ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

தினம் ஒரு பாடல் _ நவம்பர் 28 2015

"பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு" என்றொரு வழக்கு தொன்றுதொட்டே வழங்கி வருகிறது. நண்பரைப் போல் உறவாடி பகைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தக்க சமயம் பார்த்து நம்பிக்கை துரோகம் செய்து பகைவரை அழிப்பது அரசியலில் ஒரு தந்திரம். இதை உலகெங்கிலும் பல நாடுகளை ஆட்சி செய்த அந்நாளைய மன்னர்களும் இந்நாளைய அரசியல்வாதிகளும் சிறப்பாகவே செய்து வருகின்றனர்.  இவ்வாறு மக்களை மதரீதியில் பிரித்து வைத்து ஒற்றுமையைக் குலைத்து, ஜாதி மதக் கலவரங்களைத் தூண்டி அத்தகைய நிலைமையைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவை ஆங்கிலேயர் 200 ஆண்டுகள் அடிமைப் படுத்தி ஆண்டு வந்தனர். இவ்வாறு மதக் கலவரத்தைத் தூண்ட வெள்ளையர்கள் நம் நாட்டின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை உண்மைக்குப் புறம்பாகத் திரித்துக் கூறியும் வரலாற்று ஆதாரங்கள் பலவற்றை அழித்தும் பொய்க் கதைகளைப் பரப்பினர்.

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி பன்மடங்காகப் பெருகி நாடெங்கும் மக்கள் மதவெறித் தாக்குதலில் ஈடுபட்டு ஒருவரோடொருவர் முரண்பட்டுக் கொலைபாதகச் செயல்களைப் புரியவும் தயங்காத சூழ்நிலையை உருவாக்கி விட்டனர் சில சுயநல அரசியல்வாதிகள். ஒரு மதத்தவரை உயர்த்திப் பேசுவதும் பிற மதத்தவரைத் தாழ்த்துவதும் இவர்களது தந்திரம். இவ்வாறு மாறுபட்ட அணிகளில் இயங்கி ஒருவரோடொருவர் சண்டை பிடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுவதில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஒரு கட்சியினர் புரியும் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து மாற்றுக் கட்சியினர் குற்றவாளிகளைத் தப்புவிப்பது எழுதப்படாத ஒரு ஒப்பந்தமாகவே நம் நாட்டில் நிலவுகிறது.

ஜனநாயகம் என்பது நம் நாட்டில் உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஐந்தாண்டுகளுக்கொரு முறை மத்திய அரசையும் மாநில அரசுகளையும், உள்ளாட்சி நிர்வாகிகளையும் தேர்வு செய்ய வாக்களிப்பது ஒன்றே ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது. வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்வு செய்த பின்னர் மக்கள் தூக்கி எரியப் படுவதும், அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கையில் தந்த வாக்குறுதிகளைத் தாம் வென்ற பின்னர் நிறைவேற்றாமலேயே தட்டிக் கழித்துத் தமது சொத்து சுகங்களைப் பெருக்குவதிலேயே குறியாகச் செயல்பட்டு மக்களை நிரந்தரமாக ஏமாற்றிப் பிழைப்பது வாடிக்கையாகி விட்டது.

இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளை முறியடிக்க மக்கள் செய்யத்தக்கது ஒன்றே ஒன்று மட்டுமே. எக்காராணம் கொண்டும் தம்மில் ஒற்றுமை நீங்காமல் பாதுகாப்பாக அனைத்து மதத்தினரும் தமது சொந்த சகோதரர்களாக பாவித்து நாம் இந்தியர்கள் எனும் உணர்வுடன் வாழ்ந்து நேர்மையற்ற அரசியல்வாதிகளை அரசியல் களத்தில் நிற்கவொட்டாமல் செய்வதொன்றே அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும் உபாயமாகும்.

மத நல்லிணக்கத்தைப் பேணிக் காப்போம்! அனைத்து மதத்தினரையும் அரவணைத்து பாரதத் தாயின் புதல்வர்கள் என்ற ஓரே அடையாளத்துடன் வாழ்வோம்! ஜனநாயகத்தை மீட்போம்! நாட்டைக் காப்போம்!


இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: ஜிக்கி, டி. எம். சௌந்தரராஜன்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு ஒ ஓஓஓ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதம் கொள்ளாமல்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை
சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை

ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை
சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை

உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை
ஓடி மறைந்திடும் மடமை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு

நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர் வழி வேண்டும் உறவில்
பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்

நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர் வழி வேண்டும் உறவில்
பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்

காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நினைவில்
கண்டிடலாம் அன்பு நினைவில்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதம் கொள்ளாமல்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு

புதன், 10 பிப்ரவரி, 2016

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

மானிடப் பிறவியின் மகத்துவமறியாமல் மனிதர்களெல்லோரும் அற்ப விஷயங்களுக்காக ஒருவரோடொருவர் கருத்து வேறுபாடு கொண்டு அதற்காக ஒருவரையொருவர் சாடுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்துத் தாங்களும் துயருற்றுப் பிறரையும் வருத்துகின்றனர். வாழ்வில் எத்தனையோ இன்பங்கள் இருக்கத் துன்பத்தைத் தேடியடைந்து வருந்தி மடிகின்றனர். இதில் ஒரு சாரார் பெரும் ஞானியர் போன்ற 
தோற்றத்தைத் தரவல்ல உடைகளையணிந்து கொண்டு ஏனையோர் செய்யும் அதே துர்ச் செயல்களைத் தூண்டிவிடுகின்றனர். இவர்கள் உண்மையில் ஞானியரா என்று சிந்தித்துப் பார்க்க நம்மிப் பெரும்பாலோர் தவறிவிடுகின்றோம். காரணம் ஞானியரின் உண்மை இலக்கணம் என்னவென்று முழுமையாக நாம் அறியாமையே ஆகும். இதனை மஹாகவி பாரதியார் தமது கண்ணன் என் சற்குரு எனும் கவிதையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

கவிதையின் கருத்தாவது: பாரதி சாத்திரங்கள் பலவற்றைத் தேடி அவற்றில் உண்மையில்லையெனவும் பழங்கோத்திரங்கள் சொல்லும் மூடர் தம் பொய்ம்மைக் கூடையே என்றும் தெளிந்து மனம் வாடி ஆத்திரமுற்று நித்தம் ஆயிரம் தொல்லைகள் சூழத் துயருற்று வாழ்வில் நொந்திருந்த காலம் ஒரு நாள் நீர் நிரம்பிய நிலையில் ஓடும் யமுனை நதிக் கரையிலே தடியூன்றிச் சென்ற ஒரு கிழவனாரின் ஒளி பொருந்திய முகத்தையும் 
அவரது தெளிவான விழிப் பார்வையையும் அவரது வெண் தாடியையும் கண்டு அவர் தனக்கு நன்மை செய்வாரென நம்பி அவரைப் பணிந்து வேண்டுகையில் அவர், "தம்பி, உன் உள்ளத்திற்கு ஏற்றவன் நித்திய மோனத்திருப்பவனும் வடமாமதுரைப் பதியை ஆள்பவனும் ஆன கண்ணனேயாவான். நீ அவனிடம் செல்" எனப் பணிக்கிறார்.

பாரதியார் வடமதுரைப் பதி சென்று மன்னன் கண்ணனைக் கண்டு வணங்கித் தன் ஊர், பெயர், கருத்து அனைத்தையும் சொல்லி நன்மை தர வேண்டுகிறார். கண்ணனோ காமனைப் போன்ற வடிவமும் இளங் காளையர் நட்பும் பழக்கமும் கெட்ட பூமியைக் காக்கும் தொழிலிலே எப்போதும் செலுத்திடும் சிந்தையுடன் ஆடலும் பாடலுமாக விளையாட்டுத் தனமாக இருப்பதைக் கண்டு பாரதிக்குக் கோபமுண்டாகிறது. 

யமுனைக் கரையில் கண்ட கிழவரைக் கொல்ல வேண்டுமென உள்ளத்திலே எண்ணுகிறார். சிறு நாட்டைக் காக்கும் மன்னவன் கண்ணன் நாளும் கவலையில் மூழ்கித் திளைப்பவன், இவன் தவப் பாடு பட்டோர்க்கும் விளங்கிடா உண்மையைப் பார்த்தெங்ஙனம் கூறுவான் என்று கருதியிருக்கிறார். அப்போது கண்ணன் அவரத் தனியே அழைத்துச் சென்று ஞானம் என்னவென்று விளக்குகிறான்.

 "நெஞ்சில் ஒன்றும் கவலை இல்லாமலே சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே தனை வென்று மறந்திடும் போதினில் அங்கே விண்ணையளக்கும் அறிவுதான்" என்றுரைத்துப் பின் சந்திர சூரியர் மற்றும் உலகனைத்தும் பற்றிய விளக்கங்களை அளித்து ஞானக்கண்ணைத் திறக்கிறான்.

தான் என்ற ஆணவத்தை வென்று சிற்றின்பங்களை மறந்து உள்ளம் தெளிவான நிலையில் தன்னை மறந்த நிலையில் தானே தம்முள் வந்து புகும் ஞானமாகிய மெய்யறிவு விண்ணையளக்கும் என்பது பொருள்.

அத்தகைய மெய்யறிவு பெற்றவர்கள் இன்று நம்மிடையே வாழ்வதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. நாமும் அவர்களைப் போன்று மெய்யறிவு பெற்று ஞானமெய்திப் பேரின்பமடைவதே வாழ்வின் நோக்கம். 

அதை விடுத்து மண், பொன், பெண் ஆசைகளை வளர்த்துக் கொண்டு பிறருடன் முரண்பட்டுப் போராடி உடல் நலத்தையும் மன நலத்தையும் இழந்து வயோதிகமடைந்து நோயுற்று ஏன் வாழ்ந்தோமென்றே தெரியாத நிலையில் மரணமடைவதின் என்ன சுகம் இருக்கும்? அத்துடன் பலர் மதுவுக்கு அடிமையாகி இருக்கின்ற சிறிதளவு நல்வாழ்வையும் சீரழித்து ஆரோக்கியம் அழிந்து மருத்துவமனைகளில் சென்றும் நோய் தீராமலே 
அவதியுற்றுச் சின்னாபின்னமாகி சித்திரவதைக்குள்ளாகின்றனர்.

மதுவிற்கு அடிமையாகப் பல காரணங்களை மனிதர்கள் சொன்னாலும் அவையெல்லாம் அவனது மனோ பலவீனத்தை மறைக்கக் கூறும் சாக்கேயன்றி வேறில்லை. ஒரு இசை மேதை தன் மனைவியைத் தவிர்த்து வேறுஒரு பெண்ணிடம் காதலுற்று அதனால் ஏற்படும் துயர்களை மறக்க வேண்டு மதுவிற்கடிமையாகிறார். மதுவருந்திய நிலையிலேயே மேடைக் கச்சேரியிலும் பாடுகிறார். இப்பாடல் காட்சியில் அமைந்த ஜேசு
தாஸ் அவர்களின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் மதுவுக்கடிமையாகாமல் நாட்டு மக்களை மீட்கும் சேவையில் ஈடுபடும் பல நல்ல உள்ளங்களுக்கு ஒரு காணிக்கை!


திரைப்படம்: சிந்து பைரவி
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து,
இசை: இசைஞானி இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே தினம் தினம்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

செவியில்லை இங்கொரு இசையெதற்கு?
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்து விட்டான்
ராகம் தாளம் மறந்து விட்டான்
ரசிகனின் கடிதத்தைக் கிழித்து விட்டான்
கடற்கரையெங்கும் மணல் வெளியில்
காதலி காலடி தேடினான்
மோஹனம் பாடும் வேளையிலும்
சிந்துவில் ராகம் பாடினான்
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழிழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திடப்

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்து விட்டான்
இசைக்கொரு குயிலென்று ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆ
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலைத் தானின்று சுரம் பிரித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்து விட்டான்
மானத்தின் மானத்தை வாங்கி விட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன் முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்பு
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

செவியில்லை இங்கொரு இசையெதற்கு?
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு?
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
ஏஏஏஏஏ ஏஏஏஏ

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்

கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், போதை மருந்து விற்பவர்களும், பெண்களின் கற்பைச் சூறையாடுவோரும் இன்னும் இத்தகைய பெரும் குற்றவாளிகளும் அரசியலில் இருக்க நாடு நாசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் நம் மக்களில் பெரும்பாலோர் தங்களுக்கென்ன என்று தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று விதவிதமாக உண்டு களிப்பதிலும், வேறு பல கேளிக்கைகளிலும் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்கின்றனர். பலர் அன்று முதல் இன்றுவரை தேர்தலில் ஓட்டுப் போடுவதற்குக் காசு பெருகின்றனர். இவர்களில் அனேகர் குடிகாரர்களே. குடிக்கு ஒருவன் அடிமையாகிவிட்டால் எதையும் அடமானம் வைக்கத் தயங்க மாட்டான். பெண்டாட்டி தாலியையும் ஏன் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளையுமே விற்றும் குடிப்பதுவே அவனது குறிக்கோளாக இருக்கும்.

அத்தகைய மிகப் பயங்கரமான சாராயத்தைப் பல ஆண்டுகளாக அரசு விற்பனை செய்து இன்று ஆண்டொன்றுக்கு ரூ. 20,000 கோடிக்கு மேல் சாராய விற்பனை அதிகார பூர்வமாகக் கொடி கட்டிப் பறக்கிறது. இதனால் குடல் வெந்து செத்து மடிந்தோர் ஏராளம். மிகவும் பரிதாபகரமான நிலைமையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுத் தம் வீடு, வாசல், சொத்து, சுகம் அனைத்தையும் விற்று வைத்தியம் பார்த்தும் குற்றுயிருக் கொலையுயிருமாக நடைபிணமாக வாழ்வோர் ஏராளம்.

இத்தகைய இழிநிலைகளை மக்களுக்குக் கொண்டு செல்ல நம் நாட்டுப் பத்திரிக்கைகளுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் நேரமில்லை ஏனெனில் அவர்கள் தங்கள் வருமானத்திற்காக மக்களைச் சுரண்டி வாழும் பெரும் பணக்கார வர்க்கத்தினரிடமிருந்து பெறும் பணத்திற்காக மக்கள் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இந்நிலையில் சாராயத்தின் கேட்டினைப் பலர் உணர்ந்து போராடி வருகின்றனர். அத்தகைய போராளிகளுள் ஒருவர் இயற்றிப் பாடிய பாடல் இன்றைய பாடலாக வருகிறது.

இதில் வெட்கக் கேடு என்னவெனில் இப்பாடலைப் பாடியவரான கோவன் என்பவரை தேசதுரோகக் குற்றம் சுமத்திக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தமிழக அரசு.

உலை வாயை மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இப்பாடலை தயைகூர்ந்து தமிழ்நாட்டு நலன் கருதி நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு சாராய சாம்ராஜ்யத்தின் கோரப் பிடியிலிருந்து தமிழகம் மீள உதவுமாறு சிரம் தாழ்த்தி, இரு கரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.


ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்
ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

இட்டிலி ஒத்த ரூவா கக்கூசு அஞ்சு ரூவா
பட்டே சோறு அஞ்சு ரூவா பருப்பு வெலெ நூறு ரூவா
இட்டிலி ஒத்த ரூவா கக்கூசு அஞ்சு ரூவா
பட்டே சோறு அஞ்சு ரூவா பருப்பு வெலெ நூறு ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா படிக்கப் பீசு லட்ச ரூவா
பாட்டில் தண்ணி பத்து ரூவா படிக்கப் பீசு லட்ச ரூவா நீ
வாழ வச்ச தெய்வமுன்னு கூவலேன்னாக் கொன்னுறுவா

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

படிக்க உடாமே உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின் ஷாப்பே கோயிலாண்டே தொறாக்கிறான்
படிக்க உடாமே உஸ்கூல மூடுறான்
குடிக்க ஒயின் ஷாப்பே கோயிலாண்டே தொறாக்கிறான்
மாசம் ஒரு நாத்தான் மண்ணெண்ணெ ஊத்துறான்
மாசம் ஒரு நாத்தான் மண்ணெண்ணெ ஊத்துறான் இந்த
நாசமத்த கடையெ மட்டும் மிட்நைட்டுல தான் சாத்துறான்

சும்மாக் கெடந்த ஊருக்குள்ளே கடைய வச்சான்
ஆணு பொண்ணு அத்தன பேரையுங் குடிக்க வச்சான்
சும்மாக் கெடந்த ஊருக்குள்ளே கடைய வச்சான்
ஆணு பொண்ணு அத்தன பேரையுங் குடிக்க வச்சான்

ஆட்டுக்குட்டி ஃபேனு மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத் தெருவாக் கடைய வச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிக்கிச்சி
ஆட்டுக்குட்டி ஃபேனு மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி
தெருத் தெருவாக் கடைய வச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிக்கிச்சி
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா
கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா இடுப்பு
வேட்டியையும் புடுங்கிக் கிட்டுப் போச்சிடா

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மொட்டையானா கலெக்டருக்கு சபாசு
தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு
குடிமகன் மொட்டையானா கலெக்டருக்கு சபாசு
பாரெல்லாம் அதிமுக குண்டாசு 
பாரெல்லாம் அதிமுக குண்டாசு இதுக்கு
ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு

ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸிலே உல்லாசம்

ஐஏஎஸ்ஸு ஐபிஎஸ்ஸு ஆள் படைக்கு சம்பளம்
போலீசு போலீசு செலவு அயிட்டம் ஏராளம்
ஐஏஎஸ்ஸு ஐபிஎஸ்ஸு ஆள் படைக்கு சம்பளம்
போலீசு போலீசு செலவு அயிட்டம் ஏராளம்
அம்மா வந்து போனா அந்த செலவே பயங்கரம்
அம்மா வந்து போனா அந்த செலவே பயங்கரம்
சும்மா கேனத்தனமா மூட சொன்னா அவுங்க
ஃப்யூச்சரெல்லாம் இன்னாவும்?

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே

இவ்வுலக வாழ்வு ஒருவழிப் பாதைப் பயணமேயாகும் என்பதை உணராது தம் ஆயுட்காலத்தில் தமக்கென விதிக்கப்பட்ட சொற்ப நன்மைகளையும் அனுபவியாமல் பேராசையால் அளவுக்கு மீறிய செல்வத்தைச் சேர்த்து வைத்து பிறரது வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டு தானும் மகிழ்ச்சியடையாமல் பிறரையும் மகிழ்ச்சியடைய விடாமல் வாழ்நாளெல்லாம் துன்பங்களிலே கிடந்து உழலும் மானிடப் பதர்கள் என்றும் உய்வடைய மாட்டார்கள்.  

உறவுகளே இவ்வுலக  வாழ்வின் சுகம். நம்முடன் தொடர்புகொள்ளும் அனைத்து உயிர்களையும் நேசித்து வாழ்தல் அளவிடற்கரிய இன்பம் பயப்பதாக அமையும். உறவு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் பெற்றோருடன் தொடங்குகிறது. தாயின் அரவணைப்பில் ஒரு குழந்தை காணும் சுகத்துக்கு ஈடு இணையே கிடையாது. பின்னர் வளர்சியடைய அடைய அன்னையை மட்டுமின்றி தந்தை, சகோதரர்கள், பிற குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், அண்டை அயலார் என உறவு வட்டம் பெரிதாக வளர்கிறது. 

மனம் விசாலமாக அனைவரையும் பேரன்புடன் நேசிக்கும் தன்மை அமையப்பெற்றவர்கள் அடையும் இன்பம் ஏனைய பிறர் அடையும் இன்பத்தை விடப் பன்மடங்காக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனிதர்களிடம் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் முதலிய ஏனைய உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்துதல் சுகமே பயக்கும்.  

அவ்வாறு நாம் அன்பு செலுத்தும் உயிர்களின் எவையேனும் விதிவசத்தால் துயருறுகையிலும் மடிகையிலும் நமக்கு துக்கமுண்டாகிறது. அத்தகைய துக்கத்தின் அளவு அவ்வுயிர்களிடத்தில் செலுத்தும் அன்பையும் அவற்றிம் மேல் கொண்ட பற்றுதலையும் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ விளங்கும். 

இயற்கையாகவே ஒவ்வொருவரும் தம் குழந்தைகளின் மீது மிகவும் அதிகப்படியான அன்பைச் செலுத்தி அவர்களை மிகவும் அக்கரையுடனும் பிரியத்துடனும் வளர்த்துக் காப்பது அனைவரும் அறிந்ததே. எனவே ஒருவர் தனது குழந்தை துயருறுகையிலும் துரதிருஷ்டவசமாக மடிகையும் அடையும் துன்பத்துக்கு அளவே கிடையாது. மனதில் பொங்கும் துயர வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றைப்போலக் கட்டுக்கடங்காமல் பெருகுவது இயல்பு. இதனைப் புத்திர சோகம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.  ராமாயண மஹாகாவியத்தில் ஸ்ரீ ராமன் கைகேயிக்கு தசரதன் தந்த இரண்டு வரங்களின் பயனாக முடி துறந்து வனவாசம் செல்கையில் அவனது பிரிவைத்தாங்காமல் தசரதன் புத்திர சோகத்தால் உடல்நலம் குன்றி மடிந்ததாக வால்மீகி முனிவர் எழுதி வைத்துள்ளது நாம் அறிந்ததே. 

எத்தனை கோடானு கோடி செல்வம் இருப்பினும் பெற்ற குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் உடல்நலமும் பிற நலன்களும்  பெற்று வாழ்வதே பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும். குழந்தைகளுக்கு ஏதேனும் குறைகள் உண்டாகுகையில் தம்மிடம் உள்ள பொருள் அனைத்தும் செலவழித்தாலும் பரவாயில்லை, குழந்தைகள் நலமடைந்தால் போதும் என்ற சீரிய மனப்பான்மை  நமது நாட்டில் பெற்றோரது பெருங்குணமாகக் கடைபிடித்து மதிக்கப்படுவதாலேயே நம் நாடு உலகிலுள்ள பிற நாடுகளைக் காட்டிலும் கலாச்சாரத்தில் மேன்மை பெற்று விளங்குகிறது.

இங்கே நமது கதாநாயகன் அடக்குமுறை அரசியலாலும் இனக் கலவரத்தினாலும் பாதிக்கப்பட்ட தன் இனத்தினரை மிகவும் அன்பு செலுத்திப் பாதுகாக்கிறான். சந்தர்ப்பவசத்தில் அவன் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேர்கிறது. இச்சூழலில் அவனது மகன் அத்தகையதொரு குற்றச் செயலில் ஈடுபடுகையில் மரணமடைந்து விடுகிறான். நம் நாயகனுக்கு துக்கம் ஆறாகப் பெருகுகிறது. அதனை விளக்கும் விதமாக அமைந்த பாடல் இதோ:



திரைப்படம்: நாயகன்
பாடலாசிரியர்: புலமைப் பித்தன்
இசை: இளையராஜா
பாடியோர்: : கமலஹாசன்
ஆண்டு: 1987

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?
வளரும் பிறையே தேயாதே இனியும் அளுது தேம்பாதே
அளுதா மனசு தாங்காதே அளுதா மனசு தாங்காதே

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?

வளரும் பிறையே தேயாதே இனியும் அளுது தேம்பாதே
அளுதா மனசு தாங்காதே அளுதா மனசு தாங்காதே

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?

வளரும் பிறையே தேயாதே இனியும் அளுது தேம்பாதே
அளுதா மனசு தாங்காதே அளுதா மனசு தாங்காதே

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனே யாரடித்தாரோ?
யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ? யாரடித்தாரோ?

சனி, 6 பிப்ரவரி, 2016

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு

வானோக்கி வாழும் உலகெலாம் மன்னவன் 
கோனோக்கி வாழும் குடி

உலக மக்கள் யாவரும் வானத்தை நோக்கி மழை வேண்டிப் பெற்று விவசாயம் சிறக்கப்பெற்று உணவு உற்பத்தி செய்து பகுத்துண்டு பல்லுயிரோம்பி வாழ்கின்றனர். அது போலவே  ஒரு நாட்டின் குடிமக்கள் யாவரும் அந்நாட்டை ஆளும் அரசனின் நீதி நெறி தவறாத 
செங்கோலின் திறத்தை நம்பி உயிர் வாழ்கின்றனர் என்பதே இக்குறளின் பொருள். சிறு வயதில் 
இது குறித்து எண்ணுகையில் என் பள்ளிப்பாடத்தில் தமிழ் மன்னர்கள் பலரது சரித்திரத்துடன் பொற்கைப் பாண்டியன் எனும் பாண்டிய நாட்டு மன்னனைப் பற்றியும் படித்த நினைவு வருகிறது. இரவு நேரங்களில் பழந்தமிழ் மன்னர்கள் மாறுவேடம் பூண்டு நகரை வலம் வந்து மக்கள் நலனையும் பாதுகாப்பையும் பேணிக் காத்தனர் என்பது வரலாற்று உண்மை. 

அவ்வாறே பாண்டிய மன்னனொருவனும் நகரை மாறுவேடத்தில் வலம் வருகையில் ஒரு வீட்டில் பேச்சுக்குரல் கேட்கவே அவ்வீட்டிலுள்ளோர் நலமாக வாழ்கின்றனரா என்றறிய அங்கே கேட்ட பேச்சுக் குரலை செவிமடுத்தான். 

கணவன் மறுநாள் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லவிருக்கிறான். மனைவியை உடன் அழைத்துச் செல்ல முடியாத நிலை. மனைவி அவனை விட்டுப் பிரிய மனமில்லாமல், "என்னைத் தனியே விட்டுச் செல்கிறீர்களே!" என்று தன் மனத்தாபத்தை வெளியிட அக்கணவன் அவளுக்கு தைரியமூட்டும் விதமாகச் சொல்கிறான், "நம் நாட்டு மன்னன் குடிமக்களைத் தம் குடும்பததாரைப் போலவே மதித்துப் பாதுகாத்து வருகிறார் என்பது நாமனைவரும் அறிந்ததே. அவ்வாறிருக்க நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை. நான் விரைவில் திரும்பி வருகிறேன். நம் மன்னன் பாதுகாப்பில் நீ எதற்கும் பயப்படத் தேவையில்லை." என அவளைத் தேற்றுகிறான். அன்று முதல் மன்னவன் நாள் தோறும் அவ்வீட்டை தவறாது  காவல் காத்து வந்தான். அவ்வாறிருக்க ஒரு நாள் அவ்வீட்டில் ஏதோஅரவம் கேட்கவே மன்னவன் யாரேனும் திருடன் உள்ளே நுழைந்து விட்டானோ என மிகவும் ஐயமுற்று அவ்வீட்டுக் கதவைத் தட்டுகிறான். வெளியூர் சென்றிருந்த கணவன் வீடு திரும்பி விட்டான் என்பதை உள்ளேயிருந்து உரத்த குரலில் வந்த, "யாரங்கே?" எனும் கேள்வியால் உணர்ந்த அரசன் சற்றே யோசித்துத் தன் தவறைத் திருத்திக்கொள்ள வழி தெரியாமல் அத்தெருவில் இருந்த அனைத்து வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டுச் சென்றான். ஒவ்வொரு வீட்டிலும் அதே போல், "யாரங்கே?" என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

மறுநாள் மன்னவன் அரசவையில் அத்தெரு மக்கள் அனைவரும் கூடிவிட்டனர். மன்னவன் அவர்களது குறை என்னவென்று கேட்க அவர்கள், "மன்னா, நேற்றிரவு யாரோ ஒரு திருடன் எங்கள் வீட்டுக் கதவுகளையெல்லாம் தட்டிவிட்டுச் சென்றான். தங்கள் ஆட்சியில் இத்தகைய குற்றம் நிகழ்ந்ததில்லையே. எங்களுக்கு அச்சமாக உள்ளது. அத்திருடனைப் பிடித்துத் தாங்கள் தக்க தண்டனை வழங்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டனர். 

அத்திருடனுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என மன்னவன் அவர்களைக் கேட்கவும், கதவுகளைத் தட்டிய கையை வெட்டிட வேண்டும் என அம்மக்கள் தெரிவிக்க மன்னவன் அக்கணமே யாரும் எதிர்பாராத நிலையில் தன் உடைவாளைக் கையிலெடுத்துக் கதவுகளைத் தட்டிய தன் ஒரு கையை வெட்டிக் கொண்டான். மக்கள் மிக்க அதிர்ச்சியடைத்தனர். 

பின்னர் வெட்டப்பட்ட கை இருந்த இடத்தில் பொன்னால் செய்யப்பட்ட செயற்கைக் கையைப் பொருத்திக் கொண்டு மன்னன் வாழ்ந்தான் என்று கூறப்படுகிறது.

நம் நாடு சுதந்திரமடைந்து மக்களாட்சி அமுலுக்கு வந்த பின்னர் அன்று ஆட்சி செய்த மன்னர்கள் இருந்த இடத்தில் நாட்டின் பிரதம மந்திரியும் மாநிலங்களின் முக்கிய மந்திரிகளும் இருந்து ஆட்சி செய்து வருகின்றனர். அத்தகைய மக்களாட்சியில் சுதந்திரத்துக்குப் பின்னர் சில ஆண்டுகள் வரை மக்களுக்கு நியாயம் கிடைத்தது. நாட்டை ஆள்வோர் பெரும்பாலும் பொறுப்புடனேயே நடந்து வந்தனர். கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தது. வியாபாரம் நேர்மையாக நடைபெற்று வந்தது. நல்ல முறையில் விவசாயமும் நடைபெற்று வந்தது. இருப்பினும் சில சமயங்களில் அதிக விலைவாசி உயர்வு ஏற்பட்டதால் அதிருப்தியடைந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி அவ்வாறே எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாகப் பிரச்சாரம் செய்து பதவிக்கு வந்தவர்கள் அதன் பின்னர் மக்களுக்கே துரோகம் செய்து மக்களைச் சுரண்டும் நடைமுறையே பின்பற்றப்பட்டு இன்று மக்கள் சொல்லொணாத் துயரில் மூழ்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையை மாற்ற இந்தியத் தலைநகர் டெல்லியில் வாழும் மக்கள் ஒன்று கூடி ஊழலுக்கெதிராக வலுவான மக்கள் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். அத்தகைய ஒரு சிறந்த மாற்றத்தை நாட்டிலுள்ள பிற மாநில மக்களும் ஒன்று சேர்ந்து விரைவில் கொண்டு வருவது உறுதியே. 

எனவே நம் நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

பொற்கைப்பாண்டியன் செய்தது போலவே பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டியக் கட்டபொம்மன் எனும் மன்னனும் மாறுவேடம் பூண்டு கள்வர்களிடமிருந்து மக்களைக் காத்த கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. அத்தகைய பாடல் காட்சி ஒன்று சிவாஜி கணேசன் வீரபாண்டியக் கட்டபொம்மன் வேஷத்தில் நடித்து வெளிவந்தது. அற்புதமான அப்பாடல் இன்று உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக வருகிறது.



திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன் 
பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்பிரமணியம் 
இசை: ஜி. ராமநாதன் 
பாடியோர்: :டி.எம். சௌந்தரராஜன், டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1959 

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே ஏஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏஏஏ ஏ தே
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா
நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க
நல்லவரைப் போல சில கள்ளரும் இருப்பாங்க
நம்பிவரும் பாதையிலே கொள்ளையும் அடிப்பாங்க
நாட்டைக் கூடக் காசுக்காக விப்பாங்க
நாட்டைக் கூடக் காசுக்காக விப்பாங்க இந்த
நாளையிலே தனிமை வேளையிலே
நாளையிலே தனிமை வேளையிலே
பொன்னான மாலையெல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா
புருஷனையும் பத்திரமாப் பாத்துக்கம்மா
பொன்னான மாலையெல்லாம் பொட்டிக்குள்ளே வையம்மா
புருஷனையும் பத்திரமாப் பாத்துக்கம்மா

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே ஏஏஏஏ தே
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா

சேட்டைகளப் பண்ணிக்கிட்டு நோட்டங்களப் பாத்துக்கிட்டு
சேட்டைகளப் பண்ணிக்கிட்டு நோட்டங்களப் பாத்துக்கிட்டு
பாட்டுகளும் பாடணுமா பச்சயைப்பா ஓன்
பாதையைத் தான் பத்திரமாப் பாத்துக்கப்பா

தே தே டுர்ர்ர்ர் போங்கடா கண்ணுங்களா ஆஹா

ஆனைகளைக் காக்க இங்கே ஆளை வட்டி வடிப்பாங்க
அண்ணன் தம்பியாயிருந்தும் காட்டியே கொடுப்பாங்க
மானத்தையும் ஏலம் போட நிப்ப்பாங்க
மானத்தையும் ஏலம் போட நிப்ப்பாங்க
இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே
இந்த நேரத்திலே சாலை ஓரத்திலே

முன்னேறும் பாதையிலே கண்ணைக் கொஞ்சம் வையப்பா
கட்டுச்சோறும் பத்திரமாப் பாத்துக்கப்பா

மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையக் கூட்டிக்கிட்டு
காட்டுவழி போறவளே கன்னியம்மா உன்
காசுமால பத்திரமாப் பாத்துக்கம்மா

புதன், 3 பிப்ரவரி, 2016

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

ஒரு குழந்தை பிறந்து வளர்கையில் உலக விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்கிறது. அவ்வாறு கற்று ஒவ்வொரு விஷயமும் குழந்தையின் அறிவுக்குப் புலனாகுகையில் அது மகிழ்ச்சி கொள்வதுடன் தான் ஒருவிஷயத்தைக் கண்டுபிடித்து விட்டதாகப் பெருமையும் கொள்கிறது. இதுவே ஆணவத்தின் அறிகுறி, அது தற்பெருமை வடிவத்திலே உருவாகி குழந்தை உடலாலும் மனதாலும் வளர்ச்சியடைகையிலே உடன் வளர்கிறாது.  இது ஒரு மயக்கமேயாகும். அறிவு மழுங்கி ஒரு மாயா உலகிலே மனிதன் சஞ்சரிக்கிறான். அம்மயக்கத்தில் ஏதோஒரு இனம் புரியாத இன்பம் கிடைப்பதால் அவ்வின்பத்தை நுகரும் வேட்கையில் தன்னிலை மறக்கிறான். இவ்வாறு ஆணவம் வளர்கையில் மனிதன் தன்னை மிகவும் உயர்வாக எண்ணிக்கொண்டு பிறரை மதியாமல் தன் சுயநலம் பேணுவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு அல்லல்படுகிறான். அத்தகைய லட்சியங்கள் நிறைவேறத் தடைகள் உருவாகும் போது கோபமுற்று அழிப் பாதையில் செல்லத் தலைப்படுகிறான்.

அறிவு மழுங்கி அழிவுப்பாதையில் பயணிக்கும் மனிதன் தன் மன நிம்மதியை இழக்கிறான். அதனால் ஏற்கெனவே இருக்கும் இவ்வுலக இன்பங்களை சற்றேனும் அனுபவிக்க முடியாமல் துக்கமுற்று வருந்தித் தீய செயல்களையே திரும்பத் திரும்பச் செய்து ஒரு மன நோயாளியாய் மாறிவிடுகிறான். துரதிருஷ்டவசமாக அத்தகைய மன நோயாளிகள் நாட்டை ஆளும் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது, காரணம் மனிதர்களின் சுயநலம், காசு பணத்துக்காகவும், இலவச அரிசி, வேட்டி, சேலைகளுக்காகவும், சாதி மத உணர்வின் காரணமாகவும் மேலும் பல்வேறு அற்பக் காரணங்களுக்காகவும் தம்மை ஆள வருவோர் நல்லோராக இருக்க வேண்டும் எனும் அறிவை அறவே இழந்து தகுதியற்றவர்களை ஆட்சி பீடத்தில் அமர வைப்பதாலேயே இத்தகைய இழிநிலை உண்டானது.

மனிதன் இவ்வாறு ஆணவம் பெருகி அறிவிழக்கும் நிலையைத் தவிர்க்கவே பக்தி மார்க்கத்தை உலகெங்கிலும் முன்னோர்கள் அமைத்து நீதி நெறிகளையும் மனிதனது குறை நிறைகளையும் விளக்கி வந்தனர். அத்தகைய பக்தி மார்க்கத்தில் மனிதர்களில் மனம் செல்ல ஏதுவாகப் பல்விதமான புராண இதிகாசக் கதைகள் காலப்போக்கில் உருவாயின. அத்தகைய கதைகள் அவற்றை நூலாகத் தொகுத்து வழங்கிய புலமை மிக்க ஆன்றோர்களின் கைவண்ணத்தில் காவியங்களாக உருவாயின. 

அக்காவியங்களின் சொற்றிறம், பொருட்திறம் அவற்றில் எடுத்துக் கூறப்பட்ட கற்பனைச் சம்பவங்களை உண்மையாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகவே யாரும் நம்புவதற்கேற்ற வகையில் மிகவும் உயர்வான நீதிகளுடனும் கவிநயத்துடனும் கருத்தாழம் மிக்கதாக அழகுடனும் விளங்கியதால் இடையில் சுயநலம் கொண்ட ஆஷாடபூதிகள் சிலர் அச்சம்பவங்கள் உண்மையாக நிகழ்ந்தன என்றும், தங்களது மதத்தில் படைக்கப்பட்ட புராணங்களே சிறந்தவை என்றும் ஏனைய பிற மதங்களில் படைக்கப்பட்டவை பொய்கள் எனவும் பிரச்சாரம் செய்ய ஏதுவானது.

இத்தகைய ஆஷாடபூதிகளே இன்று நாடாள்கின்றனர். யோகம் என்றால் என்ன என்றே தெரியாத இவர்கள் உலகுக்கே யோகக் கலையைக் கற்றுத் தருபவர்கள் போல் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன் பிற மதத்தினரை இழிவுபடுத்தும் செயல்களை இப்பிரச்சாரங்களின் வாயிலாக மேற்கொள்வது மன்னிக்க முடியாத குற்றமாகும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைக்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்பவே பல்வேறு மதங்கள் உருவாகிப் பல நாட்டு மக்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இம்மதத்தின் கொள்கைகளை ஆதியில் உருவாக்கிய ஆன்றோர் அவற்றை மனிதர்களை நல்வழிப் படுத்தும் உயர்ந்த நோக்கத்துடனேயே உருவாக்கினர். இடையில் அக்கருத்துக்களைச் சில சுயநலவாதிகள் திரித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வண்ணம் மாற்றி அமைத்தார்கள். அத்தகைய மாற்றங்களினால் ஏற்றுக்கொள்ள இயலாத பலவிதக் கட்டுக்கதைகளையும் திணித்து மனிதர்களைச் சாதி மத ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

இத்தகைய சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்ட பகுத்தறிவுவாதிகள் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஈவெரா பெரியாரும் அவரது தொண்டர்களும் மதம் சார்ந்த பொய்ப் பிரச்சாரத்தை மக்களுக்கு விளக்கி அவர்கள் அறியாமையில் மூழ்கி வருந்தி அடிமைத் தளையில் உழல்வதிலிருந்து தடுத்து அவர்கள் சுயநம்பிக்கையோடு தம் உழைப்பால் உயர வழிகாட்டினர். அவர்களுள் சுயநலம் கொண்ட சிலர் அப்பெரியாரது மெய்யன்பர்கள் போல் நடித்துப் பல ஆண்டுகளாகத் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் சுரண்டிச் சொத்து சேர்த்து இன்று தமிழ்நாடே ஒருசுடுகாட்டுக்கொப்பாகச் சீரழிந்து கிடக்கும் நிலைமையெய்த ஏதுவாயினர். சாராயமும், சாக்கடை நாற்றமும், ஆற்று மணல் கொள்ளையும் ஆள்வோர் அராஜகமும் மக்களைப் பாடாய்ப் படுத்தி வாட்டி வதைக்கின்றன இன்று. இத்தகைய போலிகள் அடையாளம் காணப்பட்டு அழித்தொழிக்கப் படுவதொன்றே இன்றைய தேவை தமிழ்நாட்டுக்கு. இவர்கள் தமிழை செம்மொழியாக்கியதாக மார்தட்டிக் கொண்டு தமிழர்கள் இலங்கையிலும் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகளிலும் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் தங்களது குடும்பத்தாரும் கூட்டாளிகளும் பதவிகள் பெறுவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு தமிழர்களை அழிக்க இலங்கைக்கு உதவிய மத்திய அரசின் சதிக்குத் துணை போய் துரோகம் செய்து வருகின்றனர். அத்தகைய துரோகிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். 

இவர்கள் திராவிடர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொண்டு தமிழர்களை அடிமைப்படுத்தி வந்த நிலை மாறும் வகையில் தற்போது பெரும் விழிப்புணர்வு நம் தமிழ் மக்களிடையே பரவி வருகின்றது. திராவிடர்கள் என்றால் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எனும் நான்கு மாநிலத்தவரும் அடக்கமாகும். இது வரை திராவிடர்கள் எனும் பெயரில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள் பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு. தமிழர்கள் செத்து மடிந்தால் இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இத்தகைய கொடியோர்களின் பிடியிலிருந்து தமிழகம் மீள வேண்டுமாயின் தமிழ் மக்களைத் தமிழர்கள் மட்டுமே ஆட்சி செய்யும் நிலை உருவாக வேண்டும்.

முக்கியமாக நம் தமிழ் மக்கள் திருப்பதிக்கும் சபரி மலைக்கும் பெரும்பாலும் சென்று வழிபடும் வகையில் விளம்பரங்களும் கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வரும் நிலையை மாற்றி நம் தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வழக்கத்தை மேற்கொள்ளும் வகை செய்தல் மிகவும் அவசியம். அவ்வழியில் தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானைத் தம் முப்பாட்டன் என அங்கீகரிக்கும் புரட்சிமிக்க மாற்றம் பெரியாரின் தொண்டர்களில் விழிப்புணர்வு எய்திய பலரிடையே உருவாகியுள்ளது. பக்தி மனிதனை மேம்படுத்த வேண்டுமேயல்லாது சாதி மத ரீதியில் பிரிக்கக் கூடாது. அவ்வகையில் தேவர்களின் தலைவனாக விளங்கும் முருகன் தீண்டத் தகாதவர்கள் என்று அற்ப மனிதர்களால் கருதி ஒதுக்கி வைக்கப்பட்ட குறவர் சமுதாயத்தில் பிறந்த வள்ளியையும் மணந்து தேவேந்திர குமாரியான தெய்வானையுடன் சரிசமமாகக் கருதி வணக்கத் தக்க பெரிய இடத்தைக் கொடுத்தமை மிகவும் சிறப்புக்குரியது. சாதி மத பேதம் நீங்க முருகனின் கதைகள் பெரிதும் உதவுவதால் முருகன் வழிபாடு மிகவும் சிறந்ததே.

கலியுகத்தில் முருகனே தெய்வம்.முருகனைப் பாடினால் முக்தியடையலாம். முக்தி என்பது எல்லா வித அச்சங்களும், கவலைகளும், ஐயங்களும் நீங்கித் தெளிந்த நல்லறிவு பெற்ற நிலையேயாகுமேயல்லாது வேறில்லை. 

அறிவில் உயர்வோம்! அன்பால் இணைவோம்! நல்வாழ்வு கண்போம்! தமிழ்நாட்டை மீட்போம்! அத்தகைய சீரிய பணியில் நமக்குச் சக்தி தர சக்தி குமாரன் முருகவேளைப் பணிவோம்!


பாரம்பரியப் பாடல்
பாடியோர்: : பெங்களூர் ஏ.ஆர். ரமணியம்மாள்
இசை:டி.ஏ. கல்யாணம்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்
மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன் 
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா 
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை 
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை 
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள் 
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர் 
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன் 
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள் 
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

செந்தமிழ் நாடு செழித்திடவே

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

என மஹாகவி பாரதியார் வாழ்த்திய நம் செந்தமிழ் நாடு இன்று என்ன நிலையிலிருக்கிறது என எண்ணிப் பார்க்கையில் என் மனம் மிகவும் வேதனையுறுகிறது. காரணம் செந்தமிழ் நாடு செழிப்பாக விளங்கிய காலமொன்று இருந்தது அதனைப் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்கையில். கல்வி பட்டப் படிப்பு வரை முற்றிலும் இலவசமாக்கினார் காமராஜர். அதன் பின் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து மேற்படிப்பு படிப்போருக்கு மாதா மாதம் உதவித்தொகையாக மிகவும் கணிசமான தொகை வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இருக்கவில்லை. அரசாங்கம் அநாவசியச் செலவுகள் செய்யவில்லை. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. விவசாயிகள் செழிப்பாக இருந்தனர். உணவுப் பொருட்கள் அனைவருக்கும் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன.

சிறு தொழில்கள் சிறப்புற நடந்தன. வறுமை அறவே இருக்கவில்லை. இந்தியனாய் இரு, இந்தியப் பொருட்களை வாங்கு என அந்நாளில் மஹாத்மா காந்தி வகுத்த கொள்கை கடைபிடிக்கப் பட்டது. வேலைவாய்ப்பு அனைவருக்கும் கிட்டியது. அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதி அடிப்படையில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. வியாபாரிகள் நியாயமாக வியாபாரம் செய்த காலம் அது. பேராசை இல்லாத நேர்மையான வணிகம் நடந்தது.

ஆற்று மணற்கொள்ளை அறவே இல்லை. சாராயம் இல்லை, சச்சரவுகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. அரசாங்கம் தன் கடமையைத் தவறாமல் செய்தது. அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் கடமை தவறாமல் மக்களுக்கு சேவை செய்தனர். ஆசிரியர்கள் மிகவும் அக்கரையாகப் பள்ளிகளில் கல்வி போதித்தார்கள். பெரும்பாலான கல்விக் கூடங்கள் தனியார் நடத்திய போதிலும் அரசு அவற்றுக்கு உதவியது. ஆசிரியர்களின் மாத சம்பளம் மற்றும் பராமரிப்புக்கென அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் கணிசமான தொகையை உதவியாக வழங்கியது.

ரேஷன் கடைகள் இருக்கவில்லை. அனைத்துப் பொருட்களும் வெளிச் சந்தையிலேயே நியாய விலையில் கிடைத்தன.  அரசு மருத்துவ மனைகள் மிகவும் சிறப்பாக இயங்கியதுடன் சகலருக்கும் இலவச மருத்துவ உதவியுடன் சத்தான உணவும் தினம் தோறும் வழங்கப்பட்டு வந்தது. என் இளைய சகோதரியை என் தாயார் 1963ஆம் வருடம் அரசு மருத்துவமனையிலேயே அன்று பெற்றெடுத்தார். தெருக்கள் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டன. வியாதிகள் அதிகம் இருக்கவில்லை. எனக்குச் சிறு காயங்கள் விளையாடுகையில் பட்டபோது சிறுவனான நானே அரசு மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றது இன்றும் என் மனதில் நீங்காமல் நிழலாடுகிறது.

1964ஆம் வருடம் நாம் 6ஆம் வகுப்பு பயில்கையில் எனது பள்ளிக் கட்டணம் ஆண்டு முழுவதற்குமாக ரூ 5/- அன்றுஒரு இட்டிலி விலை 3 நயா பைசாக்கள். அரிசி விலை 1 கிலோ 50 நயா பைசாக்கள். பொதுக் குழாய்களில் தண்ணீர் தவறாமல் வந்தது. ஊர் மக்கள் யாவரும் அதிலிருந்தே குடிதண்ணீர் பெற்றுச் சென்றனர். பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு 50 நயா பைசாக்கள். அன்று அம்பாசடர் கார் விலை ரூ 20,000/- இன்று ஒரு மொபெட் கூட வாங்க முடியாது அவ்விலையில்.

இத்தகைய விலைவாசி உயர்வுக்குக் காரணம் ஊழல். ரூ 1 விலையுள்ள பொருட்கள் அரசாங்கத்தால் ரூ 100, ரூ 1000 என அதிக விலைக்கு மக்கள் பணத்தில் வாங்கப் படுகின்றன. செய்யாத வேலைகளை செய்ததாக எழுதி செலவுக்கான பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற அரசியல்வாதிகளும். தெருவில் நடக்கையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது, காரணம் அடைப்பெடுக்கப்படாத சாக்கடைகள், அள்ளப்படாத குப்பை மேடுகள். சுகாதாரத்துக்கென அரசு ஒதுக்கும் பணம் முழுவதும் வெகு சிலரால் கபளீகரம் செய்யப்பட்டு. வீட்டின் முன்னுள்ள குப்பையை அள்ள வேண்டுமெனில் அதற்கு ஒவ்வொரு வீட்டாரும் தனியே லஞ்சம் தர வேண்டியுள்ளது.  பள்ளிகளில் தமது குழந்தைகளைச் சேர்க்க ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் பல்லாயிரம் ரூபாய்கள் கட்டணமாகவும் கட்டாய நன்கொடையாகவும் பள்ளிக்குச் செலுத்த வேண்டியுள்ளது. உடல் நிலை சரியில்லாமல் ஒருவர் மருத்துவமனையில் ஒரு நாள் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறவே அவர் ஆயுள் முழுவதும் சேர்த்து வைத்த சேமிப்புத் தொகை செலவழிந்து விடுவதோடு மேலும் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை பூதாகரமாக மிரட்டுகிறது.

சிறு குறுந்தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டு நாட்டின் தொழில்கள் அன்னியப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டுள்ளது தடையில்லா மின்சார வசதிகளுடன் ஆனால் நம் மக்கள் அன்றாடம் மின்வெட்டால் மிகவும் அவதியுறுகின்றனர். குடிநீர் மாசுபட்டு பாட்டில்களில் கொள்ளை லாபத்துக்கு விற்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் கொகோகோலா, பெப்சி முதலிய குளிர் பான வகைகள் தயார் செய்யும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பெருமளவில் உறிஞ்சி சுற்று வட்டாரத்தில் விளைநிலங்கள் பாழ்படக் காரணமாவதுடன் நாட்டு மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் விஷப் பொருட்களைப் பானத்தில் கலந்து விற்பனை செய்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆலைக் கழிவு நீர் ஆற்றில் தாராளமாகக் கலக்க அனுமதிக்கின்றனர் லஞ்சம் வாங்கிக் கொண்டு.

அரசுத் துறை நிறுவனங்களில் லங்க ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒரு ரேஷன் கார்டு வாங்க வேண்டுமானாலும் அதற்குக் கையூட்டாகப் பெருந்தொகை தர வேண்டியுள்ளது. காவல் துறை மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் மக்களைச் சுரண்டி வன்முறை அரசியல் செய்யும் ஆட்சியாளர்களது ஏவல் துறையாகவே செயல்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி ஆண்டுகள் பலவான போதும் நீதி கிடைக்காமல் மக்கள் அவதியுறுகின்றனர். சமுதாய சீர்கேடுகளையும் அரசுத் துறையின் அலட்சியப் போக்கையும் குறித்து யாரிடம் புகார் அளித்தும் பயனில்லா நிலை நிலவுகிறது.

இந்நிலை மாறி நம் செந்தமிழ் நாடு சுபிட்சம் பெற வேண்டும். அதற்கு என்ன செய்வதென்றே நமக்குத் தெரியவில்லை. காரணம் மக்களிடையே ஒற்றுமை இல்லை. சாதி மத ரீதியிலும் ஏழை, பணக்காரன் என்ற பேதத்தாலும் மக்கள் பிளவுபட்டு வலுவிழந்த நிலையில் உள்ளனர். அனைவரும் பேதங்களை மறந்து ஒற்றுமையாய் அநீதிகளை எதிர்த்துப் போராடினால் மட்டுமே தமிழ்நாடு பழைய சிறப்பை மீண்டும் அடைய வாய்ப்புள்ளது. இல்லையேல் அழிவு உறுதியே.


திரைப்படம்: மஸ் மாலினி
இசை: சலூரி ராஜேஸ்வர ராவ், பாரூர் எஸ். அனந்தராமன்
பாடியவர்: டி.வி. ரத்தினம்
ஆண்டு: 1947

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

தேனொடுபாலும் பெருக்கெடுத்தோடி
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி 
தேனொடு பாலும் பெருக்கெடுத்தோடி
திருமகள் பாதமும் சூடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே

மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
மாதம் மும்மாரி மழை பொழிந்தே
மாநிலத்தோர் பசி தீர்த்தே
காதல் மணாளனை கருதியே நாடி
காதல் மணாளனை கருதியே நாடி
களித்துக் கூடியே பாடி ஆடி நம்

செந்தமிழ் நாடு செழித்திடவே 
செல்வமும் வாழ்வும் தழைத்திடவே தெய்வ
செந்தமிழ் நாடு செழித்திடவே