வியாழன், 31 டிசம்பர், 2009

அதிசய ராகம் ஆனந்த ராகம்

தமிழ்க் கவிஞர்களுள் சாமான்ய மக்கள் முதல் கல்வியிலும் தமிழ் இலக்கிய ஞானத்திலும் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் கவியரசு கண்ணதாசன். கருத்தைக் கவரும் தமிழ்க் கவிதைகளை எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு எளிமையாகவும், இனிமையாகவும் திகழும் வித்த்தில் இயற்றும் திறனுடன் கவியரசர் இயல்பாகவே இசை ஞானம் கொண்டு விளங்கியதால் இவரது பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதைகளான திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி,கே. இராமமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் முதலானோர், இசையுடன் இசைந்த இவரது செந்தமிழ்க் கவிதைகளுடன் இணைந்து விளங்குமாறு பல பாடல்களையும், இராகமாலிகைகளையும் தமிழ்த்திரையில் சிறப்புடன் வழங்கியுள்ளனர்.

கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் யான் கண்டு களித்தவை ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர் கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை விட்டகலாததாகும்.

இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே!

இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான் உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப் போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு.


அதிசய ராகம் ஆனந்த ராகம்


http://tfmpage.com/forum/archives/23209.5180.07.11.34.html

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டி: 1975

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக