செவ்வாய், 30 நவம்பர், 2010

பூமாலையில் ஓர் மல்லிகை

மலர் என்றதும் மனமெல்லாம் மணக்க வைப்பது மல்லிகை. அதனாலேயே கவிஞர் கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்று சொல்லிப் பின்னர் மலர்களிலே அவள் மல்லிகை என்றாரோ? மங்கையரின் மனம் கவர்ந்ததும் அதனைச் சூடிய அம்மங்கையரின் மணாளரை மயக்க வல்லதும் மல்லிகை மலரேயன்றோ? மாலையில் மலரும் மல்லிகை மலரைப்பற்றி நளவெண்பா இயற்றிய பண்டைத்தமிழ்ப் புலவர் எழுதிய பாடலொன்று மிகவும் பிரசித்தமானது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

மல்லிகை மலரில் வண்டு தேனுண்ண, மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து பாய்ந்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் யாவரும் மெய்மறந்திருக்க முல்லை மலராலான மென்மையான மாலையை அணித்து மாலைப்பொழுது ஒரு மங்கையைப் போல் நடந்ததாக மாலைக்காலத்தை வர்ணித்துப் பாடுகையில் மல்லிகை மலரில் வண்டு வந்தமர்ந்து தேனுண்ணும் காட்சி ஒரு வெண்சங்கினை வாயில் வைத்து ஊதுவது போலிருப்பதாக இப்பாடலில் அவர் கற்பனை செய்து பாடுகிறார். இப்பாடலை நளவெண்பா அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சியில் அவையில் வீற்றிருந்த ஒட்டக்கூத்தர் கேட்டுவிட்டு, "சங்கினை ஊதுபவர் அதன் சூத்தைத் தான் தன் வாயில் வைத்து ஊதுவாரேயன்றி அதன் வாய்ப்பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்லை, ஆனால் வண்டு மல்லிகையில் தேனுண்கையில் மலரின் வாய்ப் பகுதியின் வழியாகவே தேனை சுவைக்கிறது, ஆகவே இப்பாடலில் பொருட்குற்றமுள்ளது, ஏற்றுக்கொள்ள முடியாது" என்று குறை கூறினார்.

இதற்கு மறுமொழியுரைத்த புகழேந்திப் புலவர், "கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமோ? நீர் தான் சொல்லும்" என்று கேட்க ஒட்டக்கூத்தர் வாயடைத்துப் போய் விட்டார். மல்லிகையின் மலரிலுள்ள தேனை அருந்தும் மயக்கத்தில் உள்ள வண்டுக்கு வாயென்றும் சூத்தென்றும் எவ்வாறு தெரியும்? நியாயம் தானே?

மங்கையரின் கூந்தலை அலங்கரிப்பதுடன் ஆலயங்களில் ஆண்டவனை அலங்கரிக்கவும் மல்லிகை மலர் பெரிதும் பயன்
படுகிறது. மல்லிகை மலரின் மணத்தை அது மொட்டு நிலையிலிருக்கையிலேயே சேகரித்து அதனை திரவமாக்கி மல்லிகை சென்ட் தயாரிக்கப் படுகிறது. இதனை ஜாஸ்மின் சென்ட் என்று அறிகிறோம்.

இங்கேயொரு மல்லிகை தன் மனங்கவர்ந்த காதலனை எதிர்கொள்கையில் என்ன சொல்கிறதெனக் கேட்போமா?

பூமாலையில் ஓர் மல்லிகை

திரைப்படம்: ஊட்டி வரை உறவு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது இன்னும்
வேண்டுமா என்றது
_________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக