புதன், 23 அக்டோபர், 2013

வில்லேந்தும் வீரரெல்லாம்

சூதாட்டமே எதற்கும் தீர்வு என்றாகிவிட்ட இன்றைய உலகில் கேடுகளுக்குப் பஞ்சமில்லை. ஜாதி மத பேதங்களையும், கருப்புப் பணத்தையும், அடியாட்கள் கூட்டத்தையும், சாராயத்தையும், இலவசங்களையும் பகடைக்காய்களாக உபயோகித்துப் பதவி வேட்டையாடுகின்றனர் அரசியல் வாதிகள். சட்டத்திலுள்ள ஓட்டைகளையும், வக்கீல்களின் வாதத்தையும், வாய்தாக்களையும், ஜாமீன்களையும், சாட்சிகளைக் கலைப்பதையும் பகடைக் காய்களாக உபயோகித்து நீதித்துறையை ஏமாற்றித் தங்கள் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர் சமூக விரோதிகள். இத்தகைய சூதாட்டத்தில் எந்த ஒருபிரச்சினைக்கும் தீர்வு காண பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கேற்ற பகடைக் காய்களாக உள்ளவை உண்ணா விரதம், சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு, பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் போன்றவையே. சமூகநீதி மறுக்கப்படுவதால் விளையும் அசம்பாவித்ங்கள் இவையாகும்.

இவை போன்ற முறைகேடான வழிகள் அவ்வப்போது தீர்வாக விளங்கினாலும் அவற்றின் பின் விளைவுகள் உரிய காலத்தில் கிடைத்தே தீரும் என்பது இயற்கை நியதி. "சூதும் வாதும் வேதனை செய்யும்" எனும் சான்றோர் வாக்கு பொய்த்ததில்லை.

முற்காலத்தில் அரசியலில் "பகடை" எனும் சூதாட்டம் பல சமயங்களில் அரசர்களிடையே நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் மஹாபாரதக் கதையிலும் நளன் சரித்திரத்திலும் உள்ளன. சூதாட்டத்தினால் நளனும், பாண்டவர்களும் அனுபவித்த மாபெரும் துன்பங்கள் மக்களுக்கு வழி காட்டும் என்பதற்காகவே பலராலும் பல சமயங்களிலும் எடுத்துரைக்கப் படுகின்றன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படமான "குலேபகாவலி" படத்தில் அவர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுவார்கள். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக்க வழி செய்வார். 

சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குனர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் ஸ்வாரஸ்யமான விதத்தில் இப்பாடல் காட்சிகளில் தொகுக்கப்பட்டுள்ளன.

வில்லேந்தும் வீரரெல்லாம்

இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பி. லீலா, திருச்சி லோகநாதன்

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே வீண்
அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே இந்த
ஜெகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளராதே இந்த
ஜெகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளராதே 
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
பன்னிரண்டு போட வேணும் பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும் பலித்தாலே ஜெயம் காணும்
ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு
சூராதி சூரனென்று சோம்பேறியாய்த் திரிந்தால் 
கட்டிடச்சொல்லு மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவே 
வெட்டிடச் சொல்லு மண் வெட்டிடச் சொல்லு

மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்
மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும் சதியால் பாவம் மாய்கிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

மதியே இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார் தலை
விதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்

வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது என்னை 
வெற்றி பெற முடியாது நீர் கற்ற வித்தையும் செல்லாது

என்ன வேணும் துரையே இஷ்டம் போலே கேளினியே
என்ன வேணும் துரையே இஷ்டம் போலக் கேளினியே

அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு
அன்னமே அபரஞ்சியே என் ஆசையான கற்கண்டு
எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு என்
எண்ணம் போலவே வெற்றி காணவே போட வேணுமே ரெண்டு

வீணான ஆசையாலே வீழ்ச்சி பெற்ற மன்னவா
தானென்ற கர்வங்கொண்டு தலைவணங்கும் மன்னவா
தானென்ற கர்வங்கொண்டு தலைவணங்கும் மன்னவா

நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா
நெளிஞ்சு வளைஞ்ச அழகு ராஜா நீ
நெல்லுகுத்தியாகணும் 
நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
கொள்ளவிச்சுப் போடனும்
நேரத்தோடு குதிரைக்கெல்லாம்
கொள்ளவிச்சுப் போடனும்

ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
தேரிஹி சலீங்கி நஹி ஹட்டு
ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
தேரிஹி சலீங்கி நஹி ஹட்டு
மைஃபில் மே சதுரங்கேல்னே ஆயா ஹூம்மை ஆயா
மைஃபில் மே சதுரங்கேல்னே ஆயா ஹூம்மை ஆயா
ஐசா ஹைதோ பைசா ஹைக்யா சதுரங்கேலோ ஆவோ ப்யாரீஹி
அரே வா வா வா
ஐசா ஹைதோ பைசா ஹைக்யா சதுரங்கேலோ ஆவோ ப்யாரீஹி 
ஓஹோஹோ ப்யாரி ப்யாரி ஆவோ ஹமாரா லட்டு
ஆவோ ஆவோ மேரே ப்யாரே ஆவோ

பந்தமுள்ள சுந்தராங்கி பகட களிக்கான் வந்நு ஞான்
பகட களிக்கான் வந்நு
சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்தமாக்கான் போகுன்னு
சந்தமுள்ள ராஜன் ஞானே சொந்தமாக்கான் போகுன்னு

நாடு விட்டு நாடு வந்நு நசிச்சுப் போகாதே ராஜா
நாடு விட்டு நாடு வந்நு நசிச்சுப் போகாதே ராஜா
நஞ்ஞு போலுள்ள பகட களியில் நாட்டம் கொள்ளாதே ராஜா
நஞ்ஞு போலுள்ள பகட களியில் நாட்டம் கொள்ளாதே ராஜா
நாட்டம் கொள்ளாதே

நருநிதலபுல ஸ்ருஷ்டி நரசுதொடுண்டனா பணியேனியுண்டு சர்வேஸ்வருனகு 
தலநிஜும்பருகனி சர்வாகுடகு நீவு கானி சர்வங்குண ப்ரதுகுமையா

கொஞ்சும் மொழி மைந்தர்களே

நெடுநாட்களாக மழையின்றி வரண்ட சூழ்நிலை நிலவுவதாலும் வெயில் மிகவும் கடுமையாக வாட்டியதாலும் தொடர்ந்து கணிணி அருகில் அமர்ந்து பணி செய்ய இயலாத நிலையில் தடைப்பட்டிருந்த தினம் ஒரு பாடல் பதிவு ஒரு நீண்ட நெடிய இடைவெளிக்குப் பின் தொடர்கிறது. 

மனிதர்களாகிய நாம் எவ்வளவு தான் முயன்றாலும் சில செயல்களை நம் விருப்பத்தின் படியே நிறைவேற்ற இயலாத சூழ்நிலைக் கைதிகளாக இவ்வுலகில் திகழ்கிறோம் எனும் அப்பழுக்கற்ற உண்மை இதிலிருந்து தெரிகிறது. வாழ்வது எதுவரை என்பதும் வாழ்நளில் சாதிப்பது யாது என்பதும் நம் கையில் இல்லை. ஆனால் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமபாவத்துடன் அனுபவித்து என்றும் மகிழ்ச்சியாக இருப்பது நம் கையிலேயே உள்ளது. வாழ்க்கையில் நமக்குத் தானாகக் கிட்டும் இன்பங்களை மனதார அனுபவித்து மகிழ வேண்டும். அம்மகிழ்ச்சியில் கடந்த காலத்தின் துன்ப நினைவுகளையும் எதிர்காலத்தை எதிர்கொள்வது குறித்த அச்சத்தையும் வெல்ல வேண்டும். அப்பொழுது நம்முள் எத்தகைய துயரங்களையும் தாங்கும் வலிமை வளரும்.

இயற்கை நம்மையும் படைத்து நாம் அருந்தி மகிழ அமுதொத்த நீரும், காய், கனி, கிழங்கும் தானியங்களும் தந்து அவற்றை விளைவிக்கும் ஆற்றலையும் அளித்து இன்பமாய் வாழ வழி செய்திருக்க நம்மில் பலர் இயற்கை வளங்களைத் தாமும் அனுபவியாது பிறரும் அனுபவிக்க விடாது வெறும் காகிதத்தாலான பணத்தை சேர்ப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் வீணாக்குகின்றனர். சாயுற பக்கமே சாயுற செம்மரி ஆடுகள் போல் இத்தகைய மாந்தர்களின் பகட்டைக் கண்டு அவர்கள் தம்மை விட அதிகமான இன்பங்களை அனுபவிப்பதாக எண்ணி நம்மில் பலர் தாங்களும் அவர்களைப் பின்பற்றி அழிவுப் பாதையில் செல்வது மடமை.

இவ்வுலகம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இங்கே அனைவருக்கும் அனைத்தும் உள. அவற்றை அறியாமல் எச்சிலைக்கு சண்டையிடும் தெரு நாய்கள் போல் மனிதர்கள் பொன் பொருளுக்காகத் தம்முள் வேற்றுமையை வளர்த்துக் கொண்டு சண்டையிடுவது தகாது.

உலகில் எத்தனையோ இன்பங்கள் கொட்டிக் கிடந்தாலும் அனைத்திற்கும் மேலாக அளவிடற்கரிய இன்பம் தருவது உறவுகளே. அவற்றிலும் குறிப்பாகப் பிள்ளைச் செல்வங்களே. பிள்ளைகளுக்குப் பிள்ளைகள் பிறக்க, பேரப் பிள்ளைகளைப் பெற்று, தாத்தா பாட்டியாகும் அதிர்ஷ்டசாலி மக்கள் பிறர் யாவரைக் காட்டிலும் மிகவும் அதிகமான இன்பம் அடைவர் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவ்வாறு இறையருளால் வந்து வாய்க்கும் பிள்ளைச் செல்வங்களுக்கு இன்பமாய் வாழ வழி காட்டுவது நம் கடமை. 

அவர்கள் ஒருவரோடொருவர் அன்பு செலுத்தவும், என்றும் ஒற்றுமையுடன் இருக்கவும் உலகிலுள்ள ஜீவர்கள் யாவரையும் நேசித்து, பரோபகார சிந்தனையுடன் வாழ நாம் வழி காட்ட வேண்டும்.


திரைப்படம்: என் வீடு
இயற்றியவர்: 
இசை: வி. நாகைய்யா, ஏ. ராமராவ்
பாடியோர். டி.ஏ. மோதி, எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1953

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே
கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

ஜில்லெனவே மெல்ல மெல்ல வந்துலாவும் தென்றல் தன்னை
ஜில்லெனவே மெல்ல மெல்ல வந்துலாவும் தென்றல் தன்னைப் பாடுவீரே

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
இன்பமானதிவ்வுலகம் அன்புள்ளம் கலந்திடிலே
பூங்காவாம் உன்தன் மனம் உள்ளன்பே தெய்வமனம்
இவ்வுண்மை நீ மறவேல்

கொஞ்சும் மொழி மைந்தர்களே தவழ வானில்
தவழ் நிலவின் ஒளியில் ஓடி ஆடுவீரே

பூலோகம் தனில் இங்கே சொர்க்கலோகம் அடைவாயே
புண்ணியத்தில் மானிடப் பிறப்படைந்த தென்குவையே
நெறி தவறி நீ வீழ்ந்தால்
நெறி தவறி நீ வீழ்ந்தால் பாழடைந்த துர்வாழ்வாய்
கை தவறிய கண்ணாடி
கை தவறிய கண்ணாடித் தூள் போலாம் பயனிலை வாடேல்
கொடிய பாதை நடவாதே மனதில் மகிழ்ச்சி கிடையாதே
இருள் சூழ்ந்திடும் வாழ்வு
அன்பிலார்க்கு இன்பம் இல்லை இவ்வுண்மை நீ மறவேல்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு

உலகில் மாந்தர்க்கும் ஏனைய பிற உயிரினங்கள் அனைத்திற்கும் வாழ்வில் மிகவும் இன்பமும் மகிழ்ச்சியும் அளிக்கும் செல்வம் பிள்ளைச் செல்வமே என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும். எனினும் மனித குலம் பிற உயிரினங்களனைத்தையும் விட மேம்பட்டதாக விளங்குவதால் அவர்கள் பெறும் மக்கள் பேருக்குப் பிள்ளைகளாக இராமல் அறிவுடையவர்களாகவும் அன்பும் கருணையும் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

எனும் வள்ளுவர் வாய்மொழி இதனை உறுதி செய்கின்றது.

மிருகண்டு எனும் முனிவரும் அவரது பத்தினியும் நீண்ட காலம் புத்திரப் பேறு கிட்டாமையல் இறைவனை மனமுருகி வேண்டினர். இறைவரும் அவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய அறிவிற் குறைந்த புத்திரன் வேண்டுமா அல்லது 16 ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய அறிவிலும் பக்தியிலும் சிறந்து விளங்கும் புத்திரன் வேண்டுமா எனக்கேட்க அவர்கள் அறிவிற் சிறந்த பக்திமானாக விளங்கும் புத்திரனே வேண்டுமெனக் கேட்டு அதன் படியே மார்க்கண்டேயனை மகனாகப் பெற்றதாகவும், பின்னர் மார்க்கண்டேயனுக்குப் பதினாறு வயது நிறைந்த நிலையில் அவனது உயிரைக் கொண்டுபோக யமன் வந்ததாகவும், யமன் பாசக்கயிற்றை அவன் மீது வீசுகையில் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகத் தழுவி இறைவனை வேண்டவும் இறைவன் யமனைக் காலால் எட்டி உதைத்துப் பின் மார்க்கண்டேயன் என்றும் பதினாறு வயதினனாக வாழ வரமருளியதாகவும் புராணம் கூறுகிறது. 

இதன் காரணமாகவே வள்ளலார் 

அருமருந்தொரு தனி மருந்து 
அம்பலத்தில் கண்டேனே

காலனைக் காலால் உதைத்த மருந்து
காமனைக் கண்ணால் எரித்த மருந்து
---------------------
மாணிக்கவாசகர் கண்ட மருந்து 

என்றொரு பாடலிக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலை என் தந்தையார் பல முறை சிவபூஜை செய்கையில் பாடக் கேட்டிருந்தும் மனனம் ஆகவில்லை. தற்போது அவர் இவ்வுலகில் இல்லை. இப்பாடல்இணையத்திலும் கிடைக்கவில்லை. தெரிந்தவர் யாரேனும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

"இல்லறமல்லது நல்லறமன்று" என்று ஔவையார் மொழிந்த நீதி தொன்றுதொட்டு நம் பாரத தேசத்தில் மக்கள் கடைபிடித்து வருவதாகும். முற்றும் துறந்த முனிவர்களும் இல்லறத்திலிருந்து கொண்டே தவத்தில் ஈடுபட்டதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் நாத்திகர்களின் ஆதிக்கம் மேலோங்கியதால் முற்றும் துறந்த முனிவர்கள் திருமணம் செய்துகொள்வது தவறு என்பதான ஒருகோட்பாடு நடைமுறைக்கு வந்து அதன்படிப் பலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே துறவறம் மேற்கொண்டு வாழ்வதும் நிகழ்ந்தது. இத்தகைய துறவிகளில் பலர் தம்மை ஊராரின் கண்களுக்குத் துறவி போல் காண்பித்துக் கொண்டு திரை மறைவில் இல்லறவாசிகளுக்கும் கிட்டாத அளவில் சிற்றின்பங்களில் திளைத்து வாழ்வதும் பல சமயங்களில் அறியப்பட்ட செய்தியாகும்.

இத்தகைய துறவி எனும் போர்வையில் திரியும் ஆஷாடபூதிகளின் பின்னே செல்லாமல் மனிதர்கள் யாவரும் இல்லறத்தை நல்லறமாக்கி, அறிவுசான்ற புத்திரர்களைப் பெற்று அவர்கள் இவ்வுலகைக் காக்கும் கடமையை மேற்கொள்ளும் படி அவர்களை ஆளாக்கி உலகில் யாவரும் இன்பமாய் வாழ வழிகோலுவதே சிறப்பு. நாட்டில் எங்கும் லஞ்சமும் ஊழலும் பெருகி மனித நேயம் சிதைந்து போனதால் துன்புறும் கோடானு கோடி மக்களைக் காப்பாற்ற நாம் இளைய சமுதாயத்தையே நம்ப வேண்டும். அவர்களை அத்தகைய பணிக்குத் தயார் செய்ய வேண்டும்.



படம் : பிள்ளைக்கனியமுது
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
குரல் : சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
இசை : கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1958

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும் - நாம்
செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
செல்லக்கிளி மழலை மொழி சிந்திட வேணும் - நாம்
செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கள்ளமில்லா அன்பை, கன்னித்தமிழ் பண்பை
கலந்துணவாய் நாம் அதற்கு ஊட்டிட வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்

தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
தெள்ளுதமிழ்க் கலைகளிலே தேர்ந்திட வேணும்
பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
உள்ளம் ஒன்று கூடும், உறவின் பலன் நாடும்
நம் கனவும் நினைவாகி  நலம் தர வேணும்

பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்