சொல்லுவது எல்லோர்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்ற வள்ளுவன் வாக்கு முக்காலத்துக்கு பொருந்தும் முற்றிலும் உண்மையான கூற்று என்பதற்கு முதல் ஆதாரம், தினம் ஒரு பாடல் என்ற பெயரில் நான் தினந்தோறும் ஒரு பாடலும், அதற்குப் பொருத்தமாக என் உள்ளத்தில் உள்ள கருத்துக்களும் ஒன்று சேர இணைய நண்பர்களுக்கு அளிக்கும் இச் சிறு முயற்சியிலேயே இடையிடையே பல முறை தவறுவதாகும். இவ்வாறிருக்க, கருப்புப் பணத்தையும், அடியாள் பலத்தையும், மேடைப் பேச்சையும், சுவரொட்டிகளையும், சாலை மறியல் முதலான போராட்டங்களையும் கையாண்டு மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வருபவர்கள் ஏழைகளை வாழ வைக்கிறோம் என்று சொல்வதும், வாழ வைத்து விட்டோம், மலிவு விலையில் அரிசி தருகிறோம், இலவசமாகப் பல பொருட்களைத் தருகிறோம் என மார்தட்டிக் கொள்வதும் எவ்வாறு உண்மையாக முடியும்.
இலவமாக எல்லோருக்கும் கிடைத்து வந்த கல்வியையும், மருத்துவ வசதிகளையும் ஏலம் போட்டுத் தனியாருக்கு விற்று அதன் மூலம் சாதாரணக் கல்விக்கும் இலட்சக்கணக்காக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தையும், ஒரு சராசரி மனிதன் தன் ஆயுள் முழுவதும் உழைத்து ஈட்டிய பணம் அனைத்தும் சேர்ந்தாலும் அவன் வயதான காலத்திலோ இடையிலோ ஏதேனும் நோய்க்கு ஆளானால் அதற்குத் தகுந்த மருத்து சிகிச்சை பெறவும் போதாத நிலையையும் இன்று ஆள்வோர் உண்டாக்கியுள்ளனர். அத்துடன் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்ளிட்ட பலர் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை பெறப் பெருந்தோகை தேவை என்பதால் இணையக் குழுமங்கள் வாயிலாகவும் நண்பர்கள் வாயிலாகவும் உதவி பெற்றேயாக வேண்டுமெனும் இக்கட்டான சூழ்நிலை நாட்டில் நிலவுகிறது. இதில் வெட்கக்கேடு என்னவெனில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக எங்கோ ஏதோ ஒருவருக்குக் கல்வியும் மருத்துவ உதவி முதலானவையும் யாரோ சிலரால் அளிக்கப்படுவதை மிகைப்படுத்திக் காட்டி நாட்டில் எங்கும் தருமம் தலைகாப்பது போன்றதொரு பிரமையை இத்தகைய அவல நிலையை உண்டாக்கியவர்களே ஏற்படுத்துவதும், கோடானு கோடி கொள்ளையடித்து விட்டு அவற்றில் சில கோடிகளை சிலருக்கு உதவியாக அளித்து அதன் மூலம் விளம்பரம் தேடுவதுமேயாகும்.
சாக்கடைகள் சுத்தம் செய்வதற்கும், குடி நீர் பெறுவதற்கும் மக்கள் போராடியும் நிறைவேறாமல் அல்லலுறுவது நாட்டு நடப்பாக இருக்கையில் இவ்வாறு ஏழைக்கு உதவுகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து அவர்களது நிழலில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்ட போலித் தலைவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாக்கள் நடத்தப்பெற்று, அவ்விழாவில் பல பிரமுகர்களும் வந்து அத்தலைவர்கள் செய்யாத சாதனைகளைச் செய்ததாகவும், அவர்களுக்கு இல்லாத தயாள குணங்கள் இருப்பதாகவும் ஊரறியப் பொய்யுரைத்து மக்களை முட்டாளாக்கும் நாடகங்களும் அரங்கேறுவது கண்டு சொல்லொணா வேதனை ஏற்படுகிறது.
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் - அவர்
உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன் - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகல் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு - அதை
எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் - இந்த
மானிடர் திருந்தப் பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார் - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக