தினம் ஒரு பாடல் - டிசம்பர் 13, 2015
ஆசை கோபம் களவு கொண்டவன் பேசத் தெரிந்த மிருகம் என்றான் கவிஞன் கண்ணதாசன். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் சமீபத்தில் பெருமழையால் விளைந்த சேதங்களும் அதனைத் தொடர்ந்து பல மனிதர்களின் நடவடிக்கைகளும் அமைந்திருந்ததை அனைவரும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். எங்கும் ஒரு சிறு துளி நிலத்தையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு பல அரசியல்வாதிகளும், வியாபார நிறுவனங்களும், கல்லூரி நிர்வாகங்களும், வீடு கட்ட விரும்பும் பொது மக்களும் எனப் பாகுபாடின்றி ஆக்கிரமிப்புச் செய்தனர். மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைத்து வெயில் காலத்தில் நிலத்தடி நீரைக் காப்பாற்றித் தரும் பல ஏரிகளையும் மரங்கள் வளர்ந்து விவசாயம் செய்துவந்த பல நிலங்களையும் ப்ளாட் போட்டு விற்றுப் பெரும் செல்வந்தரானோர் பலருளர். அதில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் திருட்டுத்தனமாகப் போலி ஆவணங்கள் தயாரித்துத் தனியார் வசமாக்கிய மோசடிகள் பலவுண்டு என்பதை அனைவரும் அறிவர். சாக்கடை போடவென்று ஒதுக்கப்பட்ட அரசு நிதியைச் சென்னை மாநகராட்சியின் மாண்பு மிகு கவுன்சிலர்கள் பலர் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று சாக்கடை போடாமலே போட்டதாகக் கணக்குக் காட்டி நகைகளும் பல்வேறு சொத்துக்களும் வாங்கிக் குவித்துக் கோடீஸ்வரர்கள் ஆயினர் என்பதும் உலகறிந்த ரகசியமாகும். தெருக்களில் குப்பைகள் கொட்டிக் கிடக்க அவற்றை அவ்வப்பொழுது அள்ளி எரியாமல் வீடுகளின் முன்
குவித்து வைத்து வீட்டுச் சொந்தக் காரர்களை மிரட்டியும் பயமுறுத்தியும் பணம் சம்பாதித்த பல கவுன்சிலர்கள் கதையும் தமிழ்நாடு அறியும்.
பேராசை பெருநஷ்டம் எனும் பழமொழிக்கேற்ப சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளெங்கும் தண்ணீர் பெருக்கெடுத்தோடி வெள்ளம் வடியப் பல நாட்கள் ஆன நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. ஏரிகள் மூடப்பட்டதல் செல்ல இடமின்றி வெள்ள நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து நிரம்பவே பல கட்டிடங்கள் முதல் தளம் முழுவதும் மழை நீரில் மூழ்கி மக்கள் யாவரும் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. சாக்கடைகள் போடப்படாததால் சாக்கடைகளில் செல்ல வேண்டிய கழிவு நீரும் மழை நீருடன் சேர்ந்து கொண்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்களிலும் வீடுகளுக்குள்ளும் புகுந்து நிரம்பி ஊரே சாக்கடைக் கோலம் பூண்டு ஊழித் தாண்டவம் புரிந்த கொடுமைகளை நேரில் கண்டவரே உணரக்கூடும். தொலைக்காட்சிகளிலும் இணைய தளங்களிலும் வேடிக்கை பார்த்துத் தெரிந்து கொண்ட நம்மைப் போன்ற பலரும் வெள்ளத்தால் விளைந்த துன்பங்களை முழுமையாக உணர இயலாது என்பதே உண்மை.
உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல் பேராசைப் பட்டு நிலங்களை ஆக்கிரமித்து சொத்து சேர்க்கும் ஆசையில் தகாத முறையில் ஆக்கிரமிப்பு செய்த பலரும் இன்று வீடிழந்து கையில் உள்ள பொருளிழந்து செய்து வந்த தொழில் இழந்து, பெரு மூலதனத்தில் செய்து வந்த வியாபாரங்கள் அழிந்து அவதிப் படுகின்றனர் என்பது கண்கூடு. அரசியல்வாதிகள் இது நாள் வரை பொய் சொல்லி நடத்தி வந்த நாடகங்கள் யாவும் மழை நீரில் நீலச்சாயம் பூசி வந்த நரி நனைந்த போது வெளியானது போல் வெளியாகியது ஒரு தெய்வச் செயல் என்றே சொல்லலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் நம்பும் விதமாக வந்துற்றது இப்பேரழிவு.
சுயநலம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்ந்த பல செல்வந்தர்களும் ஏழைகள் போலாயினர். அவர்களுக்கு உயிர்ப்பிச்சை தந்தவர் வெகு சாமான்ய மக்களே எனக் கண்டபோது அவர்களது அறிவுக் கண் திறந்ததென்றே கொள்ளலாம். அரசு இயந்திரங்கள் முடங்கிப்போன நிலையில் அரசு நடத்தும் சாராய வியாபாரம்மட்டும் நிற்காமல் நடந்தது ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்தாற் போல் இருந்தது.
பொது மக்கள் தாங்களாகவே சென்று பலருக்கும் உதவிகள் புரிந்து ஒருவரையொருவர் காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்கப் பாடுபட்டனர். நமக்கு நாமே திட்டம் என்று நாட்டைக் கொள்ளையடித்த சில அரசியல்வாதிகளுன் சுயரூபத்தை மக்கள் கண்டு கொண்டார்கள்.
இனியாகிலும் நேர்மையான அரசியல் தமிழ்நாடில் நிலவ மக்கள் வழிவகை செய்வார்களா? பொதுநல நோக்குடன் தம் இன்னுயிரையும் துச்சமாக மதித்து வெள்ள நீரில் இறங்கியும் படகுகள் விட்டும் பல
மக்களின் இன்னுயிரைக் காத்து, உணவும் உடையும் பெற்றுத் தந்து ஊட்டி உயிர் காத்த தமிழ் இளைய தலைமுறையினர கையில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து அவர்களை வழிநடத்தி தமிழ்நாட்டில் நல்லாட்சி நிலைபெறச் செய்வாரக்ளா?
அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என்று புதுப் புதுப் பெயர்களால் பழைய சுரண்டல் அரசியல்வாதிகள் பலர் அமைக்கும் கூட்டணிகள் கண்டு ஏமாறாமல் புதிய நல்வழியைக் கண்போம். இளைஞர்கள் கையில் எதிர்காலத்தை நம்பி ஒப்படைப்போம். அவர்கள் அன்புடையவர்கள், அறிவுடையவர்கள், திறமையுடையவர்கள், மக்களைப் பெரிதும் மதித்து நடப்பவர்கள், நாணயமானவர்கள்.
இளைய தலைமுறையை வரவேற்போம்! எதிர்காலத்தை வளமானதாக அமைப்போம், நேர்மையைக் கடிபிடிப்போம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வெறும் வாய் ஜாலம் செய்து மானம் மரியாதை
அனைத்தையும் இழந்தாலும் பரவாயில்லை, எப்படியாவது மக்களை ஏமாற்றிக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துப் பெரும் பணம் சேர்ப்போம் எனும் சுயநல நோக்குடையோரை விரட்டியடிப்போம்.
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா
தருமதேவன் கோவிலிலே ஒளி துலங்குதடா மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
தாங்கள் இறுதி சரணத்தை போட தவறி விட்டீர்கள். "எறும்பு தோலை உரித்து பார்க்க யானை வந்ததடா, என் இதயத்தோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா "
பதிலளிநீக்கு