நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தன்று தாயின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் அமைந்த ஒரு பாடலைத் தினம் ஒரு பாடலில் தருமாறு வேண்டினார். எனது தற்போதைய பணிச் சுமையாலும் தினமும் வெயில் படுத்தும் பாடு மிகவும் அதிகமானதாலும் தினம் ஒரு பாடல் தினமும் தர இயலுவதில்லை. கூடிய விரைவில் தினமும் வழங்குவேன். தாயின் பெருமையை எண்ணிப்பார்க்க அன்னையர் தினம் ஒன்று போதாது. தாயின் நினைவு சதா சர்வ காலமும் தொடர்ந்து நம் உயிரில் ஒன்றி விளங்குவது அவசியம். இல்லாவிடில் உலகில் நாம் அடையும் துன்பங்களிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.
உலகில் அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட முதல் தெய்வம் தாய். தாயின் அணைப்பில் வளர்ந்த நாம் ஒவ்வொருவரும் இன்றும் என்றும் நாம் படும் துன்பங்களிலிருந்து விடுபடவும் ஆறுதல் பெறவும் நாடுவது பெரும்பாலும் தாயையே ஆகும். ஏதோ காரணத்தால் வலி உண்டாகையில் நம்மையறியாமல் நம் வாய் உதிர்க்கும் சொல் பெரும்பாலும் "அம்மா" என்பதேயாகும். சிலர் "அப்பா" என்றோ "ஆ, ஐயய்யோ" என்றோ சொல்வது சாத்தியமானாலும் அம்மா எனும் சொல்லே அனேகமாக அருமருந்தாக விளங்குகின்றது. நம் ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலும் பிற யாரைக் காட்டிலும் அதிகம் பெருமையடைபவள் தாயாவாள்.
இதனாலேயே திருவள்ளுவர்,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்
என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தாய் இவ்வுலகை விட்டு மறைந்து பூத உடலை விட்டுப் புகழுடம்பு எய்துகையில் ஒவ்வொருவரும் படும் துயரத்துக்கு அளவே இல்லை. அநாதை எனும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் அத்தாய் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் நாளன்று தான் புரியும். அதன் பின்னர் அம்மா எனும் சொல் வாயில் தன்னையறியாமல் பல தருணங்களில் வெளிவருகையில் அந்த அம்மா என்பவள் இவ்வுலகில் தற்போது இல்லையெனும் உண்மையும் மனதில் தைத்து அவள் நினைவில் வாடும் மனம்.
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
திரைப்படம்: தாயின் மடியில்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக