புதன், 17 பிப்ரவரி, 2016

பலே பலே பலே தேவா

தினம் ஒரு பாடல் - 2015 நவம்பர் 30

அறியாமை இருள் சூழ்ந்த உலகில் அறிவிருந்தும் அறியாதவர்கள் போல் பெருதற்கரிய மானிடப் பிறப்பெய்திய நாம் பொழுதை வீணாக்கி ஆசை வயப்பட்டு அழியும் பொருட்கள் மேல் கவனத்தைத் திருப்பி வாழ்நாள் முழுதும் வீணாளாகவே கழிக்கிறோம். பெரும்பாலோருக்கு மரணம் வரையிலும் இத்தகைய அற்பப் பொருளாசை போவதில்லை. அத்தகையோர் இறக்கும் பொழுதிலும் இருளிலேயே உழன்று கிடக்கின்றனர். தாம் ஏன் வாழ்ந்தோம் என்றே தெரியாமல், தெரிந்து கொள்ள எவ்வித முயற்சியும் எடுக்காமல் வந்ததும் போனதும் தெரியாமல் அடையாளமின்றி அழிந்து போகும் பெரும்பாலோரில் ஒருவராக இல்லாமல் நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகில் ஏன் பிறந்தோம், நமக்கு விதிக்கப் பட்ட கடமைகள் என்ன, இப்பிறவி வந்துற்றதன் காரணம் என்ன, இதற்குப் பின்னர் நமது கதி என்ன என்பன போன்ற உண்மைகளைக் கண்டறிய முயற்சித்தோமானால் மாயையின் திரை விலகி மெய்ஞ்ஞானம் பிறப்பது உறுதி. 

அத்தகைய மெய்ஞ்ஞானம் எய்திய ஞானியர் தங்கள் வாழ்நாள் உள்ளளவும் தம் தேவைகளைக் கருதாமல் பிறர் நலனிலே அக்கரை கொண்டு சேவை புரிவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர்.  உலக வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்கள் பெரும்பான்மையான மக்களை வெகுவாகப் பாதிப்பது போல் ஞானியரை பாதிப்பதில்லை. காரணம் அவர்கள் அறிவார்கள் இன்ப துன்பங்கள் நிரந்தரமல்ல, தோன்றி மறையும் இயல்பையுடையன என்று. எத்துணை பெரிய இன்பம் வந்தாலும் இத்தகைய ஞானியர் அதனால் தன்னை மறந்து அறிவு மயங்கி சிற்றின்ப நோக்கம் கொண்டலைவதில்லை. மாறாகத் தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பரந்த மனப்பான்மையுடன் தான் பெற்ற இன்பத்தைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு பிறரும் நலமடையப் பாடுபடுகினறனர். அதே போல் எத்துணை பெரும் துன்பம் வந்துற்ற போதும் அதனால் சிறிதளவும் மனச் சோர்வடையாமல் அத்துன்பம் நீங்குதற்குரிய வழியைத் தேடியறிந்து நீக்குவதில் வெற்றியும் பெறுகின்றனர்.

அண்ணல் காந்தியடிகளும், அன்னை தெரசாவும், மஹாகவி பாரதியாரும், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையவர்களும் மற்றும் எண்ணிறந்த ஞானியர்கள் அவதரித்து மக்கள் நலனே வாழ்வாகக் கொண்டு சேவைபுரிந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். வேறு சில சுயநல நோக்கர்கள் இத்தகைய தியாகிகளின் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் விதத்தில் வரலாற்றை மாற்றியமைக்கவும் பொய்ச் செய்திகளைப் பரப்பவும் பெரிதும் முயற்சிக்கின்றனர். இத்தகையோர் கையாளும் ஆயுதம் துவேஷம். சாதி மதத்தின் பெயராலும் ஏழை பணக்காரன் வித்தியாசத்தின் பெயராலும் பிறர் மனதில் வெறுப்புளர்ச்சியை வளர்க்கின்றனர் இத்தகைய சுயநலவாதிகள். இறுதியில் அவர்களது சுயநலம் அவர்களையே அழிப்பதுடன் அவர்கள் காட்டிய தவறான பாதையில் செல்ல விழைவோரையும் அழிக்கின்றது. இதற்கு வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.

பத்தோடு பதினொன்று அத்தோடு நாமும் ஒன்று எனும் போக்கில் செம்மரி ஆட்டுக்கூட்டம் போல் ஒன்று சாய்கின்ற திக்கிலேயே மற்றதும் சாய்வது போல் கண்மூடித்தனமாக உலக மக்களில் பெரும்பாலோர் செய்யும் அற்பப் பொருள் தேடும் தவற்றை விடுத்து மெய்ஞ்ஞானம் பெற விழைவோர் முதற்கண் கடைபிடிக்க வேண்டியது இறைபக்தியே. இறையென்பது இதுவே என்று மதங்கள் வரையரை செய்வது போல் இறையைத் தேட வேண்டியதில்லை. இறை சக்தி இருப்பதையும் அதனால் நாம் கட்டுண்டு இயங்குவதையும் உணர்ந்து அதன்படி நடந்தாலே போதுமானது. நம்மை இயக்கும் எல்லாம் வல்ல இறைசக்தி நம்மை நிச்சயம் கரை சேர்க்கும் எனும் நம்பிக்கையுடன் தன்னையறியும் முயற்சியில் ஈடுபட்டால் ஞானம் பெறலாம்.


தஞ்சை டி.என். ராமையா தாஸ்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

பலே பலே பலே தேவா 
பாரோரறியாருன் மாயா 
பலே பலே பலே தேவா 
பாரோரறியாருன் மாயா இந்தப்
பாரோரறியாருன் மாயா

ஒருவரின் சோகம் ஒருவரின் யோகம்
சர்வமும் உணர்ந்திடும் உனக்குப் பின் மோகம்
அடியார் யாரோ? அறியார் யாரோ?
அடியார் யாரோ? அறியார் யாரோ?
அதையே விதியும் அறியாதையா

பாரோரறியாருன் மாயா

உலகினில் சுகதுக்க ஊஞ்சலிலே தினம்
உனது மாயை விளையாடுதையா
உண்மையில் உன்தன் மாயா லீலையே
உண்மையில் உன்தன் மாயா லீலையே
உணர்ந்தவன் தானே தன்யனையா

பாரோரறியாருன் மாயா

பலே பலே பலே தேவா 
பாரோரறியாருன் மாயா இந்தப்
பாரோரறியாருன் மாயா

1 கருத்து: