தினம் ஒரு பாடல் - ஏப்ரல் 20, 2016
"தாயிற் சிறந்த கோவிலுமில்லை,
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை."
என்பது தமிழ் மக்கள் தொன்று தொட்டு வணங்கிக் கடைபிடிக்கும் நன்னெறியாகும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் தாய் தந்தையரே கண்கண்ட தெய்வங்கள் என்பதை மறுப்போர் மானிடப் பிறவியாக இருப்பினும் மானிடர்க்குறிய அறிவை அடையாதவரே என்பதில் ஐயமில்லை. பத்து மாதம் தன் கருவில் சுமந்து, பல வித அல்லல்பட்டு அக்கருவைக் காத்து. மறு பிறவி என்று சொல்லுமளவுக்கு மரணத்தோடு போராடும் நிலையில் பிரசவ வேதனையை அனுபவித்து அரும்பாடு பட்டு அப்பிள்ளையைப் பெறுகிறாள் தாய். அத்தாய் கருவுற்றிருக்கும் காலம் முதல் பிள்ளை பிறந்து வளர்ந்து வாழும் காலம் முழுவதிலும் அவளுக்கு ஒரு சுமைதாங்கியாக விளங்குவதோடு அவள் பெற்ற பிள்ளையை அறிவிற் சிறந்தவனாகத் தன் செல்வம் முழுவதையும் ஒரு சிறு தயக்கமுனின்றிச் செலவழித்து ஆளாக்கிக் காக்கிறான் தந்தை.
ஒருவருக்குத் தன் தாய் தந்தை செய்த அளவு உபகாரம் செய்தோர் இவ்வுலகிலும் கிடையாது, ஈரேழு பதினாலு லோகங்களிலும் கிடையாது. தாய் தந்தையருக்கு அடுத்தபடியாக வணங்கிப் பணிய வேண்டியவர் குரு. அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பதால் குருவும் தாய் தந்தையர்க்கீடாகக் கருதி மரியாதை செய்யத் தக்கவரே என்பது சான்றோர் வகுத்த நெறி. தெய்வம் நமது கண்களுக்குத் தெரிவதில்லை, பிற புலன்களாலும் உணரப்படுவதில்லை, ஆனால் அறிவினால் அறியப்படுவது நிச்சயம். தெய்வத்தை அறிய மிகத் தெளிந்த சிந்தையும் பரந்த ஞானமும் அவசியம். அத்தகைய ஞானத்தை ஒருவருக்குத் தருவோர் தாய், தந்தை, குரு ஆகிய மூவருமே ஆவர். தெய்வம் நம்மையும் நம் தாய் தந்தையரையும் குருவையும் காப்பதனால் தெய்வத்துக்கு வந்தனம் செய்வது இன்றியமையாத கடமையாக வகுக்கப்பட்டிருக்கிறது.
இதன் அடிப்படையிலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தியுள்ளனர் நம் அறிவிற் சார்ந்த முன்னோர்கள். கல்வி கற்றுத் தேறுவதோடு குருவின் தொடர்பு முடிந்து விடுகிறது. இடையிடையே குருவை வாழ்வில் சந்திக்க நேர்ந்தபோதும் எவரும் குருவுடன் தொடர்ந்து வாழ்நாளெல்லாம் வாழ்வதில்லை ஆனால் தாய் தந்தையரோடு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தே வாழ்கிறோம். சிலர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகத் தாய் தந்தையரைப் பிரிந்து வாழ நேரிடினும் அவர்களுடன் எவ்விதத்திலாவது தொடர்பு வைத்து அவர்களோடு அளவளாவி மகிழ்தலே வாழ்வில் பெரும் மகிழ்ச்சிக்குரிய செயலாக நாம் கருதுகிறோம்.
ஒரு சிலர் தம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையருடன் சண்டையிட்டுக் கொண்டு மனைவியின் துர்ப்போதனையினாலோ பிறரது தூண்டுதலாலோ, சுயநலம் காரணமாகவோ பிரிந்து வாழ்வதுமல்லாமல் தாய் தந்தையருக்குரிய மரியாதையையும் செலுத்த மறந்து உன்மத்தராய் வாழ்கின்றனர். அத்தகைய வாழ்வும் ஒருவாழ்வா எனில் இல்லை என்பதே தீர்வு. தன் தாய் தந்தையருக்கு ஒருவன் உரிய மரியாதையளித்துப் பேணிக்காக்கத் தவறுகையில் அவன் வயது முதிர்ந்து உடல் நலம் குன்றி வாடும் காலத்தில் அவனுக்கு அவனது மக்களோ மற்றவரோ உதவுவது சாத்தியமில்லை. தாய் தந்தையரை மதியாதவனை உலகம் தூற்றும். அவனுடன் சேர்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படி யாராகிலும் சேர்ந்து வாழ்ந்தாலும் அது அவனது செல்வளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இருக்கக்கூடுமேயன்றிப் பாசத்தினால் இருக்க இயலாது.
தாய் தந்தையரிடமிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் அன்பும் பாசமும் வேறு எந்த உயிரிடமிருந்தும் கிடைக்காது என்பது அறுதியிட்டு உறுதியாக நம் முன்னோர்கள் அனைவரும் உணர்ந்து உபதேசித்த உண்மைத் தத்துவமாகும். பெரும் புலவர்களும் இத்தத்துவத்தையே போதிக்கின்றனர். தாய் தந்தையரிடமிருந்து சொத்து சுகத்தை மட்டும் எதிர்பார்த்து வாழும் மனிதர்கள் அறிவு பெறாதவர்களே என்பதே உண்மை. தாய் தந்தையரின் ஆசி இருந்தால் இவ்வுலகையே தன் வசமாக்கிக் கொள்ளுமளவு அறிவும் திறனும், வாய்ப்பும் வசதியும் உருவாகும் என்பது நிச்சயம். அவர்களாக விருப்பப்பட்டு மனமுவந்து அளிக்கும் பொருளை மட்டுமே ஏற்றல் ஒருவருக்கு சிறப்பைத் தருவதாகும். அதை விடுத்து அவர்களை வயதான காலத்தில் சொத்து சுகத்திற்காக மன வருத்தம் கொள்ளச் செய்வது அருவருக்கத்தக்க செயலேயாகும்.
பொன்னும் பொருளும் சொத்தும் சுகமும் நிரந்தரமற்றவை ஆனால் தாய் தந்தையரின் அன்பும் ஆசியும் நித்தியமானவை. தாய் தந்தையர் தம் உடலை விட்டு உயிர் பிரிந்து இவ்வுலக வாழ்வைத் துறந்த பின்னரும் அவர்கள் வழங்கிய ஆசி நம்மைக் காக்கும். அவர்களது ஆசியால் வாழ்வில் வரும் எத்தகைய பெருந்துன்பத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் சக்தியை நாம் பெறுவோம். எனவே நாம் நம் வாழ்நாளுள்ள வரை நம் தாய் தந்தையரைப் பெரிதும் மதித்துப் போற்றி வணங்குவதுடன் நம்மாலியன்ற சேவைகளை அவர்களுக்குச் செய்வது அவசியம். அத்துடன் அவர்கள் இறந்த பின்னர் செய்ய வேண்டிய பித்ருக் கடன்களையும் முறைப்படி செய்வது அவசியம். அப்பொழுதுதான் அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்பது நம் முன்னோர் காட்டிய நெறி. அவ்வாறு செய்ய வேண்டிய ச்ராத்தம் முதலான பித்ருக் கடன்களைச் செய்வதைத் தவிர்த்து முதியோர் காப்பகங்களில் உள்ள முதியோருக்கு அன்னதானம் செய்கிறேன் என்பதும். எவருக்கேனும் பொருளுதவி செய்வதும் சோம்பேரித்தனமேயல்லாது தர்மமாகாது. தாய் தந்தையர் இவ்வுலகில் வாழும் வரை அவர்களுக்குரிய பணிவிடைகளைச் சிறிதும் குறையில்லாமல் செய்வதுடன் அவர்கள் இறந்த பிறகு செய்வதற்குரிய பித்ருக் கடன்களையும் செவ்வனே செய்தல் மிகவும் அவசியம்.
தாய் தந்தையர் உயிரோடிருக்கையில் அவர்களுக்கு சேவை செய்யாமல் அவர்கள் மேல் அன்பு செலுத்தாமல் அவர்கள் இறந்த பிறகு செய்யும் சடங்குகள் யாவும் வீணே. எனவே அவர்கள் உயிரோடிருக்கையிலேயே அவரக்ள் மனம் குளிரும் விதத்தில் நடந்துகொண்டு அவர்களது ஆசியைப் பெறுதலே அறிவுடைமை ஆகும்.
திரைப்படம்: ஹரிதாஸ்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1944
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அன்னையும் தந்தையும் தானே பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே
தாயினும் கோவிலிங்கேது
தாயினும் கோவிலிங்கேது ஈன்ற
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
தந்தை சொல் மிக்கடதோர் மந்திரமேது
சேயின் கடன் அன்னை தொண்டு
சேயின் கடன் அன்னை தொண்டு புண்ய
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
தீர்த்தமும் மூர்த்தித் தலம் இதில் உண்டு
அன்னையும் தந்தையும் தானே
தாயுடன் தந்தையின் பாதம் - என்றும்
தலை வணங்காதவன் - நாள் தவறாமல்
கோவிலில் சென்று என்ன காண்பான்? - நந்த
கோபாலன் வேண்டும் வரந்தருவானோ?
பொன்னுடல் தன் பொருள் பூமி
பொன்னுடல் தன் பொருள் பூமி - பெண்டு
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வும்
அன்னை பிதா இன்றி ஏது?
அன்னை பிதா இன்றி ஏது? - மரம்
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
ஆயின் விதையின்றிக் காய் கனி ஏது?
அன்னையும் தந்தையும் தானே - பாரில்
அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
அன்னையும் தந்தையும் தானே தெய்வம்