சனி, 9 ஜனவரி, 2016

சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்

தினம் ஒரு பாடல் ஆகஸ்ட் 26, 2014
நமது பாரத தேசத்தில் தொன்று தொட்டு வழிபட்டு வரும் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகியோர்ஒருவரோடொருவர் உறவு கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். விஷ்ணுவின் உந்தித் தாமரையில் உதித்தவர் பிரம்மா. விஷ்ணு சிவனார் மனைவியான பராசக்தியின் சகோதரர். பிரம்மாவுக்கு சரஸ்வதி, விஷ்ணுவுக்கு மஹாலக்ஷ்மி என மனைவியர் அமைந்துள்ளனர். சிவனுக்கு விநாயகர், முருகன் என இரு பிள்ளைகள். 

இவ்வாறாக தெய்வங்களும் குடும்பங்களாக விளங்கி இல்லறத்தில் ஈடுபடுவதாக ஐதிகம். இத்தெய்வங்களுக்கு முறைப்படி கடமைகளும் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அதன் படி ஆக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் எனவும், கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு மஹாலக்ஷ்மி, வீரத்துக்குப் பராசக்தியெனவும் கொள்ளப்படுகிறது.

அதே போல வாயு, வருணண், அக்னி, அஷ்டதிக்கஜங்கள் மற்றும் ஏனைய தேவர்கள், சிவனின் பூதகணங்கள் அனைவருக்கும் உரிய கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேவர்களின் தலைவன் தேவேந்திரன். அவனது சபையில் நடனமாடும் தேவமாதர்கள் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, மேனகா முதலானவர்கள். 

இவ்வாறாக தேவர்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாய அமைப்புடனேயே விளங்குவதாகக் கொள்ளப்படுகிறது. தேவர்களுடைய எதிரிகள் ராவணன், கும்பகர்ணன், சூரன், ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் போன்ற அசுரர்கள். தேவர்களுக்கு குரு வியாழ பகவான் 
எனப்படும் பிரகஸ்பதி. அதே போல் அசுரர்களுக்கு குரு சுக்கிரன் அல்லது வெள்ளி என அறியப்படும் சுக்கிராச்சாரியார் ஆவார்.

இவ்வாறு தெய்வங்களையும் தேவர்களையும் குடும்ப, சமுதாய உறுப்பினர்களாக வைத்து வழிபடுவதன் நோக்கம் "இல்லறமல்லது நல்லறமன்று" எனும் தர்மத்தை  உலகத்தவர் உணர வேண்டும் என்பதே. இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், சிவபுராணம் முதலிய காவியங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் தர்மத்தை மனிதர்களுக்கு உபதேசிக்கவே முற்காலத்தில் உலக நலன் கருதித் தவம் செய்த மாமுனிவர்கள் பாடுபட்டனர். 

மனித குலம் தர்ம மார்க்கத்தில் செல்லும் வரை உலகம் நல்ல நிலையில் இருக்கும். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்குகையில் உலகம் அழியும். இதுவே நியதி. விஞ்ஞானரீதியிலும் இதுவே உண்மை. 

கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் எவ்விதத்தில் அன்பு பாராட்ட வேண்டும் எனவும், பிள்ளைகள் தாய் தந்தையரிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனவும், வாழ்வில் மனிதர்கள் செய்யத் தக்கவை எவை, செய்யத்தகாதவை எவை என யாவரும் 
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் நிகழும் பலவித சம்பவங்களின் மூலம் எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான கதையே சம்சாரம். இக்கதை தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் திரைப்படமாக உருவாகியது 1951 
காலங்களில். 

கதையின் தலைப்புப் பாடல் கதையின் சாராம்சத்தை சுருக்கமாக விளக்குவதாகவே அமைந்துள்ளது. இனிய குரலில் ஏ.எம். ராஜா பாடும் அப்பாடலைக் கேட்டு மகிழ்வோம் இன்றைய தினம் ஒருபாடலில்.

திரைப்படம்: சம்சாரம்
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: சங்கர சாஸ்திரி
பாடியவர்: ஏ.எம். ராஜா



சம்சாரம் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
ஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏ
கணவன் மனைவி ஒன்றாய் இரு கண்ணும் மணியும் பொலே 
இணை பிரியாது இளம் பாலகர் விளையாடும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
உறவோடு உண்ண வேண்டும் ஊரொடு வாழ வேண்டும் 
பெரியோரைப் பணிய வேண்டும் சிறியோரைக் காக்க வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம் 

சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
சம்சார சாகரத்தில் துயர் தாங்கொணாதபோதும் 
தாரமோடு கணவன் அதைத் தாங்கி வாழ வேண்டும் 
சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம் 
சுக ஜீவன ஆதாரம் 
சம்சாரம் சம்சாரம் சம்சாரம்

2 கருத்துகள்: