ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஒளிமயமான எதிர்காலம்

ஜப்பான் நாட்டில் ஒரு சிறை. அங்கே ஒரு தூக்கு தண்டனைக் கைதியைத் தூக்கிலிடும் நாள் நெருங்கியது. மறு நாள் காலை அவன் தூக்கிலிடப்படவிருந்த நிலையில் சிறையதிகாரிகள் அவனது கடைசி ஆசை ஏதேனுமிருந்தால் கூறுமாறு அவனைக் கேட்க, அவன் அவர்களிடம் தனக்கு ஒரு கிடார் வாத்தியம் வேண்டுமெனவும் அதனை மீட்டிப் பாட விரும்புவதாகவும் சொல்லவே, அவர்கள் அவ்வாறே அவனுக்கு ஒரு கிடார் வாத்தியத்தை வழங்கினர். தன் சோகத்தையெல்லாம் பிழிந்து ஒரு பாடலை அவன் பாடுவான் என அவ்வதிகாரிகளும் பிற கைதிகள் உட்பட அனைவரும் எதிர்பார்த்திருக்கையில் அவர்கள் அனைவரையும் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவன் மகிழ்ச்சி ததும்பும் தொனியில் ஒரு இனிய பாடலைத் தன் தேனினும் இனிய குரலில் பாடினான். கிடார் வாத்தியத்தின் நாதத்துடன் இழைந்து இணைந்தமைந்த அப்பாடல் புதுவாழ்வைத் தொடங்கும் ஒருவன் தன் எதிர்காலத்தைப் பற்றிய இனிய கனவுகள் நிறைவேறும் நம்பிக்கையுடன் பாடுவதாக அமைந்தது.

அது இரண்டாம் உலகப் போர் நடைபெற்று வந்த காலம். அன்றிரவு அமெரிக்கர்களின் குண்டு வீச்சினால் ஹிரோஷிமா நாகசாயி நகரங்கள் அழிகையில் அச்சிறை மீது விழுந்த அணுகுண்டினால் சிறையில் இருந்த அனைத்துக் கைதிகளுடன் அதிகாரிகளும் பிற ஊழியர்களும் இறந்து போயினர். ஆனால் என்ன ஆச்சரியம்! அக்கைதி ஒருவன் மட்டும் உயிர் தப்பினான். பின்னர் அவன் தனது பாடல் வரிகளில் மொழிந்த வண்ணமே சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான்.

இச்சம்பவம் உண்மையிலேயே நிகழ்ந்ததா அல்லது கற்பனையாக யாரும் கூறியதா என்பதை உறுதியாகச் சொல்ல என்னால் இயலாது. இருப்பினும் இத்தகைய சம்பவம் நடப்பது உலகில் சாத்தியமே. இதன் மூலம் நாம் அறிவது என்னவெனில் நாம் எத்தகைய துன்ப நிலையிலிருப்பினும் நமது உள்ளத்தில் நம்பிக்கை கொண்டு திகழ்ந்தால் அத்துன்பம் எதுவாயினும் அது பகலவனைக் கண்ட பனி போல் விலகி வாழ்வில் இன்பம் விளைவது உறுதியெனும் செய்தியேயாகும்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு!

ஒளிமயமான எதிர்காலம்

திரைப்படம்: பச்சை விளக்கு
இயற்றியவள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1964

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
_________________________