற்படும் காதல் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் விருப்பத்தை நேசத்தினாலும் தூய அன்பாலும் மரியாதை குறையாவண்ணம் வெளிப்படுத்துவது. மற்றது உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை தடுமாறி மயங்குவது. முதலாவது வாழ்வை வளமாக்கும், இரண்டாவது வாழ்வை நரகமாக்கக் கூடும்.

அறிவுபூர்வமாக ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளும் காதலர் இருவர் ஒன்றாகப் பாடியாடி மகிழும் காட்சி ஒன்றில் அக்காதலனுக்குத் தனது காதலியின் முகத்திலுள்ள அங்கங்களும் அவளது பெண்மையும் தமிழ்நாட்டின் பெருமை மிக்க பல முக்கியத் தலங்களாகவும், அவள் இத்தலங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மொத்தத் தமிழ் நாடுமாகவே தென்படுவதாக ஒரு அழகிய கற்பனை வளம் மிக்க இன்னிசையுடன் கூடிய பாடல் இது.

மதுரையில் பறந்த மீன் கொடியை

திரைப்படம்: பூவா தலையா?
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன்
பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன்
பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக