ஞாயிறு, 6 மார்ச், 2016

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

தினம் ஒரு பாடல் 2016 மார்ச் 5

வாழ்க்கை என்பது என்னவென்றே புரியாமல் மனித இனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. நாம் காணும் பொருட்களும், மனிதர்களும், விலங்குகளும் பிற உயிர்களும் ஒவ்வொன்றாக மறைந்து போகின்றன. நம் மனதுக்குப் பிடித்த செல்வங்களைச் சந்தர்ப்பவசத்தால் இழக்க நேரிடுகிறது. நமக்குப் பிரியமானவர்கள் நம்மை விட்டும் இவ்வுலகை விட்டும் எதிர்பாராமல் சென்று விடுகின்றனர். நாம் வெகுகாலம் கனவு கண்ட ஒளிமயமான எதிர்காலம் வெகு தொலைவில் எட்டாத தூரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது. அரிய வாய்ப்புக்கள் நம்மைத் தேடி வருவது போல் வந்து கை நழுவி விடுகின்றன. இத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளால் மனம் குழம்பி வருத்தமடைய நேரிடுகிறது. நம்மிற் பலர் இத்தகைய ஏமாற்றங்களால் மனமுடைந்து வாழ்வையே வெறுக்கும் நிலைக்கும் வருகின்றனர் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். 

இத்தகைய மனச் சோர்வு ஏற்படக் காரணம் நாம் இவ்வுலகில் அழியும் பொருட்களின் மேல் கொள்ளும் பற்றும் நமது செயலில் ஏற்படும் தவறுகளைப் பெரிதாக எண்ணி மலைக்கும் ஆணவமுமேயாகும். இந்த உலகில் எந்தச் செயலுமே நம்மைக் கேட்டு நடப்பதில்லை. நம்மைக் கேட்டு நாம் பிறக்கவில்லை. பூமி நம்மைக் கேட்டுச் சுழலவில்லை. செடி கொடிகள், மரங்கள் முதலியவை நம்மைக் கேட்டு வளர்வதில்லை. இறக்கும் ஜீவர்கள் நம்மிடம் சொல்லிக் கொண்டு இறப்பதில்லை. எதுவுமே நம் கையில் இல்லாத பொழுது எதற்கும் நாம் ஏன் பொறுப்பேற்க வேண்டும். நாம் செய்யத் தக்கதை, நமக்கு இடப்பட்ட பணியை நாம் முழு மனத்துடன் அக்கரையாகத் திறம்படச் செய்ய முயல்வதொன்றே நம் கடமையாகும். செய்யும் செயலின் விளைவுகளில் நமக்கு அதிகாரமில்லை. வெற்றியும் தோல்வியும் விதிவசத்தால் விளைகின்றன. நான் நன்றாகவே படித்தேன், நன்றாகவே பரீட்சை எழுதினேன், இருந்த போதிலும் தேறவில்லை எனும் நிலையில் சில மாணவர்கள் தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவலங்கள் ஏற்படக் காரணம் வாழ்வை அவர்கள் உள்ளபடி உணரவில்லை என்பதேயாகும்.

வாழ்க்கை என்பது உலகில் பிறந்த ஜீவர்கள் யாவருக்கும் விதிக்கப்பட்ட கடமை. அதனைத் திறம்படச் செய்வதே நம் திறமை. வெற்றிகள் வருகையில் ஆர்ப்பரிப்பதும் தோல்வி காண்கையில் துவண்டு போவதும் அறியாமை. வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதி நடந்ததை மறந்து அடுத்துச் செய்ய வேண்டிய காரியத்தில் கவனம் செலுத்துவதே அறிவுடைமையாகும். அவ்வாறில்லாமல் இழப்புகளால் மனம் பேதலித்து விரக்தியுற்று வருந்துவதும் வாழ்வை வெறுப்பதும் நமது பலவீனமே என்பது சான்றோர் நமக்கு அறிவுறுத்திய முக்கியமான பாடமாகும். நம் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்கள் தம் மரணத்தை எந்த நொடியிலும் எதிர்பார்த்த வண்ணமே கடமையாற்றுகின்றனர். அச்சமின்றித் தம் உயிரைத் துச்சமென மதித்து தேச சேவையில் நமக்காகக் குளிர் நடுக்கும் பனி மலைகளிலும் கொடும் வெயில் வாட்டும் வன வனாந்தரங்களிலும் பாதையே இல்லாத பல நிலப் பரப்புகளிலும் வான் வெளியிலும் கடலிலும் என அயராது பயணித்து நாட்டு மக்களுக்காக உழைக்கின்றனர். அவர்கள் போன்ற மனத் திண்மையுள்ளவர்களைக் கண்டு நாமும் நம் மனதையும் உடலையும் வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் நமது குறிக்கோள்களை அடைய முடியும். மனம் பேதலித்தல் கோழைத்தனம்.

அவ்வாறு மனம் பேதலிக்கையில் நமக்கு ஆறுதல் கூறவும் தைரியமூட்டவும் எப்பொழுதும் நம் உற்றார் உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் பிறர் உதவுவர் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவரவர் கவலைகளே அவரவர்களுக்குப் பெரிதாகத் தெரிவதால் பிறரது நலத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்வோரே இவ்வுலகில் அதிகப்படியானோர் ஆவர். அந்தக் குறையைத் தீர்க்கவென்றே நமக்கெல்லாம் வரப்பிரசாதமாக அமைவது இசையும் பாடல்களும். இசையால் மனது இசைந்து இலகுவாகிறது. மனதின் பாரங்களை இறக்கி வைத்தது போன்ற ஆறுதல் நிலையை இசை நமக்குத் தருகிறது. முன்பொரு சமயம் சென்னையில் ஒருவர் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளால் துவண்டு போன மனத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கையில் அவர் காதுகளில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடிய, "மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?" எனும் பாடல் எங்கிருந்தோ ஒலித்தது கேட்டதனால் அவர் அப்பாட்டில் தன் மனதைப் பறிகொடுத்த நிலையில் தைரியமடைந்து வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் துணிவு பெற்றுத் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டார் என்பது உண்மைச் செய்தி.

கண்ணதாசன் மட்டுமின்றி அவருக்கு முன்னர் வாழ்ந்த புலவர்களும் கவிஞர்களும் இத்தகைய அரிய தத்துவப் பாடல்கள் எண்ணிறந்தவற்றை இயற்றி நமக்களித்துள்ளனர்.

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

என வீர முழ்க்கம் செய்து தமிழ் மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டி உயிரைத் துச்சமென மதித்துப்ப் போராடத் தூண்டி ஆங்கியேயர் நம் நாட்டை விட்டோடப் பாடினார் பாரதியார். அதே இலட்சியப் பாதையில் கண்ணதாசனுக்குப் பின் வந்த கவிஞர் முத்துலிங்கம் இயற்றி இசை ஞானி இளையராஜா இசையமைத்துப் பாடிய பாடல் இன்றைய பாடலாக இடம் பெறுகிறது.


திரைப்படம்: வாழ்க்கை
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: இளையராஜா
ஆண்டு: 1984

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

வாராத செல்வங்கள் வாழ்வினில் வந்தாலே
சேராத சொந்தங்கள் சேர்ந்தாடுமே
இல்லாமல் போனாலே ஏழையும் ஆனாலே
தன் தேக நிழல் கூடப் பகையாகுமே
தன் கையே வாழுமே தக்க துணையாகுமே
தன் கையே வாழுமே தக்க துணையாகுமே
இருள் போனால் ஒளியாகும்
மரமே பழுத்தால் பறவைகள் கிளையில் காணுமே

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

நாட்டுக்கு நாள் தோறும் உழைத்திடும் நல்லோரை
எல்லோரும் மலர் தூவிக் கொண்டாடுவார்
எந்நாளும் தேயாத காவியக் கதையாகி
சரித்திரப் பொன்னேட்டில் உயிர் வாழுவார்
தெய்வீகம் என்பது அன்பு செய்து வாழ்வது
தெய்வீகம் என்பது அன்பு செய்து வாழ்வது
விதையாகி விழும் போது
பயிராய் கதிராய் உலகினில் அறங்கள் தழைக்குமே

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே
வாழ்க்கைப் பாதையில் மேடு பள்ளங்கள்
வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ?

மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக