சனி, 20 பிப்ரவரி, 2016

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு

தினம் ஒரு பாடல் -  டிசம்பர் 4, 2015

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

மக்கட்பேறு பொல் பிரிதொரு செல்வம் இவ்வுலகில் கிடையாது. தாம் பெற்ற குழந்தையின் ஸ்பரிசமே பெற்றோருக்கு உடல் வழியாகக் கிடைக்கும் பேரின்பமாகும். அக்குழந்தையில் மழலைச் சொல் கேட்பது செவிக்கு இன்பமாகும். தன் குழந்தை பிறந்து வளர்ந்து உட்கார்ந்து பழகிய நிலையில் த்ந்தை அதன் மடியில் தலை வைத்துப் படுத்து, "நான் தான் உன் குழந்தையாம், எங்கே அப்பாவைத் தாலாட்டித் தூங்க வை" என்று செல்லமாகக் கேட்க அக்குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் அவனது தலையை மெல்லத் தட்டும் பொழுது உண்டாகும் எல்லையே இல்லை. அக்குழந்தை நாளடைவில் வளர்ந்து பெரியவனாகிக் குடும்பத்தைக் காக்கும் காலம் வருகையில் தந்தையும் தாயும் வயது முதிர்ந்து ஓய்வெடுக்கும் காலம் தொடர்ந்து வந்து சேர்கிறது. இதுவே வாழ்வின் நியதி.

அவ்வாறு வயதில் முதிர்ந்த பெற்றோருக்குப் பிள்ளைகள் தாயும் தந்தையும் போல் செயலாற்றிப் பணிவிடை செய்து பெற்றோரைப் பேணிக் காப்பது நம் மரபாகும். அத்தகைய இன்பத்தைப் பெறப் பெற்றோர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதாவது அவர்கள் தம் பிள்ளைகளை முறையாகப் பேணி வளர்த்து ஆளாக்கி, நன்னெறிகளைக் கற்றுக் கொடுத்து, தம் கடமைகளை ஆற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தி வாழ்விக்க வேண்டும். கடமை தவறிய பெற்றோர் பின்னாளில் தம் பிள்ளைகளின் சேவையைப் பெறும் தகுதியை இழக்கின்றனர். இதுவே உலக நியதி. வங்கியில் பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே நமக்கு அவசரத் தேவைக்கு வங்கியிலிருந்து பணம் பெற முடியும். உலக வாழ்வும் வங்கிக் கணக்குப் போன்றதே ஆகும். கொடுத்து வைத்தால் தான் கிடைக்கும். 

பிள்ளைகளின் கடமையாவது பெற்றோர் எந்நிலையிலிருந்தாலும் அவர்களை வயதான காலத்தில் தகுந்த முறையில் பேணிக் காப்பதேயாகும். பெற்றோர் தம் கடமையைச்  செய்யத் தவறி விட்டனர். அதனால் நாம் பெற்றோருக்குப் பிற்காலத்தில் உதவத் தேவையில்லை எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாகாது. காரணம் அத்தகைய மனப்பான்மையே அவர்களது பிள்ளைகளுக்கும் வளர ஏதுவாகித் தம் பெற்றோரைத் தாம் காப்பாற்றாமல் விட்டமைக்கு தண்டனையாய்த் தம் பிள்ளைகளால் கைவிடப்படும் சூழ்நிலை உருவாகக் கூடும்.

இதில் யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. செய்ய வேண்டிய கடமைகளை உரிய முறையில் செய்தால் அதன் பலன் உரிய காலத்தில் உரிய முறையில் கிடைக்கும் என்பதே கருத்து. உலகில் தந்தை, தாய், பிள்ளைகள் இவர்கள் ஒருங்கிணைந்து வாழ்வதே முறையான குடும்ப அமைப்பாகும். அக்குடும்ப அமைப்பைத் தழுவி வாழ்தலே இல்லறமாகும். இல்லறமல்லது நல்லறமன்று. இல்லறம் வளர்ச்சியுறுவதன் அடையாளமே தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமன் முதலான உறவுகள் பல்கிப் பெருகி ஒருவரோடொருவர் உறுதுணையாய் வாழும் பேரின்ப வாழ்வு.


திரைப்படம்: ராமு
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்: பி. சுசீலா
ஆண்டு: 1966

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ?
அள்ளித் தந்த அன்னை சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ?
கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ
கட்டித் தங்கம் என்று கன்னம் தொட்டுக் கொண்டு
ஆசை முத்தம் தந்தேன் ஆரிராரோ

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

பெட்டைக் கிளி கொஞ்சும் பிள்ளைக் கிளி பாடும்
தந்தைக் கிளி அங்கே தேடி வரும்
பெட்டைக் கிளி கொஞ்சும் பிள்ளைக் கிளி பாடும்
தந்தைக் கிளி அங்கே தேடி வரும்
இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும்
என்றும் எங்கள் சொந்தம் மாறாது
இன்பம் என்ற போதும் துன்பம் வந்த போதும்
என்றும் எங்கள் சொந்தம் மாறாது

பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ
பாட்டுச் சொல்லித் தூங்கச் செய்வேன் ஆரிராரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக