புதன், 6 ஜனவரி, 2010

சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்

இவ்வுலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. நாமே நமக்கு சொந்தமில்லாத போது பிற பொருட்கள் நமக்கு எவ்வாறு சொந்தமாக முடியும்? இவ்வுண்மையை உணராத மனிதன் ஆணவ மிகுதியால் தன்னிலும் வலிமை குறைந்த சக மனிதரை அடக்கி ஆளும் எண்ணம் கொண்டு பொருளாராதார ஏற்றத் தாழ்வை உருவாக்கி, பொருளற்ற ஏழை எளியோரைப் பிறர் செய்யத் தயங்கும் துப்புறவு முதலிய பணிகளைச் செய்ய வைத்து, நாளடைவில் தீண்டாமை எனும் பேயை உருவாக்கினான். இதனை மனிதர் குலத்துக்கு உணர்த்தி, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சேவை மனப்பான்மை கொண்ட பல ஞானிகள் தங்களது அறிவாலும் அனுபவத்தாலும் கண்டறிந்து உலகுய்யவென்று வகுத்ததுவே இறைத் தத்துவம்.

தீண்டாமை உணர்வினால் பிற மனிதர்களால் இழிகுலத்தவர் என்று கருதித் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் தன் இறை பக்தியால் பிற மனிதர் அனைவரிலும் மேம்பட்டு, இறையருளைப் பெற்ற கதையே நந்தனார் சரித்திரம். இதனை "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை" என்ற அழகிய பாடல் தொகுப்பாக இயற்றி நமக்களித்தவர் கோபாலகிருஷ்ண பாரதி. ஒரு கிராமத்தில் ஒரு நிலச்சுவான்தாரரிடம் பணியாளாக இருக்கும் நந்தன் மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் குடிகொண்டிருக்கும் நடராஜப் பெருமானுக்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாட்டைக் காண விரும்ப, "மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?" என்று அவனது எஜமானர் அவரைத் தடுக்க, நந்தன் மீண்டும் மீண்டும் மன்றாடி சிதம்பரம் போக அனுமதி வேண்ட, அவனை எவ்வாறாகிலும் தடுத்து நிறுத்தவும் அதே சமயம் அவனது நச்சரிப்பிலிருந்து விடுபடவும் எண்ணிய எஜமானர் ஒரே நாளில் அவரது நிலத்தில் விளைந்திருந்த பயிர்களையெல்லாம் அறுவடை செய்தால் அவரை சிதம்பரம் போக அனுமத்திப்பதாக வாக்களிக்க, செய்வதறியாது நந்தன் திகைத்து நிற்கவும், இறைவனருளால் விடியுமுன்னரே அனைத்துப் பயிர்களும் அறுவடை செய்யப்பட்டிருக்கக் கண்டு ஆண்டவனின் மகிமையை எண்ணி வியக்கிறார்.

வேறு வழியின்றித் தன் வாக்குறுதியைக் காக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட எஜமானரும் அவரை அனுமதிக்க, நந்தனார் தில்லை நடராஜரைத் தரிசித்து முக்தி பெற்றதாக நந்தனார் சரித்திரம் கூறுகிறது.

வாருங்கள், நந்தனார் கண்டு மகிழ்ந்த சிவலோக நாதனை நாமும் தரிசிப்போம்.


சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்


திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: எம்.எம். தண்டபாணி தேசிகர்
ஆண்டு: 1942

சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்

அற்ப சுகத்தை நினைந்தோம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம் - நாம்
அற்ப சுகத்தை நினைந்தோம் - அரன்
திருவடிகளை மறந்தோம்

கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கற்பித மாயா ப்ரபஞ்சமீதை
கானல் ஜலம் போலே எண்ணி

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோக நாதனைக் கண்டு சேவித்திடுவோம்

ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம் - நாம்
ஆசைக் கடலில் விழுந்தோம் - நல்
அறிவுக்கறிவை இழந்தோம்

பாசமகல வழி தேடாமல்
எமப் பாசமகல வழி தேடாமல்
பரதவிக்கும் பாவியானோம்

சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக