செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

சின்னத் தாயவள் தந்த ராசாவே!

தினம் ஒரு பாடல் - நவம்பர் 29, 2015

பெண்களை தெய்வமாகப் போற்றி வணங்கிக் கொண்டாடி மகிழும் பாரம்பரியம் மிக்க பண்பாடுடைய நாடு பாரத நாடு. பாரத மக்கள் குடும்ப வாழ்க்கையை ஸ்வர்க்கமாகக் கருதுகின்றனர். குடும்ப வாழ்க்கையை முறையாகத் தம் பிள்ளைகளுக்கு அமைத்துக் கொடுப்பதே பெற்றோரது தலையாய கடமையாக அமைந்த கலாச்சாரம் இந்தியக் கலாச்சாரம். திருமணத்தில் தொடங்கி வாழ்நாள் உள்ளவரை கணவன் மனைவி பந்தம் ஏனைய உறவுகளைக் காட்டிலும் இன்றியமையாததும் மேலானதுமாகப் போற்றி வந்த நம் முன்னோர் அப்பண்பை நம் அனைவருக்கும் இளமையிலிருந்தே ஊட்டி வளர்த்துள்ளனர். 

அத்தகைய சிறப்பு மிக்க பாரத நாடு இன்று எந்த நிலையில் உள்ளது என்று எண்ணிப் பார்க்கையில் மனது பொறுக்க மாட்டேன் என்கிறது. பெண்கள் நாள் தோறும் பல விதங்களில் அனைவர் முன்னிலையிலும் அவமதிக்கப் படுவதும், ஒழுக்கம் கெட்ட பல குற்றவாளிகளால் கற்பழிக்கப் படுவதும், கொல்லப் படுவதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. இத்தகைய சீர்கேடுகளைத் தடுத்துப் பெண்களின் நலனைக் காக்கும் கடமையை அரசாங்கமும் அரசு நிர்வாகத்தில் இயங்கும் காவல் துறை, புலனாய்வுத் துறை மற்றும் நீதித் துறை தங்களது கடமையை முறையாக செய்கின்றனரா என்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது நமது நாட்டில் இன்றைய சீர்கேடான அரசியல் சூழ்நிலையால். பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் பெயரளவில் இருந்த போதிலும் அவை விரைவில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதில் தவறுகின்றன. நீதி பெற அளவுக்கதிகமான தாமதம் ஏற்படுவதுடன் குற்றவாளிகள் சாட்சிகளை அழித்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பிக்கவும் ஏதுவாகிறது. 

இவையன்றி மேலும் பல சந்தர்ப்பங்களில் அப்பாவிப் பெண்கள் சில ஆண்களால் ஆசை காட்டி ஏமாற்றப்பட்டு மும்பை, கல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களுக்குக் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படும் மகா கொடுமைகளும் நம் நாட்டில் தினந்தோறும் நடைபெற்று வந்த போதிலும் இக்குற்றங்களை வெளிச்சம் போட்டு சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் கடமையைச் செய்ய வேண்டிய தொலைக் காட்சி மற்றும் இதர செய்தி ஊடகங்கள் அவ்வாறான தம் கடமைகளைப் புறக்கணித்து ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் பணம் படைத்தோர் தரும் பெரும் பணத்துக்காகவும் இதர பல சலுகைகளுக்காகவும் தேவையற்ற செய்திகள் பலவற்றை வெளியிட்டு மக்களிடையே குழப்பம் விளைவிக்கும் துர்ச் செயலை மிகுதியாகச் செய்து வருவது வேதனையளிக்கிறது.

பெண்கள் மேல் நடத்தப் படும் பாலியல் கொடுமைகளுக்குப் பெரிதும் துணை போவது போதை மருந்துகள் ஆகும். பாலுணர்ச்சியைத் தூண்டும் போதை மருந்துகள் பல நகரங்களில் பகிரங்கமாக விற்கப்படுகின்றன என்பது நாடறிந்த உண்மை. இருந்த போதிலும் அரசும் காவல் துறையும் இப்போதை மருந்து விற்பனையையும் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கெதிராக இழைக்கப் படும் கொடுமைகளையும் கண்டு கொள்ளாமல் குற்றவாளிகள் தரும் கையூட்டைப் பெற்றுக்கொண்டு வாளாவிருப்பதும் அனைவரும் அறிந்ததே.

பெண்களுக்கு உரிய மரியாதை தருவது மக்கள் அனைவரின் கடமையாகும். பெண்களை அவமதிப்போர் யாராயினும் அவரைத் தட்டிக் கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. குற்றச்செயல்களை மக்களுக்கு உரிய முறையில் தகுந்த நேரத்தில் சரியான தகவல் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லும் கடமையைச் செய்யும் ஊடகங்கள் பல நம் நாட்டில் உருவாக வேண்டும். பணத்திற்காக ஊடகத்தை விபச்சாரத்திற்கொப்பானதொரு நிலையில் வைத்திருக்கும் பாதகர்கள் அழிந்தொழிய வேண்டும். மக்கள் கவனததைக் குற்றச் செய்திகளிலிருந்து திசை திருப்பும் ஏமாற்று ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் செய்தி நிறுவனங்களாகப் பல ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. இக்கொடுமையும் தடுக்கப்பட வேண்டும்.

இளம் வயதில் அறியாப் பருவத்தில் எவனோ ஒருவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தை பெறுகிறாள். பெற்ற பிள்ளையை சமுதாயத்தின் கொடுமைகளுக்கஞ்சி ஒரு இரயில் வண்டியின் சரக்குப் பெட்டகத்தில் வைத்து அனுப்பி விடுகிறாள். தாயில்லாமல் வளரும் அப்பிள்ளை ஒரு குற்றவாளியாக வளர்கிறான். அதன் பின்னர் ஒரு நாள் யதேச்சையாகத் தன் தாயைக் காண்கிறான். தாயும் அவனும் ஒன்று சேர்வதைப் பல கட்டக் கதையாகப் படமாக்கி ரசிகப் பெருமக்களை பிரமிக்க வைத்த திரைப்படம் தளபதி. அந்தத் தாயின் தவிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அப்படத்தின் பாடல் ஒன்று இன்றைய பாடலாக மலர்கிறது.


திரைப்படம்: தளபதி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ். ஜானகி

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

சொல்லவா ஆராரோ?
நம் சொந்தங்கள் யாராரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ?

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

பால் மணம் வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஊர்வலம்
வேண்டிட வந்த பூச்சரம்
வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ?
தெய்வக் கோயிலை சென்று சேருமோ?
எந்தன் தேனாறே!

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

சொல்லவா ஆராரோ?
நம் சொந்தங்கள் யாராரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ?

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!

தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் தான்
நெஞ்சில் வாங்கிட
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே!

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே!

சொல்லவா ஆராரோ?
நம் சொந்தங்கள் யாராரோ?
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ?

சின்னத் தாயவள் தந்த ராசாவே!
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே!