திங்கள், 14 நவம்பர், 2011

இறைவா உன் மாளிகையில்

ஒரு மன்னரும் அவரது அமைச்சரும் நகர சோதனை நிமித்தம் செல்கையில் சற்றுத் தொலைவில் இறந்தவர் ஒருவரின் சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டனர். மன்னர் அமைச்சரிடம் அங்கே சென்று விவரம் அறிந்துவரக் கூறினார். அமைச்சரும் அங்கு சென்று இறந்தவர் குறித்த விவரத்துடன் திரும்பினார். அவரிடம் மன்னர் கேட்டார், "இறந்தவர் எங்கே செல்கிறார்? சொர்க்கத்துக்கா நரகத்துக்கா?" என்று. அவர் சொர்க்கத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறினாராம். "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று மன்னர் கேட்டதற்கு அமைச்சர் கூறினாராம், "இறந்தவர் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் தன் உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் யாவருக்கும் பேருதவி புரிந்து வந்தார். அவர் இழப்பினால் யாவரும் மிகவும் கவலை கொண்டுள்ளனர். இனி யார்
தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பார் என மன வருத்தம் அடைந்துள்ளனர்." என்றார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/panam-padaiththavan/kan-pona-

pokkile.php

நம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாள் உள்ளளவும் மக்கள் நலமாக வாழ உண்மையாக உழைத்தவர். தன்னிடமுள்ள செல்வங்களனைத்தையும் பிறர் நலனுக்கென ஈந்தவர். அவர் சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவ மனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் அப்பொழுதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து மருத்துவ வசதிகளுடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிறுநீரக அறுவை
சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சதாசர்வகாலமும் எம்ஜிஆர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். தெருவெங்கும் தினம்தோறும் இதுகுறித்த பிரார்த்தனைப் பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. உலகிலேயே இன்றுவரை வேறு யாருக்காகவும் இத்தகைய ஒருமனதான பிரார்த்தனை நடந்ததில்லை எனக் கூறலாம். மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் தனது சிறுநீரகம் ஒன்றை அவருக்கு தானமாக அளித்ததாலும் எம்ஜிஆர் உடல் நலம் பெற்று மீண்டுவந்தார்.

இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மருத்துவமனியில் இருந்தவாறே போட்டியிற்று வெற்றியும் பெற்ற அவர் தாயகம் திரும்பியதும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில காலம் இருந்த பின்னர் காலமானார்.

உள்ளத்தை உருகச் செய்யும் அந்தப் பாடல் இதோ:

திரைப்படம்: ஓளி விளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில்

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணூலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

யாரும் விளையாடும் தோட்டம்

"கோபம் பாபம் சண்டாளம்" என்று கோபத்தின் கெடுதியைக் குறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சண்டாளம் என்றால் மாபாதகம் எனப் பொருள். சினத்தினால் தீமையைக் குறித்துத் திருவள்ளுவர் சினம் எனும் கொடிய குணமானது சினங்கொள்வோரைக் கொல்வது மட்டுமன்றி அவரது இனத்தையே அதாவது பரம்பரையையே அழிக்க வல்லது என்று குறிப்பிடுகிறார்,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமாப்புணையைச் சுடும்

எனும் குறள் வாயிலாக.

இவ்வுலக வாழ்வில் நாம் பிறருடன் இணைந்து பணியாற்றுகையிலும் பிறருடன் பல வகைகளில் தொடர்பு கொள்கையிலும், பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதங்கள் புரிகையிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சில சமயங்களில் பகைமை ஏற்படக் காரணமாவதுண்டு. அப்படி ஒரு நிலைமை உருவாவதைத் தடுக்க ஓரே வழி கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் சினத்தைக் கட்டுப் படுத்துவதே ஆகும். இதற்குப் பொறுமை அவசியம். பொறுமைக்கு உதாரணமாய் பூமியைக் குறிப்பிடுவதுண்டு, உயிர்கள் அனைத்தையும் தாங்குதலால்.

"பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்"

என்று பாரதமாதாவின் பொறுமை குறித்து மஹாகவி எடுத்துரைக்கிறார்.

நாமனைவரும் இவ்வுலகில் வாழ்வது சொற்ப காலமே என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அந்தச் சொற்ப காலத்திலும் ப்ல்வேறு சூழ்நிலைகளால் கட்டுண்டு நாம் நம்மையறியாமலேயே பல்வேறு வழிகளில் இட்டுச் செல்லப்படுவதை உணர்கிறோம். நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தும் நாம் விரும்பிய வண்ணம் செயல்கள் நடைபெறாதது குறித்து வருந்துதலும் பிறருடன் முரண்படுதலும் துன்பத்தையே தரும்.

எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், எத்துணைத் துயர் வந்துற்ற போதிலும், எவ்விதமான தர்ம சங்கடங்கள் ஏற்பட்ட போதிலும், எத்தகைய அவமானங்களைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அவற்றல் மனம் உடைந்து வருந்துதலும் பிறருடன் பிணங்குதலும் அறியாமை.

ஒருவர் நம்மை விடப் பொருளாதரத்திலோ, ஆரோக்யத்திலோ, அறிவிலோ, வேறு விதங்களிலோ தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரைத் தாழ்வாக மதிப்பிடுவதும் நம்மை விட மேம்பட்ட நிலையில் இருந்தால் அவரைக் கண்டு அசூயை கொள்வதும் நம் மன நிம்மதியைக் குலைத்து விடுவதுடன் சமுதாயத்தில் அவப் பெயரையும் உண்டாக்கிவிடும்.

மக்களில் ஒரு சாரார் நாடோடிகளாய்த் திரிவது நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவிடும் வழக்கமாகும். இத்தகைய மக்கள் தங்களுக்கென்று சொந்தமாய் எவ்வித சொத்துக்களையும் சேர்ப்பதில்லை. சில காலம் ஒரு ஊரில் இருந்த பின்னர் தங்கள் கூட்டத்தாருடன் வேறோர் ஊருக்குச் சென்று அங்கே சில காலம் வசிப்பது என இவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய மக்கள் ஏழைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெரும்பாலும்
மகிழ்ச்சுயுடனேயே வாழ்வதைக் காண்கிறோம்.

இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் நாடோடிகளே. நாமும் பிழைப்பைத் தேடிப் பல ஊர்களுக்குச் சென்று வாழ்கிறோம். நம் விதிப்பயன் முடிந்ததும் உடலை நீத்து எங்கோ செல்கிறோம். நம் கையில் இருக்கும் ஓரே அதிகாரம் இருக்கும் சூழ்நிலையில், அது இன்பமாகிலும் துன்பமாகிலும் நாம் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோமா இல்லையா என்பதே ஆகும். மகிழ்வுடன் வாழ ஒரே வழி பொறுமை. தம்மை மீறி வந்துற்ற துன்பங்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்வோர்க்கே இன்ப வாழ்வு நிலைப்பதுண்டு.

யாரும் விளையாடும் தோட்டம்

திரைப்படம்: நாடோடித் தென்றல்
இயற்றியவர்: இளையராஜா
இசை: இளையராஜா
பாடியோர்:சித்ரா, மனோ
ஆண்டு: 1992

வ்வ்லலலலலல
டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
தேடவும் பள்ளுப் பாடவும் பள்ளிக் கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லே
வம்பில்லா வாழ்க்கையென்றால் துன்பம் இல்லே

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டேராவப் பாத்துப் போடு ஓலத்தோடு
வேறூரு போயிச் சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

ஆவியாகிப் போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழே வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரும் ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமரைப் பூ தண்ணி போல
மாறாது எங்க வாழ்வு வானம் போல

யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

என்றும் பதினாறு வயது பதினாறு

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிறையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று சக்தி உபாசகரான மஹாகவி பாரதி காளி தேவியைக் குறித்துப் பாடினார். இப்பாடலில் உரைத்தது போலவே எல்லோரையும் போல் வயிறு வளர்ப்பதற்கென்றே பணிகள் பல செய்து ஜீவிக்காமல், உபயோகமற்ற கதைகளைப் பேசாமல் தான் உரைத்தன யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மொழிகளாக நிலைநிறுத்தி, பிறர் மனம் நோகும்படியான செயல்கள் எதனையும் செய்யாமல் சாதிக்கொடுமையைக் களையப் பாடுபட்டு

பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கு உண்மையான விடுதலையை விரும்பிப் பாடுபட்டு, உண்டுடுத்துறங்கி விழித்து வயோதிகமடைந்து நோய்வாய்ப்பட்டு மடியாமல் இளம் வயதிலேயே தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டுத் தன் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் மஹாகவி.

பாரதியார் பகவத் கீதைக்குத் தான் எழுதிய உரையில் "கீதை ஒரு மோக்ஷ சாஸ்திரம், அது ஒரு அமரத்துவ சாஸ்திரம். மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் சாத்தியமெனவும் அதற்குரிய மார்க்கத்தை கீதை காட்டுகிறது" என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய் இன்பங்களிலே ஆவலற்றவனாய் பகைத்தலும் விழைத்தலும் இன்றி ஒருவன் இருப்பானேயாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்ககத் தகுந்தவன்" என்ற பொருள்பட விளங்கும் கீதா ஸ்லோகம் ஒன்றை மேற்கண்ட தன் கருத்துக்கு மேற்கோளாகக் காட்டுகிறார் மஹாகவி.

மார்க்கண்டேயர் ஒரு மகரிஷி. இன்ப துன்பங்களைத் துறந்து இறைவனைச் சரணாகதியடைந்தவர். மேற்கண்ட கீதா ஸ்லோகத்தின் உபதேசப்படி வாழ்பவர். அன்றும், இன்றும், என்றும் 16 வயது இளைஞராகவே வாழும் நிலை அடைந்ததாகக் கருதப்படும் ஒரே மனிதர்.

மனிதப் பிறவியானது உலகவின்பத்தைத் துய்ப்பதற்கெனவே எடுக்கப்பட்டது என நம்பி மேற்கூறிய தத்துவங்கள் எவற்றையும் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கும் வரை இன்பமாய் வாழ வழி தேடுவதே வாழ்க்கையாகக் கொண்டு பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இன்ப வாழ்வு வாழ விரும்பி அதற்காகவே பாடுபடும் சாமான்ய மாந்தர்களும் என்றும் 16 வயதினராக இளமை நிலைக்கப் பெற்று வாழ்வதிலுள்ள சுகத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய இன்ப வாழ்வை அடையக் கனவு காண்பதும் இயற்கையே.

என்றும் பதினாறு வயது பதினாறு

திரைப்படம்: கன்னித் தாய்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

கன்னம் சிவந்தது எதனாலே? கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே? உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலெ? வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்ணம் மின்னுவதெதனாலே? இந்த வள்ளல் தந்த நினைவாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

விழிகள் பொங்குவதெதனாலே? வீரத்திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே? இந்த வீரத்திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

மனிதன் என்னதான் விவேகத்துடன் நடந்துகொண்டாலும் சில சமயங்களில் அவனையும் மீறிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அவன் மனம் உடைந்து போவதுண்டு. என்ன செய்வது என்று தொ¢யாமல் தவிப்பதுண்டு. தர்மபுத்திரர் எத்தனையோ விவேகத்துடனும் வைராக்யத்துடனும் இருந்தார். பரமாத்மாவும் அவருடன் இருந்தார். இருந்தும் அவர் எத்தனையோ சமயங்களில் மனம் தளர்ந்ததுண்டு. அச்சமயங்களில் பகவானிடம் அதிக பக்தி செய்ய வேண்டும். நமது உபாசனா மூர்த்தியை பூஜித்து அதன் மூலம் நாம் அதிக சக்தி பெற வேண்டும், கார் பேட்டா¢யை சார்ஜ் செய்வது போல் நம்மை சார்ஜ் செய்துகொண்டு அதன் மூலம் பலம் பெற்றுக் கஷ்டங்களை சமாளிக்கவோ அல்லது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவோ முற்பட வேண்டும்.

நவவித பக்தி

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு
செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே
அற்பணித்தல்

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

இவற்றுள் தாஸ்யம் என்பது மிகவும் விசேஷாமானது. இவ்வழியே தேவதாசியர் தம்மை இறைவனுக்கு தாசியாய் அர்ப்பணம் செய்து தம் வாழ்நாளில் இல்லற சுகங்களைத் துறந்து வாழ்ந்ததாகப் புராணங்களில் காண்கிறோம். அகில உலகையும் ரக்ஷித்துக் காப்பவளான லோகமாதாவான பராஸக்தியே ஹிமவான் மகளாகப் பிறந்து தவம் செய்து ஈசனையே மணாளனாக அடைந்ததும், அவளே பின்னர் மதுரை மீனாக்ஷியாக அவதாரம் செய்து அதே வழியில் தவம் செய்து ஈசனை அடைந்ததாகவும் சிவபுராணம் சொல்கிறது.

12 ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளும் இதே விதமான பக்தி மார்க்கத்தை மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில் கொண்ட நிலையில் காட்சி தரும் அரங்கநாதனை மணந்ததாக வரலாறு கூறுகிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்று திருஞான சம்பத்தப் பெருமான் இத்தகைய பக்தியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

இதே மார்க்கத்தில் இங்கே ஒரு இளமங்கை குமரக் கடவுள் மேல் காதல் கொண்டு அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கும் மனநிலையில் பாடி ஆடுவதாக ஒரு காட்சி பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 1960ஆம் ஆண்டு ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்த இப்படத்தில் இப்பாடலுக்கு நாட்டியம் ஆடுபவர் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுக்கு இணையான நடனத் திறமை கொண்ட புகழ்பெற்ற கமலா ஆவார்.

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

திரைப்படம்: பார்த்திபன் கனவு
இயற்றியவர்: விந்தன்
இசை: வேத்பால் வர்மா
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1960

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே மயிலே
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே மயிலே
ஒத்தி எடுத்திடவே உதடவரைத் தேடுதடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே மயிலே
அள்ளி அணைத்திடவே அவர் வரக் காணேனடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே