சனி, 8 மே, 2010

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

ஒரு பெண் தாயாகியதும் அவள் இவ்வுலகில் அனைத்திலும் அரிய உறவாகக் காண்பது தான் பெற்ற சேயையே. அப்பெண் ஏழையாக இருந்தாலும் தன் பிள்ளைக்கு வாழ்வின் வசதிகள் அனைத்தும் மிகவும் உயர்ந்தவையாகவே இருத்தல் வேண்டுமென விரும்புவாள். தன் வயிறு பசி பட்டினியால் வாடிக் கிடந்தாலும் தன் குழந்தைக்கு வயிறு வாடாமல் தக்க நேரத்தில் எவ்வாறாகிலும் உணவிடுவாள். தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுப்பதன்றோ தாய்மை. தன் சகோதரர்களிடம் ஒரு பெண் மிகவும் எதிர்பார்ப்பது தன் பிள்ளைக்குத் தன் சகோதர்கள் பொருளுதவி செய்தும் பரிசுகளை வழங்கியும் அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்த வேண்டும் என்பதுவே.

கல்யாணி எனும் பெண் விதிவசத்தால் இளம் வயதிலேயே கணவனை சாலை விபத்தில் பரிகொடுத்த நிலையில் கைக்குழந்தையுடன் மிகவும் துன்புற்று ஏழ்மை நிலையில் வாடுகையில், பொருளீட்ட வேண்டி வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் தன் அண்ணன்மார்கள் திரும்பி வருவர், தன் பிள்ளைக்குத் தக்க உதவிகள் செய்து அப்பிள்ளைக்குக் கல்வி பயிற்றுவிக்க ஆவன செய்வர் எனும் நம்பிக்கையுடன் தான் ஏழ்மையில் வாடிய போதும் தன் பிள்ளையாகிலும் நல்வாழ்வு வாழவேண்டும் எனும் ஆசை மனம் முழுதும் நிரம்பியவளாய் தன் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தாலாட்டாகப் பாடிப் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுத் தூங்க வைக்கும் மனமுருக்கும் காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: R. சுதர்சன்
பாடியவர்: T.S. பகவதி
ஆஅண்டு: 1952

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே - ஒரு
வஞ்சமில்லா முழு மதியே - இன்ப
வானில் உதித்த நல்லமுதே

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன்
மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை
யானையும் வாகனமாய் - மாமன்
தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்
தருவார் சீதனமாய்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
அள்ளி அணைத்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருப்பினும் அவர்கள் அனவருள்ளும் தான் காதலிக்கும் பெண்ணே ஒரு காதலனுக்குச் சிறந்த அழகியாகத் தெரிவாள். அதே போல் அப்பெண்ணுக்கும் பிற ஆடவர் அனவருள்ளும் தன் காதலனே மிகவும் அதிக அழகுள்ளவனாகத் தெரிவான். இது இயற்கையின் நியதி. தன் காதலியை விடவும் வேறு ஒரு பெண் அதிக அழகாக இருப்பதாக ஒருவன் எண்ணுவானாகில் அவனது காதல் உண்மைக் காதலல்ல என்பது திண்ணம்.

காதல் தெய்வீகமானது. கண்கள் வழியே கருத்தினிற் கலந்து உயிருடன் ஒருமிப்பது உண்மைக் காதல். இத்தகைய காதல் கொண்ட ஆண்மகனது உள்ளம் தனது காதலியின் அழகை வர்ணிக்கையிலும் அதிலொரு தெய்வீகத் தன்மையை உணர்வது சிறப்பு.

ஒரு பெண் நாணம் காரணமாகத் தன் காதலைத் தன் காதலனிடமும் வாய்விட்டுத் தெரிவிக்க மாட்டாள். அதற்கு மாறாகத் தன் உள்ளத்திலுள்ள காதல் உணர்வுகள் அனைத்தையும் தனது கண்களாலேயே அவனுக்கு உணர்த்தி விடுவாள். அந்தக் கண்ஜாடை கண்ட ஆண் அதற்கு மேல் உறங்குவதேது.

உண்மைக் காதலின்றி ஆண்களை அலைக்கழிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட சில மாதர்களும் இருக்கிறார்கள். அவர்களது கண் ஜாடை உண்மைக் காதல் கொண்ட பெண்ணின் கண் ஜாடையை விட ஆயிரம் மடங்கு மேலான மயக்கத்தை ஆண்களுக்கு அளிக்கவல்லது. அத்தகைய ஒரு பெண்ணின் கண் பேசும் மொழியைக் காதல் என்று நம்பித் தூக்கமில்லாமல் அவள் பின்னே அலைந்து அவமானப் படும் ஆண்களும் நிறைய உளர்.

ஆதலால் இளைஞர்களே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் உள்ளங்களை உங்கள் உண்மைக் காதலிக்காக அல்லது மனைவிக்காகவென்று இருக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை!

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்