ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

தினம் ஒரு பாடல் - 10 செப்டம்பர் 2014
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தின் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். அதுவே கேரள மாநிலத்தின் பண்டிகையாக விளங்குகிறது. கேரள அரசு இப்பண்டிகைக்காக 4 நாட்கள் விடுமுறை அளிக்கிறது. இந்த ஓணம் பண்டிகை மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டு அவர் அவ்வாறே ஒப்புக்கொள்ள, இரண்டு அடிகளால் பூமியையும் பிற உலகங்கள் அனைத்தையும் அளந்து பின் மூன்றாம் அடிக்கு இடம் கேட்கவே, மாபலி தன் தலை மீது வைக்கச் சொல்ல அதன் படியே மாபலியின் தலைமேல் தன் பாதத்தை வைத்து அவனைப் பாதாளலோகத்துக்கு அனுப்பிய விசேஷமான 
நாளைக் குறிக்கிறது.

மாபலி மன்னன் மக்களுக்கு என்றும் நன்மையே செய்து புகழ் பெற்றவன், மூவுலகையும் வென்றவன். அவனது பலம் பெருகுவதைக் கண்டஞ்சிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹாவிஷ்ணு வாமன அவதாரமெடுத்து அவனை அடக்கியதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஓணம் பண்டிகையின் போது மாபலி பாதாள லோகத்திலிருந்து பூமிக்கு வந்து தன் நாட்டு மக்கள் நலமாக உள்ளனரா என்று பார்ப்பது வழக்கம் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஆண்டு தோறும் ஓணம் வந்து விட்டால் கேரள மாநிலமே திருமணக் கோலம் பூண்டது போல் விளங்கும். கேரள மக்கள் வீடுகளில் பலவிதமான பக்ஷணங்கள் செய்து விமரிசையாக விருந்தினர்களுடன் சேர்ந்து கலந்து அருந்தி மகிழ்வது வழக்கம்.

நேந்திரங்காய் சிப்ஸ், பப்படம் ஆகியவற்றுடன் தோரன், மெழுக்குப்புரட்டி, காலன், ஓலன், அவியல், சாம்பார், நெய்யிட்ட பருப்பு, எரிச்சேரி, ரசம், இனிப்பும் புளிப்பும் மிகுந்த ஊறுகாய்கள், இருவகையான மோர், துருவிய தேங்காயிலிருந்து செய்யப் பட்ட சட்னிப் பொடி, வாழைப்பழப் பாயசம் என வகை வகையாகத் தயாரித்து எல்லோரும் இஷ்டம் போல வெட்டுவார்கள். அது மட்டுமா? பல விதமான கேளிக்கைகளும், படகுப் போட்டிகளும், அலங்கரிக்கப் பட்ட யானைகளுடன் நடைபெறும் விசேஷமான பூஜைகளும் சேர்ந்து மாநிலமே அமர்க்களப் படும். திருவந்திரா, கும்மட்டிக் களி, புலிக்களி, தும்பி துள்ளம் முதலான பாரம்பரிய நடனங்களும் கேளிக்கைகளின் ஒரு 
பகுதியாக மாநிலம் முழுதும் இடம் பெறும்.

ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப் படுகிறது. பண்டிகை திருவோண நட்சத்திரம் நிலவும் பத்தாம் நாளன்று நிறைவடைகிறது. எனக்கு ஒரு இளைய சகோதரி இருந்தாள், உமா என்று பெயர். அவள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவள். நான் சிறு வயது முதல் தினமும் ஏதேனும் பாடல்களைப் பாடிக்கொண்டும் எனது புல்லாங்குழலில் இசைத்துக் கொண்டும் இருக்கையில் அவள் என்னுடன் சேர்ந்து பாடுவாள். அவள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டாள். அன்று முதல் என் பாடலுக்கு எதிரொலியாயிருந்த 
அவளின் துணையை இழந்து வாடுகிறேன்! உறவின் உயர்வு இத்தகைய பிரிவுத்துயரினால் நன்கு விளங்குகிறது.

இங்கே நம் நாயகனும் நாயகியும் ஒருவரோடொருவர் அன்பு கொண்டு இருவரும் இதயம் மாறிப்புக்கு எய்திக் காதல் வயப்பட்டுப் பாடுகின்றனர் தாங்களிருவரும் ஒன்று சேர்ந்திருந்தால் அது திருவோணம் பண்டிகையாகும் என்று. இப்பாடலை எழுதி, இசையமைத்துப் படமாக்கிய விதமும் அற்புதமாகவே அமைந்துள்ளது. எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத அந்த இனிய பாடலைக் கேட்போமா?




திரைப்படம்: மைக்கேல் மதன காமராஜன்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியோர்: கமலஹாசன், எஸ். ஜானகி
ஆண்டு: 1990

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ 
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்னேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 

ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ 
ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ 
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ

ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணம்
மோகன ராகம் நின் தேகம், கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ?
நீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் வந்து சேரும் நன்னேரம்

சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்தால் திருவோணம் ஓஹோ ஒஹோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம் 

சப்பர மஞ்சத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்ஙள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாரம்,
உலரி வரையில் நம்முட யோகம்  

ஆ ஆ ஆஆஆ  ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்னேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 

சனி, 16 ஜனவரி, 2016

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா

மனித உரிமை பற்றி வாழ்கிழியப் பேசும் மனிதர்களாலேயே மனித உரிமை மீறப்படுவதும், நீதியும் நேர்மையும் நிலைத்திடப் பாடுபடுவோமென மேடைகளில் முழங்கி ஆட்சிக்கு வருவோராலேயே நீதிமன்றங்கள் முடக்கப் பட்டு, சாமான்யர்களுக்கு நீதி மறுக்கப் படுவதும், விலைவாசியைக் குறைப்போம் என்று மக்களுக்குப் பொய்யான வாக்களித்து மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களாலேயே விலைவாசி உயர்த்தப் படுவதும், இன்னும் இவை போன்ற எண்ணரும் பாபச் செயல்கள் உலகெங்கும் மலிந்து கிடக்கும் மிகவும் சோதனையான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
 
கலைவாணர் அந்தக் காலத்தில் பாடிய பாடலை மாற்றி,
 
மனுஷனை மனுஷன் மதிச்சு நடந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் நிதமும்
மாடாய் உழைப்பவன் ஓடாய்த் தேய்வது இந்தக் காலம்
உழைச்சவன் வாழ்வில் உயர்வை அடைந்தது அந்தக் காலம் அது அந்தக் காலம் உழைப்பவன்
பிழைப்பைக் கெடுத்துத் தெருவில் நிறுத்துவது இந்தக் காலம்
 
நீதி நேர்மை நியாயம் இருந்தது அந்தக் காலம் அது அந்தக்காலம்
சாதியின் பெயரால் நீதியை வளைப்பது இந்தக் காலம்
நேர்வழி நடந்தது அந்தக் காலம் நேரெதிரானது இந்தக் காலம்
சீர் பெற வாழ்ந்தது அந்தக் காலம் சீ யென்று தாழ்ந்தது இந்தக் காலம்
 
என்றே பாடத் தோன்றுகிறது.
 
பல காலங்களாகப் புலவர் பெருமக்கள் பலரும் மனித சமுதாயத்தில் நிகழும் குறைகளைச் சுட்டிக் காட்டித் திருத்தவென்று எழுதிய பாடல்கள் யாவும் பெரும்பாலும் நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்றுபவர்களாலேயே தங்களை உத்தமர்கள் எனப் பறைசாற்றிக் கொண்டு திரியவே பயன்பட்டு வருவது மிகவும் வேதனை தருகிறது.
 
இத்தகைய குறைபாடுகள் தாற்காலிகமானவையே, புலவர்கள் எழுதி வைத்த கருத்துக்கள் என்றும் உயிருடன் விளங்கி, குறித்த காலத்தில் கேட்க வேண்டிய செவிகளுக்குக் கேட்டு, நற்பயன் விளைவது உறுதி என நம்புவோம்.
 

படம்: தாய்க்குப் பின் தாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1956
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
தத ச்ச்ச் தஹாய்
 
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே - நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே தத ச்ச்ச்
மானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப் பயலே நாம
வாடி வதங்கி வளப்படுத்துறோம் வயலே - ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே - இது
தகாது இன்னு எடுத்துச் சொல்லியும் புரியல்லே அதாலே
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
தஹாய் ஹா ச்ச்ச் என்னடா நெளிஞ்சுகிட்டுப் போறே த
 
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு
தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே
அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே - எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே அதாலே
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
தஹாய் ஹா ச்ச் த
 
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
ஆணவத்துக்கு அடிபணியாதே தம்பிப் பயலே எதுக்கும்
ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே டதம்பிப் பயலே ஒண்ணப்
புரிஞ்சிக்காமலே நடுங்கிடாதே தம்பிப் பயலே
 
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
 
ஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ.
 
ஆகிரா

வெள்ளி, 15 ஜனவரி, 2016

அருள்வாயே நீ அருள்வாயே!

தினம் ஒரு பாடல் - செப்டம்பர் 3, 2014
வாழ்க்கை வாழ்ந்தேயாக வேண்டும். வேறு வழி கிடையாது. பிறப்பில் தொடங்கிய எவ்வுயிரும் இறப்பினையடையவே வேண்டும் என்பது விதி. அதை மாற்றுமளவு சக்திவாய்ந்த மதி அந்த இறைவனுக்கும் கிடையாது. அந்த இறைவனே இந்த விதிக்குக் கட்டுப்பட்டு தேவைப்படுகையில் பிறப்பெடுக்க வேண்டும். ஒவ்வொரு பிறப்பிலும் மரணத்தையும் அடைந்தே தீர வேண்டும். இதன்படியே கடவுளர்கள் பல அவதாரங்கள் எடுப்பதாகப் புராண இதிகாசக் கதைகளில் எழுதப்பட்டிருக்கிறது. 

வாழ்ந்தேயாக வேண்டுமென்பது விதியானாலும் எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இவ்விருப்பத்தைத் தன் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. ஆயினும் அவ்வாறு நாம் தேர்ந்தெடுக்கும் வழி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மையுண்டு. மலை மேல் ஏறி மலை உச்சியில் வாழ விரும்புவோர் அவ்வளவு உயரமாயுள்ள இடத்தில் நிலவும் குளிரையும், காற்றுக் குறைபாட்டையும் போக்குவரத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும்.

அவ்வாறே நல்ல காரியங்களை மட்டுமே செய்து பிறர் யாவருடனும் அன்போடு பழகி மகிழ்ந்து இன்புற விரும்புவோர் தமது ஆணவத்தையும், சுயநல எண்ணங்களையும் மாற்றிக் கொள்வது அவசியம். பிற உயிர்களோடு கலந்து மகிழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையல்ல. எவனொருவனும் தனக்காக மட்டுமே வாழ முடியாது. தன் சுயநலத்தைத் தியாகம் செய்து பிறர் நலத்தைப் பேணும் பெருமனதுள்ளோர் தலைவர்களாகவும் வழிகாட்டியாகவும் பிறரால் ஏற்றுக் கொள்ளப் பட்டு என்றும் போற்றப் பட்டு இறைத் தன்மையை எய்துகின்றனர். ஏமாற்று வழிகளில் தலைவர்களாகிப் பிறரை சுரண்டி வாழும் பாபாத்மாக்கள் தாம் பாப வழியில் ஈட்டிய பொருள் எதனையும் அனுபவிக்கு முன்னரே இவ்வுலவை விட்டு இழிவுடன் சாகின்றனர் என்பதை நாம் அனைவரும் அன்றாடம் பார்க்கிறோம். ஆயினும் நமக்கும் அத்தகைய நிலைஒரு நாள் நிச்சயம் வரும் என உணர்ந்து பிறர் நலம் போற்றி வாழ்ந்து புண்ணியம் தேடத் தவறுகிறோம்.

பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் அப்பிறவியின் பலனான முக்தியை எய்த வேண்டும். இல்லாவிடில் பிறந்த பிறவி பாழாகிப் போய்ப் பின்னர் குற்றறிவுப் பிறவிகளை அடைய நேரிடும். இதை யாரும் நம்ப வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. நம்பினோன் மோக்ஷமடைவான்; ஐயமுற்றோன் அழிவான்! அதில் எவ்வித ஐயமுமில்லை. முத்தி என்பது எல்லா வித துக்கங்களும், ஆசைகளும், பயங்களும், ஐயங்களும் அகன்ற ஓர் பேரின்ப நிலை. அதை இவ்வுடம்பினுடனேயே நாம் ஒவ்வொருவரும் அடைதல் சாத்தியமே! மனமிருந்தால் மார்க்கமுண்டு. முயற்சி செய்யுங்கள், முக்தி பெறுவீர்கள். இது உறுதி!

முக்தி பெறும் முயற்சியில் முதல் படி மனக் கட்டுப்பாடு. அதற்கு தெய்வபக்தி தேவை. பக்தியென்றால் இடையறாத பக்தி. ஒரு கணமும் மறவாது இறையருளை நாடும் நிலையை மனத்திலிருத்தி ஆணவமகற்றிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனாலேயே நம் முன்னோர்கள் சிறு குழந்தைகளுக்கு முதலில் இறை வழிபாட்டை சொல்லித் தந்தனர். நாமும் அவ்வாறே நம் குழந்தைகளுக்கு தெய்வ பக்தியைப் புகட்ட வேண்டுவதுடன் அவர்கள் நம்மைப் பின்பற்றி வாழுமளவுக்கு என்றும் நாம் பக்திமான்களாக விளங்க வேண்டும். அதுவே நமது முக்திக்கும் நமது சந்ததியினரின் முக்திக்கும் வழி!



திரைப்படம்: சாது மிரண்டால்
இயற்றியவர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா
இசை: மெல்லிசை மன்னர் டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: எம். பாலமுரளிகிருஷ்ணா
ஆண்டு: 1966

ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் 
ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் 
அன்பின் திருவே அழகின் உறவே!
எல்லோரும் மகிழ்ந்திடவே
உன் கருணை வேண்டும்
உன்தன் எல்லையிலே
உலகமெலாம் வாழ்ந்திட வேண்டும்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!
உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!

கோடையின் நிழலே குளிர்த்தென்றலே!
ஓடையின் புனலே ஒளியின் கனலே!

தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
தூய நினைவுகள் தாலாட்டுப் பாடவும்
தீய பழக்கங்கள் தானாக ஓடவும்
பாயும் புலியையும் பரிவோடு காக்கவும்
பாரில் உள்ளவர் பாராட்ட வாழவும்

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

அம்பலத்தரசே அருமருந்தே!
ஆனந்தத் தேனே அருள் விருந்தே!

நீதிப் பாதையில் நேராகப் போகவும்
நேற்றுப் பாவங்கள் தூளாகப் போகவும்
சோதிக் கடலில் எந்நாளும் நீந்தவும்
சோதனை நதியில் வீழாமல் காக்கவும்

அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!
அருள்வாயே நீ அருள்வாயே!
திருவாய் மலர்ந்து அருள்வாயே!

உள்ளத்தில் கோயில் அமைத்தேனே தேவா!
உன் பக்கம் என்னை அழைத்தாயே தேவா!
உண்மையின் உருவே நன்மைகள் தரவே
ஊர்வலம் நீ வருவாயே!

சனி, 9 ஜனவரி, 2016

சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்

தினம் ஒரு பாடல் ஆகஸ்ட் 26, 2014
நமது பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகியோர்ஒருவரோடொருவர் உறவு கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். விஷ்ணுவின் உந்தித் தாமரையில் உதித்தவர் பிரம்மா. விஷ்ணு சிவனார் மனைவியான பராசக்தியின் சகோதரர். பிரம்மாவுக்கு சரஸ்வதி, விஷ்ணுவுக்கு மஹாலக்ஷ்மி என மனைவியர் அமைந்துள்ளனர். சிவனுக்கு விநாயகர், முருகன் என இரு பிள்ளைகள். 

இவ்வாறாக தெய்வங்களும் குடும்பங்களாக விளங்கி இல்லறத்தில் ஈடுபடுவதாக ஐதிகம். இத்தெய்வங்களுக்கு முறைப்படி கடமைகளும் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அதன் படி ஆக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் எனவும், கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு மஹாலக்ஷ்மி, வீரத்துக்குப் பராசக்தியெனவும் கொள்ளப்படுகிறது.

அதே போல வாயு, வருணண், அக்னி, அஷ்டதிக்கஜங்கள் மற்றும் ஏனைய தேவர்கள், சிவனின் பூதகணங்கள் அனைவருக்கும் உரிய கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேவர்களின் தலைவன் தேவேந்திரன். அவனது சபையில் நடனமாடும் தேவமாதர்கள் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகா முதலானவர்கள். 

இவ்வாறாக தேவர்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாய அமைப்புடனேயே விளங்குவதாகக் கொள்ளப்படுகிறது. தேவர்களுடைய எதிரிகள் ராவணன், கும்பகர்ணன், சூரன், ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் போன்ற அசுரர்கள். தேவர்களுக்கு குரு வியாழ பகவான் 
எனப்படும் பிரகஸ்பதி. அதே போல் அசுரர்களுக்கு குரு சுக்கிரன் அல்லது வெள்ளி என அறியப்படும் சுக்கிராச்சாரியார் ஆவார்.

இவ்வாறு தெய்வங்களையும் தேவர்களையும் குடும்ப, சமுதாய உறுப்பினர்களாக வைத்து வழிபடுவதன் நோக்கம் "இல்லறமல்லது நல்லறமன்று" எனும் தர்மத்தை  உலகத்தவர் உணர வேண்டும் என்பதே. இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், சிவபுராணம் முதலிய காவியங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் தர்மத்தை மனிதர்களுக்கு உபதேசிக்கவே முற்காலத்தில் உலக நலன் கருதித் தவம் செய்த மாமுனிவர்கள் பாடுபட்டனர். 

மனித குலம் தர்ம மார்க்கத்தில் செல்லும் வரை உலகம் நல்ல நிலையில் இருக்கும். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்குகையில் உலகம் அழியும். இதுவே நியதி. விஞ்ஞானரீதியிலும் இதுவே உண்மை. 

கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் எவ்விதத்தில் அன்பு பாராட்ட வேண்டும் எனவும், பிள்ளைகள் தாய் தந்தையரிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனவும், வாழ்வில் மனிதர்கள் செய்யத் தக்கவை எவை, செய்யத்தகாதவை எவை என யாவரும் 
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் நிகழும் பலவித சம்பவங்களின் மூலம் எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான கதையே சம்சாரம். இக்கதை தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் திரைப்படமாக உருவாகியது 1951 
காலங்களில். 

கதையின் தலைப்புப் பாடல் கதையின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குவதாகவே அமைந்துள்ளது. இனிய குரலில் ஏ.எம். ராஜா பாடும் அப்பாடலைக் கேட்டு மகிழ்வோம் இன்றைய தினம் ஒருபாடலில்.

திரைப்படம்: சம்சாரம்
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சங்கர சாஸ்திரி
பாடியவர்: ஏ.எம். ராஜா



சம்சாரம் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
ஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏ
கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
இணை பிரியாது இளம் பாலகர் விளையாடும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
பெரியோரைப் பணிய வேண்டும் சிறியோரைக் காக்க வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
தாரமோடு கணவன் அதைத் தாங்கி வாழ வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் 
சம்சாரம் சம்சாரம் சம்சாரம்

வெள்ளி, 8 ஜனவரி, 2016

விநோத தீபம் நவீன தீபம்

தினம் ஒரு பாடல் 25 ஆகஸ்ட் 2014
இவ்வுலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் தொடர்ந்து உழைக்கின்றன. எறும்புகள் கூடச் சாரி சாரியாகச் சென்று தங்கள் இனத்தினர் அனைவருக்கும் உணவைக் கண்டு எடுத்துச் சென்று சேகரித்து வைக்கின்றன. காக்கைகள் உணவுண்கையில் சுயநலம் பாராட்டாமல் காகா எனக் கூவித் தன் இனத்தினரை அழைத்து ஒன்றாகக் கூடி உண்கின்றன. ஒரு காகம் இறந்தால் அனைத்துக் காகங்களும் அப்பகுதியில் ஒன்று கூடிக் காகா என உரக்கக் கூக்குரலிட்டுத் தம் துக்கத்தை இப்பரந்த உலகுக்கு வெளிப்படுத்துகின்றன.

அனைத்து உயிரினங்களையும் விட அதிக அறிவு படைத்த மனிதன் இதற்கு மாறாக உழைக்காமலே இவ்வுலகில் கிடைக்கும் அனைத்து சுகங்களையும் தான் மட்டுமே அனுபவிக்கத் துடிக்கிறான். சுயநலத்துக்காக சொந்த பந்தங்களையும் தூக்கி எறிகிறான். உற்ற நண்பர்களுக்கு துரோகம் செய்கிறான். தன் தாய்த்திரு நாட்டைக் காட்டிக் கொடுக்கிறான். சக மனிதர்களைக் கொள்ளையடிக்கிறான், கொல்கிறான். பல மூட மதியினர் தம் சிற்றின்பங்களைப் பெறுவதற்கு மந்திர தந்திரங்களைப் பயன் படுத்த விழைந்து மந்திரவாதிகளை அணுகி அவர்கள் சொற்படி சக மனித ஜீவர்களை பலி கொடுக்கவும் தயங்குவதில்லை.

அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களுடைய இத்தகைய விநோதமான சுபாவம் உலகெங்கிலுமுள்ள கதாசிரியர்களுடைய கற்பனைக்குத் தீனியாக அமைகின்றது. இதன் காரணமாகவே பல மந்திர தந்திரக் கதைகள் பல்வேறு நாடுகளில் பழங்காலம் தொட்டுப் பிரபலமாக விளங்குகின்றன. அத்தகைய கதைகளுள் ஒன்றே அலாவுதீன் கதை. அலாவுதீன் ஒரு விளையாட்டுச் சிறுவன். ஒரு விதவைத் தாய்க்கு ஓரே மகன். அவனது சித்தப்பா சிறு வயதிலேயே வீட்டை விட்டு எங்கோ காணாமல் போய் விட்டார்.

ஒரு மந்திரவாதி பல பூதங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவற்றினால் செய்ய இயலாத மாபெரும் காரியங்களை செயல்படுத்த மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பூதத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அலாவுதீனைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். அதன்படி அலவுதீனின் சித்தப்பா போல் வந்து அவர்களை நம்பவைத்து அப்பூதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விளக்கு இருக்கும் மலைக்குகைக்கு அலாவுதீனை இட்டுச் செல்கிறான். அலாவுதீனை குகைக்குள் சென்று விளக்கை எடுத்து வரச் சொல்கிறான். அலாவுதீன் குகைக்குள் சென்று அந்த விளக்கை எடுத்து வந்து, தன்னை முதலில் குகைக்குள்ளிருந்து வெளியே வர உதவக் கேட்கிறான். 

ஆனால் மந்திரவாதியோ விளக்கை மட்டும் வெளியே வீசச் சொல்கிறான். அலாவுதீன் மறுக்கவே மந்திரவாதி கோபத்தில் குகையின் வாயிலை மூடிவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின் அலாவுதீன் மந்திரவாதியால் அங்கே விட்டுச் செல்லப்பட்ட உதவியாளனின் உதவியால் தப்பித்துப் பின்னர் பூதத்தின் உதவியால் பெரும் செல்வந்தனாகி பாக்தாத் அரசனின் அரண்மனையை விடப் பெரிய மாளிகை ஒன்று கட்டி பாக்தாத் அரசகுமாரியை மணக்க இருக்கும் நிலையில் மந்திரவாதி இச்செய்தியை அறிந்து விளக்கை அலாவுதீனிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறான். அதன்படி அவன் ஒரு விளக்கு வியாபாரியாக மாறிப் பல புதிய விளக்குகளை எடுத்துக் கொண்டு பாக்தாத் நகருக்கு வந்து பழைய விளக்குக்குப் புது விளக்குத் தருவதாகக் கூறித் தன் வியாபாரத்தை நடத்துகிறான். மந்திரவாதி தனது அடிமையான ஒரு பெண்ணை வெகு காலத்திற்கு முன் அரசனிடம் பணி செய்ய அமர்த்தியிருக்கிறான். அப்பெண்ணின் உதவியுடன் அலாவுதீனின் விளக்கை மந்திரவாதி புது விளக்கைக் கொடுத்து அபகரிக்கிறான். 

இக்கதையை "அலாவுதீனும் அற்புத விளக்கும்" என்ற பெயரில் 1957ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படமாக எடுத்து அதைத் தமிழில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். மந்திரவாதி விளக்கு விற்கும் காட்சியை ஒரு பாடற் காட்சியாக அமைத்துக் கதைக்கு இனிமை சேர்த்திருக்கின்றனர். இப்படத்தில் மந்திரவாதியாகப் பழம்பெரும் நடிகர் எஸ்.வி. ரங்காராவ் நடித்துள்ளார். திருச்சி லோகநாதனின் தீங்குரலில் அமைந்த அப் பாடலைக் கேட்டு மகிழ்வோமா?


திரைப்படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்
இயற்றியவர்: 
இசை: எஸ். ராஜேஸ்வர ராவ், எஸ். ஹனுமாந்தராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்

பழைய தீபம் கொடுங்க ஆஆஆஆ ஆஆஆஅ ஆஆஆ
புதிய தீபம் தருவேனுங்க ஆஆஆஆஆஆ ஆஆஆஆ
மோசமேதும் இல்லை இல்லை
பார்த்து வாங்கிப் போகலாம் ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஏங் ஏங்

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறஞ்ச விலை தான் எல்லோர்க்குமே

காசு பணம் உங்க கிட்ட ராசி தீபம் நம்ப கிட்ட
யோசிக்கணும் மாசில்லாத தீபந்தான்
உண்மையிலே பாக்கப் போனா
சத்தியமா சொல்லப் போனா
குலவிளக்கு இந்த தீபந்தான்

பழைய தீபம் போடுங்க புதிய தீபம் தாரேங்க
பழைய தீபம் போடுங்க புதிய தீபம் தாரேங்க
மோசமேதும் இல்லை இல்லை
பாத்து வாங்கிப் போகலாம் வாங்கய்யா

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜம் தான்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லார்க்குமே

சீமான்கள் வாழ்விலும் ஏமாளி தாழ்விலும்
இருள் நீங்கி ஒளி வீசும் உயிர் தீபமே
சீமான்கள் வாழ்விலும் ஏமாளி தாழ்விலும்
இருள் நீங்கி ஒளி வீசும் உயிர் தீபமே
எல்லார்க்கும் நன்மைதான் என் பேச்சு உண்மை தான்
கண்ணா உன் தீபந்தான் 
விண்ணோடு மண்ணிலே விளையாடும் ரூபமே
தன்னாலே வாழும் எழிலாகுமே ஜோதி
இல்லேன்னா லோகமே இருளாகுமே
தன்னாலே வாழும் எழிலாகுமே ஜோதி
இல்லேன்னா லோகமே இருளாகுமே

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லோர்க்குமே

உன் போல நானடா என் போல நீயடா
உணராத போதிலே சுகமேதடா?
உன் போல நானடா என் போல நீயடா
உணராத போதிலே சுகமேதடா?

எப்போதும் நீதியின் பெயர் ஜோதியாகுமே 
பண்பாகும் தீபம் தான்
எல்லோரும் வாருங்க என் பேச்சக் கேளுங்க
எல்லோரும் வாருங்க என் பேச்சக் கேளுங்க
இருக்குங்க புதிய தீபம் ஏராளங்க இதில்
எதிர்கால பலனுண்டு நிஜந்தானுங்க
இருக்குங்க புதிய தீபம் ஏராளங்க இதில்
எதிர்கால பலனுண்டு நிஜந்தானுங்க ஹாங்

விநோத தீபம் நவீன தீபம்
நம்பல்கி வியாபாரம் நிஜந் தான்
குறைஞ்ச விலை தால் எல்லார்க்குமே ஹாங்
குறைஞ்ச விலை தான் எல்லார்க்குமே

வியாழன், 7 ஜனவரி, 2016

தென்னங்கீற்று ஊஞ்சலிலே

நமது பாரத தேசத்தில் பண்டைக் காலத்திலிருந்தே கடவுளர் பலர் இருப்பதாக நம்பி வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள். அக்கடவுளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருப்பதாகவும் நம்புகிறோம். அதே போல் கிரேக்க நாட்டிலும் பல கடவுளர் உளர் எனும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருப்பதாகவும் நம்பி வந்துள்ளனர். உலகத்தையும், பல்வித உயிர்களையும் படைக்கும் கடவுள் நம் நாட்டில் பிரம்மா என்று அழைக்கப்படுகிறார். பிரம்மன் படைத்த யாவற்றையும் தீய சக்திகளிடமிருந்து அதிலும் குறிப்பாக அசுரர்களிடமிருந்து காக்கும் கடவுள் விஷ்ணு என்று அழைக்கப் படுகிறார். அசுரர்களும் மானிடர்கள் போன்றொரே ஆவர். அரக்கர் என்று தமிழில் சொல்லபடுவோர், ஆனால் தீய செயல்களைத் தயங்காமல் செய்யும் குணமுடைய 
பாதகர்கள். நீதி, நேர்மையற்றவர்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அரக்கர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்

இரக்கமென்றொரு பொருள் இலாத நெஞ்சினர்
அரக்கரென்றுளர் பலர் அறத்தின் நீங்கினார்

என்று குறிப்பிடுகின்றார் தன் இராமாயண காவியத்தில்.

உரிய காலத்தில் யாவற்றையும் அழிக்கும் பணியை செய்யும் கடவுள் சிவன் என்று அழைக்கப் படுகிறார். 

சமீப காலமாக உலகில் நடைபெறும் வன்முறை, சாதிக் கலவரங்கள், பெண்களின் மேல் அடக்குமுறை மற்றும் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் கற்பழிக்கும் தீமைகள், காடுகளையும், விளை நிலங்களையும் திட்டமிட்டு அழிக்கும் அரசியல் சதிகள், நீதிமன்றங்கள் போதிய அளவில் இல்லாமை, நீதிபதிகள் பற்றாக்குறை, நீதித் துறை செயல்படும் காலம் மிகவும் குறுகியுள்ளமை, இலவசமாக இருந்த கல்வி விலைக்கு விற்கப்படும் கொடுமை, சாராயம் விற்றவர்கள் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் வியாபார ரீதியில் நடத்தி மக்கள் உழைத்து ஈட்டும் பணம் அனைத்தையும் வழிப்பறி செய்வதற்கொப்பாகப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளை எனும் வகையில் நம் நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கையில் நமது பூமி இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பதே ஐயமாக உள்ளது. 

வெறும் காகிதத்தில் அச்சிடப்பட்ட பணம் எனும் மாயப் பிசாசு மனிதர்களை மதியற்றவர்களாக ஆக்கி ஊழிக் காற்றைப் போல் அலைக்கழிக்கிறது. மனிதர்களை இவ்வாறு அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது யார்? 

அழிக்கும் கடவுளா அல்லது மனித வடிவில் திரியும் சாத்தான்களா?

61 ஆண்டுகள் நிறையப்பெற்ற நான் சிறுவனாயிருக்கையில் கிராமங்களில் என் தந்தை குடியிருந்திருக்கிறார். அங்கே அன்று கண்ட இயற்கை வளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூமியின் பெரும் பகுதி கட்டடங்களாக மாறி விவசாயம் குறைந்து, நீர் வளம் கெட்டு, காற்றும் விஷமாகிப் போன நிலையைத் தற்காலம் காணுகையில் மனம் சொல்லொணாத் துயருறுகிறது. வருங்கால சந்ததிகள் வாழத் தேவையான வளங்களை நம் தலைமுறையினர் மனம் போன போக்கில் அழித்துத் தாங்களும் இன்புறாமல் பிறரையும் இன்புற விடாமல் தீய வழியில் செல்வது கவலைக்கிடமளிப்பதாக உள்ளது. இயற்கையை இன்பமயமாக்கும் பல உயிரினங்களும் பறவைகளும் இன்று இருக்கும் இடமே தேரியவில்லை. அத்தகைய ஒரு அரியதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் (endangered species) சிட்டுக்குருவி. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் (1987 அளவில்) நாம் அம்பத்தூரில் என் மனைவியுடன் குடியிருக்கையில் எங்கள் வீட்டுப் பலகணியில் அழகிய ஒரு சிட்டுக்குருவி கூடுகட்டி வாழ்ந்திருந்தது. அது என் கையில் வைத்து நான் தரும் தானியங்களைக் கொத்தித் தின்னும் காட்சியை நான் புகைப்படமெடுத்து வைத்திருக்கிறேன்.

உலகம் அழிவிலிருந்து மீள வேண்டுமெனில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். இரும்புத் தாது, நிலக்கரி, அலுமினியத் தாது, கருங்கல், மணல் முதலான பொருட்களுக்காக வனங்களும், மலைகளும் ஆற்றங் கரைகளும் தொடர்ந்து அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். நம் நாட்டில் சட்டவிரோதமான சட்டங்கள் பல நம் நாட்டை ஆள்வோரால் அடக்குமுறையில் ஆட்சி செய்ய வேண்டுமென்றே இயற்றப்படுகின்றன. இவற்றை மாற்றி மக்களுக்கு நன்மை தரும் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்குமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மனித இனமும் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து விரைவிலேயே அழிவதை யாரும் தடுக்க இயலாது.

இங்கே ஒரு சிட்டுக்குருவி தென்னங்கீற்றில் ஊஞ்சலாடிக்கொண்டு இயற்கை வளங்களின் இனிய சுகத்தை அனுபவித்துக் கொண்டு உடன் கலந்து மகிழத் தன் பெட்டைத் துணையைத் தேடுகின்றது. இனிமையான அந்த கானத்தைக் கேட்டு மகிழ்வோமா?



திரைப்படம்: பாதை தெரியுது பார்
இயற்றியவர்: ஜெயகாந்தன்
இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி

album/paathai-theriyuthu-paar 

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

நீலமேகம் ஏழு வண்ண
ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

நீலக்கடல் ஓலமிட்டு
இங்கிருந்தும் கூவுது
அதுவே பாடி நடக்குது
கடலில் கலக்கத் துடிக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

திங்கள், 4 ஜனவரி, 2016

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

தினம் ஒரு பாடல் - ஆகஸ்டு 15, 2014

ஒருவன் வாழ்வில் எந்த ஒரு காரியத்திலும் சித்தியடைய முதற்கண் அவனது மனம் அவனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஐம்புலன்களின் வழியே நுகரும் பலவிதமான இன்பங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்க மனமே தூண்டுகிறது. அத்தூண்டுதலுக்கு அடிமையாவோர் தம் லக்ஷியங்களிலிருந்து தம்மையறியாமலே விலகி இன்பநாட்டத்தில் ஈடுபட்டுத் தம் பொன்னான காலத்தை வீணடித்துப் பிற்காலத்தில் வருந்துவது நிச்சயம். 

இளம் வயதில் கல்வி கற்கும் பருவத்தில் கல்வியில் மனதைச் செலுத்தித் தேராமல் போவோரும் போதிய அளவு மதிப்பெண்களைப் பெறாதவரும் அதன் பின்னர் வேலை கிடைக்காமலும் தம் வயதையொத்த நண்பர்களை விடக் குறைவான ஊதியத்திற்கு இரண்டாம் தர, மூன்றாம் தர நிறுவனங்களில் வேலை செய்ய நேர்ந்தும் அல்லல் பட்டு வாழ்வில் முன்னேற இயலாமல் கீழ்நிலையிலேயே கிடந்து வாடுவர். 

தன் மனதிற்குப் பிடித்த ஒருவர் மேல் காதல் கொண்டவர் உரிய காலத்திற்குள் தன் காதலைத் தன் மனதிற்குப் பிடித்தவரிடம் தெரிவிக்காமல் போனால் அவரது காதல் தோல்வியில் முடிவதும் நிச்சயம். இதற்கெல்லாம் காரணம் அவரது மனம் அவரது 
கட்டுப்பாட்டில் இல்லாதிருத்தலே ஆகும்.

"மந்திரம் கால் மதி முக்கால்" என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருளாவது எந்த ஒரு காரியத்திலும் வெற்றி பெற மந்திரம் அதாவது மனதின் திறம் கால் பங்கும் மதி அதாவது அறிவு முக்கால் பங்கும் காரணமாகின்றன என்பதேயாம். 

யோகம் பயிலுகையில் முதலில் உடற்பயிற்சியும், அதன் பின்னர் சுவாசப் பயிற்சியும் செய்வித்து இறுதியில் மனப் பயிற்சியைக் கற்பிக்கிறார் ஒரு யோகா ஆசிரியர். உடல் பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் மனதைப் புலன்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க மிகவும் அவசியமாகின்றன. மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் மனப் பயிற்சி செய்கையில் மனதில் திறன் கூடுகிறது. கட்டுப்படா மனத்தைப் பயிற்சி செய்விக்க இயலாது. 

ஒரு மாணவன் ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்கவென்று பள்ளி கல்லூரிகளில் ஒதுக்கப் படும் நேரத்தைத் தவற விட்டாலோ, கல்வி பயிலுகையில் ஆசிரியர் சொல்லித் தருவதை கவனியாமல் இருந்தாலோ அவன் கல்வியில் திறமை பெற இயலாது. அது போலவே யோகம் பயிலும் மாணவனும் மனதை முதலில் கட்டுப்படுத்தத் தவறிடின் யோகம் கைகூடாது. அனைத்திற்கும் மேலாக மனம் ஐம்புலன்களின் வழியே இழுத்துச் செல்லப்பட்டு இன்பநாட்டம் அதிகரிக்கையில் ஒருவர் எவ்விதப் பாபச் செயலையும் செய்யத் தயங்காத தன்மையை அடைவர். 

அது அவரை மனித நிலையிலிருந்து தாழ்த்தி மிருக நிலைக்குக் கொண்டு சென்று விடும்.

ஒரு குரங்கு எவ்வாறு மரத்தின் கிளைகளிடையேயும் மரங்களிடையேயும் தாவுகிறதோ அதைப் போலவே மனம் ஆசைகளின் வயப்பட்டு ஒரு நிலையில் நிற்காமல் தாவிடும். ஒரு குரங்கு எவ்வாறு மரத்திலிருக்கும் பழங்கள் யாவற்றையும் பிய்த்தெரிந்து தனக்கே உணவில்லாமல் ஆக்கி அழிவுப் பாதையில் செல்கிறதோ அதே போல் மனமும் ஒரு கட்டுப்பாடற்ற மனிதனை அழித்து விடுவதோடு அவனைச் சேர்ந்தவர்களையும் சமுதாயத்தையும் அழித்து விடும் அபாயகரமான தன்மையடைகிறது. 

நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 67 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் பசியும் பஞ்சமும், நோயும், ஏமாற்றும், கொலைகளும் கொள்ளைகளும், பெண்களைக் கொடுமைப் படுத்தும் கொடூரமும், பச்சிளம் குழந்தைகளைக் கற்பழித்துக் கொல்லும் படுபாதகங்களும் தொடர்ந்து நடைபெற்று சமுதாயம் அமைதியற்று விளங்கக் காரணம் மக்களின் மனங்கள் கட்டுப்பாடற்றுத் தவறான வழியில் ஆசைவயப்பட்டுச் செயல்படுவதனாலேயே ஆகும். மக்கள் என்றால் நாட்டின் குடிகளாக விளங்கும் பொதுமக்களும் ஆட்சிப் 
பொறுப்பில் இருக்கும் அதிகார வர்க்க மக்களும் சேர்த்தே கொள்ள வேண்டும்.



திரைப்படம்: மனம் ஒரு குரங்கு
இயற்றியவர்: வீ. சீதாராமன்
இசை: டி.பி. ராமச்சந்திரன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு